வார்த்தைகள்

You are currently viewing வார்த்தைகள்

வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு பலம்! அதுவும் உரியவர்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அசுர பலம் கொண்டவையாக மாறிவிடுகின்றன. பயமும் பதற்றமும் கவலையும் உள்ளத்தின் நோய்கள். அவை உடலில் நோய்களை ஏற்படுத்தும் வலிமையான நோய்கள். நம்பிக்கையூட்டும், ஆறுதலளிக்கும் வார்த்தைகள் பயத்தை, பதற்றத்தை, கவலையைப் போக்கி விடுகின்றன. இந்த வகையில் வார்த்தைகள் அற்புதமான நிவாரணிகள்.   

பயமூட்டும் வார்த்தைகள், பயத்தைப் போக்கும் வார்த்தைகள், கவலையூட்டும் வார்த்தைகள், கவலையைப் போக்கும் வார்த்தைகள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வார்த்தைகள், மனதின் கவலைகளுக்கு இதமான ஒத்தடமாக அமையும் வார்த்தைகள், உள்ளங்களைக் கொள்ளையடிக்கும் வார்த்தைகள், அமிலமாக வீசப்படும் வார்த்தைகள்… மனிதர்களிடமிருந்து வெளிப்பட்டும் வார்த்தைகளில்தான் எத்தனை வகைகள்!

நம் அறிவுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளோ ஆறுதல் வார்த்தைகளோ தேவையில்லை. ஆனால் நம்முடைய மனதுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் ஆறுதல் வார்த்தைகளும் அவசியம். அவை நமக்கு ஊக்கமளிக்கின்றன, நம்பிக்கையூட்டுகின்றன, நம் காயங்களுக்கு ஒத்தடமாக அமைகின்றன. நாம் நம்முடைய உறவுகளிடமிருந்து, நட்புகளிடமிருந்து, நம் நலம்விரும்பிகளிடமிருந்து நம்பிக்கையூட்டும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளையும் விரும்புகிறோம். நாம் அவர்களிடம் மனம்திறந்து பேச விரும்புகிறோம். மனதில் உள்ளதை கொட்ட விரும்புகிறோம். ஆறுதலாக ஓரிரு வார்த்தைகளை கேட்க விரும்புகிறோம் குறைந்தபட்சம் அவர்கள் நம் பேச்சுகளை காதுகொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் பார்ப்பதும் தர்மம் என்கிறார்கள் நபியவர்கள். அந்த மலர்ந்த முகம் அவனுக்குள்ளும் மலர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதனிடம் அவனுக்கு நம்பிக்கையூட்டும் இனிய வார்த்தைகளைக் கூறுவது அவனுக்குச் செய்யும் பேருதவி. எதிர்மறையாகப் பேசி அவனுடைய நம்பிக்கையை சீர்குலைப்பது அவனுக்குச் செய்யும் பெரும் கெடுதல். நல்ல மனிதர்கள் மலர்ச்சியை, மகிழ்ச்சியைப் பரப்புகிறார்கள். எதிர்மறையான மனிதர்கள் பயத்தையும் பதற்றத்தையும் கவலையையும் பரப்புகிறார்கள்.

நம் வாழ்க்கையில் வெளிச்சமூட்ட, நமக்கு வழிகாட்ட சில வாசகங்கள் போதுமானவை. நம்மிடம் சொல்லப்படும், நாம் கேட்கும் எல்லாவற்றையும் நாம் நினைவில்கொள்வதில்லை. ஆனாலும் சில வாசகங்கள் நம்முள் ஆழமாக வேரூன்றி விடுகின்றன. வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது கலங்கரை விளக்காக நின்று வழிகாட்டுகின்றன. எல்லாவற்றையும் நாம் கேட்டாலும் மனம் தனக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மற்றவற்றை அது மறந்து விடுகிறது அல்லது அவற்றைக் குறித்து லட்சியம் செய்யாமல் இருந்து விடுகிறது. இந்த வகையில் நல்ல வார்த்தைகள் மதிப்பு மிக்கவை. அவை தொடர்ந்து வாசிக்கப்படவும் கேட்கப்படவும் வேண்டும்.  

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply