எந்தவொரு அறிவுரையும் சொல்லப்படாமல் இல்லை. அத்தனை அறிவுரைகளும் மனிதர்களால் சொல்லப்பட்டு விட்டன, தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. ஆனாலும் சிலரிடமிருந்து அவை வெளிப்படும்போது நம்மை ஈர்க்கின்றன. அவற்றால் நாம் கவரப்படுகிறோம். அவை நமக்குப் புதியவையாகத் தெரிகின்றன. அவை பின்பற்றப்பட வேண்டியவை என்று நாம் எண்ணுகிறோம்.
அறிவுரை உரிய மனிதனிடமிருந்து வெளிப்பட்டால் அந்தச் சமயத்தில் நம்முடைய உள்ளமும் அதைப் பெறுவதற்கு தயார் நிலையில் இருந்தால் அந்த அறிவுரை நமக்குள் தாக்கம் செலுத்துகிறது. அது பயனளிக்கும் அறிவுரையாக மாறுகிறது. சடங்குத்தனமாக வெளிப்படும் அறிவுரை நமக்குள் எந்த தாக்கமும் செலுத்துவதில்லை. அது அலங்காரமான சொற்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் சரியே. அதிகபட்சம், நாம் அந்த அறிவுரையை ரசிக்கிறோம். அவ்வளவுதான். அலங்காரமான சொற்களைப் பயன்படுத்தும் தொழில்முறைப் பேச்சாளர்கள் நமக்கு மிகச் சிறந்த கேளிக்கையாளர்கள். கேளிக்கையாளர்களாக மாறும் தொழில்முறைப் பேச்சாளர்கள் மக்களால் விரும்பப்படுவார்கள். அவர்களுக்கான ரசிகர் பட்டாளமும் உருவாகி விடும். ஆனால் அவர்களைக் கொண்டு என்ன மாற்றம் நிகழ வேண்டுமோ அது நிகழாது.
உண்மையான அக்கறையோடும் கவலையோடும் கூறப்படும் அறிவுரை நிச்சயம் தாக்கம் செலுத்தும். கேட்பவர்களால் அந்தச் சமயத்தில் அது விரும்பப்படாவிட்டாலும் ஏதோ ஒரு நாளில் அந்த அறிவுரை அவர்களால் நினைவு கூரப்படும். உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தை உள்ளங்களைச் சென்றடையும் என்பது இங்கு செயல்படும் நியதிகளுள் ஒன்றுதான். இஸ்லாமிய அழைப்பாளர்கள் எந்தச் சமயத்திலும் மக்களின் விருப்பங்களுக்குத் தீனிபோடும் கேளிக்கையாளர்களாக மாறிவிடக்கூடாது. அது அவர்களின் நோக்கத்தை சிதைத்து அவர்களை வேறு பாதையில் கொண்டு சேர்த்திடும்.
இஸ்லாம் சொல்லக்கூடிய அறிவுரைகள் நினைவூட்டல்களே. மனிதர்கள் எளிதில் மறந்து விடுவார்கள் என்பதாலும் அவர்கள் இச்சைகளால் மிகைக்கப்படுவார்கள் என்பதாலும் அவர்களுக்கு நினைவூட்டல்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனாலும் அவை உரிய நேரத்தில், தகுதியான மனிதர்களால் முன்வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை பயனளிப்பவையாக மாறும். அடிக்கடி முன்வைக்கப்படும் அறிவுரைகள் எரிச்சலூட்டுபவையாக மாறி விடுகின்றன. ஆகவே அவற்றுக்கு அளவும் நேரமும் உரிய மனிதர்களும் மிக மிக முக்கியம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நான் நிறைய தினங்களில் இது குறித்து சிந்தித்தது உண்டு ஏன் உபதேசங்கள் இந்த உம்மத்திற்கு பயன்படுவதில்லை என்று உண்மைதான் அழைப்பாளர்கள் கேளிக்கையாளர்களாக மாறிவிட்டால் எந்தப் பயனும் இல்லை
மிகவும் அருமையான பதிவு பயனுள்ள கருத்து
இறைவன் உங்களுக்கு மென்மேலும் கல்வி ஞானத்தை அறியப்படுத்துவானாக
வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹ்.