பெரும் பெரும் துன்பங்களை எல்லாம் எளிதாகக் கடந்தவர் அவர். அவரது மனதில் இருந்த வெறி தடைகள் எல்லாவற்றையும் துச்சமென நினைத்து அவரைக் கடக்க வைத்தது. அவர் அடைய நினைத்த எல்லையை ஓரளவுக்கு அடைந்து விட்டார். மனதில் முன்னர் இருந்த விடாப்படியான ஆசை அல்லது வெறி அடங்கிவிட்டது. மனம் சமநிலைக்குத் திரும்பிவிட்டது.
இப்போது அவர் எதிர்பாராத இன்னொரு சிக்கலை அவர் எதிர்கொள்கிறார். மனம் சின்ன சின்ன விசயங்களுக்கும் பாதிப்படைகிறது. சக மனிதர்களால் ஏற்படும் சிறுசிறு தொந்தரவுகளைக்கூட பெரும் தொந்தரவுகளாக மனம் கருதுகிறது. சட்டென கவலையடைகிறார், உணர்ச்சிவசப்படுகிறார், கோபப்படுகிறார். பெரும் பெரும் துன்பங்களை எளிதாகக் கடந்த என்னால் ஏன் இப்போது சிறு சிறு பிரச்சனைகளைக்கூட கடக்க முடியவில்லை? என் மனம் பலவீனமடைந்துவிட்டதா? இவை இப்போது அவர் முன்னால் இருக்கும் கேள்விகள்.
இந்த அவர் என்பவர் நானாகவும் இருக்கலாம். இதே பிரச்சனையை என்னிடம் முன்வைத்த வேறு பலராகவும் இருக்கலாம். இங்கு அதுவல்ல முக்கியம். இது ஒரு மனநிலை என்பதுதான் நான் சொல்ல வருவது. இந்த மனநிலையை பலர் கடந்து வந்திருக்கக்கூடும்.
போரில் மூர்க்கமாக ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சட்டென எதிர்பாராத ஒரு திருப்பத்தில் போர் முடிந்தவுடன் அந்த மனநிலையிலிருந்து வெளியேற முடியாமல் குடியிலும் களியாட்டத்திலும் மூழ்கியதாக எங்கோ படித்த நினைவு. மனம் எல்லாவற்றுக்கும் ஏற்ப வளைந்து கொடுக்கிறது. ஒவ்வொன்றுக்கும் அது பழகிவிடுகிறது. மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களும் சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பெரும் பாரங்கள் எதிர்கொள்ளும் மனம் ஒரு கட்டத்தில் களைப்படைந்து விடுகிறது. அது தன் பாரங்களை இறக்கி வைக்கும் சூழலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இறக்கி வைத்தவுடன் அது ஓய்வெடுக்கத் தொடங்குகிறது. அதற்குப் பிறகு சிறு சிறு பிரச்சனைகள்கூட அதற்கு பெரும் பாரங்களாகத் தெரிகின்றன. இந்த இடத்தில் அது ஒரு சமநிலைக்குலவு போன்று தெரியலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அல்லது பெரும் பெரும் பிரச்சனைகளை அது எதிர்கொண்டிருந்தாலும் அவற்றால் பாதிப்பும் அடைந்திருக்கிறதுபோலும். அந்தப் பாதிப்பு வெளியே தெரியாமல் இருந்து மனம் சமநிலைக்குத் திரும்பியவுடன்தான் தெரிய வருகிறதுபோலும்.
இந்தக் காலகட்டம் எளிதாகக் கடக்க முடியுமான காலகட்டம்தான் என்று நான் கருதுகிறேன். இந்தக் காலகட்டத்தில் எதிர்மறையாகப் பேசும் மனிதர்களிடமிருந்தும் பெரும் பெரும் பொறுப்புகளிலிருந்தும் அரசியல் செயல்பாடுகளிலிருந்தும் விலகியிருப்பது நலம் என்று கருதுகிறேன். திக்ரும் பிரார்த்தனையும் இதனைக் கடப்பதற்கு பெருமளவில் உதவி புரியும் என்பது என் அனுபவப்பார்வை. அவை மனதை ஆற்றுப்படுத்தும் வல்லமைமிக்கவை. ஆச்சரியமான முறையில் மனதில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. இந்தக் காலகட்டத்தில் ஆன்மீக, மனநிறைவுதரும் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்வது பெருமளவில் பலன்தரக்கூடியது என்று கருதுகிறேன்.
