தேவையற்ற பயம்

You are currently viewing தேவையற்ற பயம்

நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருந்து விட்டால் அடுத்து ஒரு துன்பம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. என்னுடைய இந்த பயம் எதிர்மறைச் சிந்தனையின் விளைவா?

மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் மாறிமாறி வரக்கூடியவை. மகிழ்ச்சிக்குப் பிறகு துன்பம் வரலாம். துன்பத்திற்குப் பிறகு மகிழ்ச்சி ஏற்படலாம். மகிழ்ச்சியுடன் துன்பமும் இருக்கலாம். துன்பத்துடன் மகிழ்ச்சியும் இருக்கலாம். வெளிப்படையாகப் பார்க்கும்போது மகிழ்ச்சியும் துன்பமும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பவையாகத் தோன்றினாலும் உண்மையில் அவை நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. அவை நாம் அறியாத புறத்திலிருந்து வருகின்றன. துன்பங்களிலிருந்து நாம் தப்ப முடியாது. ஆனால் அவற்றை எதிர்கொள்ள முடியும்.

மகிழ்ச்சியும் துன்பமும் நமக்கு வரக்கூடிய சோதனைகள் என்று இஸ்லாம் கூறுகிறது. இரு நிலைகளிலும் நாம் படைப்பாளனை, அருட்கொடையாளனை நினைவுகூர வேண்டும். மகிழ்ச்சி நம்மை கர்வத்தில், நம்மால் எதுவும் செய்ய முடியும் என்ற மிதப்பில் ஆழ்த்தி விடக்கூடாது. நாம் மகிழ்ச்சியின்போது நமக்கு மகிழ்ச்சியளித்த அருட்கொடையாளனை மறந்துவிடக்கூடாது. அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டும். நம்முடைய நன்றி செலுத்துதல் நம்முடைய மகிழ்ச்சியை அதிகரிக்கும். மனிதர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியில் இறைவனை மறந்து விடுகிறார்கள். ஆனால் நம்பிக்கையாளர்கள் அப்படியல்ல.

துன்பம் நம்முடைய இயலாமையை நினைவூட்டுகிறது. அது இறைவனின் பக்கம் நம்மை திருப்புகிறது. அது நம்மை இறைவனின் பக்கம் திருப்ப வேண்டும். மனிதன் தன் இயலாமையை உணர்வது ஞானம். துன்பத்தை பொறுமையுடன் கடந்து செல்லுதல்தான் ஒரு நம்பிக்கையாளன் செய்ய வேண்டியது. அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை, நிம்மதியான வாழ்க்கையை கேளுங்கள். ஆனாலும் நோயோ துன்பமோ வந்தால் பொறுமையுடன் எதிர்கொள்ளுங்கள். சிரமத்துடன் இலகுவும் இருக்கும். துன்பத்துடன் அதனை எதிர்கொள்வதற்கான மனநிலையும் உருவாகி விடும். நீங்கள் கைவிடப்பட மாட்டீர்கள். ஆனால் உங்களின் எதிர்மறைச் சிந்தனையையும் தன்னிரக்க புலம்பல்களையும் நீங்கள் கைவிட வேண்டியிருக்கிறது. அவை உங்களின் நிம்மதியைக் கெடுத்து விடும். அல்லாஹ்வின் விசயத்தில் நல்லெண்ணம் கொள்வதுதான் நம்பிக்கையாளனின் பண்பு.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply