அளவுக்கு மீறி புகழ்தலைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. பெரும்பாலும் அளவுக்கு மீறி புகழ்தலுக்குப் பின்னால் ஏதேனும் உள்நோக்கம் மறைந்திருக்கும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் ஏதேனும் தேவையைப் பெறும் பொருட்டே இவ்வாறான துதிபாடலில் அவன் ஈடுபடுகிறான். பாராட்டுவதை இஸ்லாம் தடுக்கவில்லை. பாராட்டுவது விரும்பத்தக்கது. அது நாம் விரும்பக்கூடிய மனிதனுக்கு அளிக்கக்கூடிய ஊக்கம். சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள்வரை அனைவரும் பாராட்டப்படுவதை விரும்பக்கூடியவர்கள்தாம். மனிதர்களிடத்தில் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பது அடிப்படையான நோக்கமாக அல்லாமல் உபரியான ஒரு நோக்கமாக இணைந்து கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை என்று நினைக்கிறேன். அதுவே அடிப்படையான நோக்கமாக மாறுவதைத்தான் இஸ்லாம் வெறுக்கிறது.
புகழடைய வேண்டும் என்பது ஒரு வகையான போதை. ஒரு கட்டத்தில் அறிவு அதனை பொய்யென நம்பினாலும் மனம் விடாப்படியாக அதற்கு அடிமையாகி விடுகிறது. விளைவாக, தாம் செய்த சிறிய செயல்களுக்காக அதிக அளவில் புகழப்பட வேண்டும் என்றும் தாம் செய்யாத செயல்களுக்காகவும் தாம் புகழப்பட வேண்டும் என்றும் மனம் விரும்ப ஆரம்பித்து விடுகிறது. அவர்கள் செல்வந்தர்களாக இருப்பின் தங்களைப் புகழக்கூடியவர்களை கூலிகொடுத்து உருவாக்குகிறார்கள். சிலர், நான் உன்னைப் புகழ்ந்தால் நீ என்னைப் புகழ வேண்டும் என்றும் மறைமுக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். சிலர் எப்போதும் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டு திரிகிறார்கள். சுயமோகத்தில் ஊறித் திளைக்கிறார்கள்.
அதிகமாக புகழப்படும் பிம்பங்கள் நமக்கு ஒரு வகையான எரிச்சலை அளிக்கின்றன. சிலர் அந்த பிம்பங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிலர் அந்த பிம்பங்களை தகர்ப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் மனித மனம் குரூரமான முறையில் ஆனந்தம் அடையக்கூடியது. அது இப்படிப்பட்டவர்களின் வீழ்ச்சியில் ஆனந்தம் அடைகிறது.
உங்களின் வணக்க வழிபாடுகளை, நற்செயல்களை இறைவனுக்காக மட்டுமே ஆக்கிக் கொள்ளுங்கள் என்கிறது இஸ்லாம். நாம் சுயமோகிகளை வெறுக்கிறோம். ஆனால் இறைவனுக்காக செயல்படக்கூடியவர்களை விரும்புகிறோம். சில சமயங்களில் புகழ் விரும்பிகளை புகழ மறுக்கிறோம். வேண்டாம் என்று ஒதுங்கிச் செல்பவர்களை விடாப்படியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இப்படித்தான் நம் இயல்பு படைக்கப்பட்டிருக்கிறது.
