ஒரு விசயத்தை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள் எனில் அதனை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் உறுதியான, தெளிவான குரலில் உங்களால் முன்வைக்க முடிந்தால் அது உங்களைச் சுற்றியுள்ளவர்களிடத்திலும் மற்றவர்களிடத்திலும் தன்னியல்பாகச் சென்றடைந்து விடும். உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தை உள்ளங்களைச் சென்றடையும் என்பது இங்கு செயல்படும் விதி. அந்த வார்த்தையில் தெளிவும் உறுதியும் இருக்கும்பட்சத்தில் அது பல உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும்.
நாம் மூடர்கள் என்று கருதுபவர்கள்கூட மக்களிடத்தில் தாக்கம் செலுத்தும் மனிதர்களாக ஆகிவிடுவது இதனால்தான். அவர்கள் கூறும் விசயத்தை அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்ற ஒரு தகுதி அவர்களின் கொள்கைகளுக்கு மக்களிடத்தில் ஒரு ஏற்பை உண்டாக்கி விடுகிறது. சொல்லையும் செயலையும் ஒருசேர முன்வைக்கும் அழைப்பு மக்களிடத்தில் மிக வேகமாகப் பரவும்.
உங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் இடைவெளி குறைவாக இருந்தால் உங்களின் அழைப்பு மக்களிடத்தில் மிகப் பெரிய அளவில் தாக்கம் செலுத்தும். மனிதர்கள் முன்மாதிரிகளை விரும்புகிறார்கள். நீங்கள் சொல்லும் விசயம் சரியானதா, தவறானதா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் சொல்லும் விசயத்தை நீங்கள் நம்புகிறீர்களா? அதற்காக உங்களால் வாதிட முடியுமா? அதனடிப்படையில் உங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டீர்களா? என்பதைப் பொறுத்துதான் அது மக்களிடத்தில் தாக்கம் செலுத்தும்.
இஸ்லாமிய அழைப்பாளர்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள் இஸ்லாம் குறித்து, அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து மனித சமூகத்திற்கு வழங்கப்பட்ட மகத்தான அருட்கொடை என்பது குறித்து சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெளிவாகவும் உறுதியாகவும் அறிந்திருக்க வேண்டும். குர்ஆனோடு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தாமல் இந்த தெளிவையும் உறுதியையும் பெற முடியாது. இந்த அறிதல் நிச்சயம் அவர்களின் சொல்லில், அவர்களின் உடல் மொழியில், அவர்களின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கும்.
இப்படிப்பட்டவர்கள் வெளிப்படையாக மக்களை அழைக்காவிட்டாலும் அவர்களின் இருப்பே ஒரு அழைப்பாகத்தான் அமையும். வெறுமனே தங்களின் இருப்பைக் கொண்டு மக்களை ஈர்க்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். பெரிய அளவில் பிரச்சாரத்தை முன்வைத்தும் மக்களை ஈர்க்காத மனிதர்களும் இருக்கிறார்கள்.
