இரண்டு வகை வாசிப்பு இருக்கிறது. ஒன்று, மேலோட்டமான வாசிப்பு. இன்னொன்று ஆழமான வாசிப்பு. மேலோட்டமான வாசிப்பு என்பது மிக வேகமாக வாசித்துக் கொண்டே செல்வதும் வாசித்தவற்றை அசைபோடாமல் இருப்பதும் ஆகும். ஆழமான வாசிப்பு என்பது நிறுத்தி நிதானமாக வாசிப்பதும் வாசித்தவற்றை அசைபோடுவதும் ஆகும். ஆழமான வாசிப்பு சிந்தனையை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆழமான வாசிப்பு நம்மை சிந்திக்கத் தூண்டும். எவ்வளவு அதிகமாக வாசிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு நிதானமாக வாசிக்கிறோம் என்பதே முக்கியம்.
ஒரு புத்தகம் தகவல்களை மட்டுமே உள்ளடக்கி இருப்பின் மேலோட்டமான வாசிப்பு போதுமானது. ஆனாலும் சில தகவல்கள் அறிதல்களாக மாறும் தன்மை கொண்டவை. சில தகவல்கள் நமக்குள் தாக்கம் செலுத்தி நம்மிடமிருந்து வேறு வகையான எழுத்துகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. அந்த இடங்களில் மட்டும் நிதானம் தேவைப்படுகிறது.
திருக்குர்ஆனுக்கு ஆழமான வாசிப்பு அவசியமாகிறது. அதன் வார்த்தைகளும் வாசகங்களும் செறிவுமிக்கவை என்பதாலும் அவை என்றும் வற்றாத ஞான ஊற்று என்பதாலும் ஆழமான வாசிப்பு இன்றி அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. நிறுத்தி நிதானமாக வாசியுங்கள் என்றே அல்முஸம்மில் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் தூதருக்கும் அவர் வழியாக நமக்கும் கட்டளை இட்டுள்ளான்.
திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமலான் மாதத்தில் நாம் குர்ஆனை எத்தனை முறை முடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. பொருள் புரியாமல் ஓதப்படுவதற்காக அல்லாஹ் திருக்குர்ஆனை அருளவில்லை. நம்முடைய குர்ஆன் வாசிப்பின் வழியாக நாம் எந்த அளவு அல்லாஹ்வை நெருங்கி இருக்கிறோம், எந்த அளவு அதன் ஞானங்களைப் பருகி இருக்கின்றோம் என்பதே முக்கியம். அதன் வசனங்களில் ஆழ்ந்து கவனம் செலுத்தி அவற்றிலிருந்து நமக்கான அறிவுரைகளை, படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் திருக்குர்ஆனை நமக்கு வழங்கியுள்ளான்.
திருக்குர்ஆனை வெறுமனே பொருள்புரியாமல் ஓதிக் கொண்டு அதன் அர்த்தங்களைப் புரியாமல் இருப்பதும் அவற்றில் ஆழ்ந்து கவனம் செலுத்தாமல் இருப்பதும் நமக்கு நாமே செய்யும் அநீதி அன்றி வேறில்லை. அது எந்த நோக்கத்திற்காக நமக்கு வழங்கப்பட்டுள்ளதோ அந்த நோக்கத்தை மறந்து விட்டு வெளிப்படையான சில சடங்குகளை நிறைவேற்றுவதன்மூலம் நம்மை நாமே நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.
தமிழில் ஓதுவது என்ற வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம். அதற்கு மந்திரங்களை பொருள் புரியாமல் உச்சரிப்பது என்ற பொருளும் இருக்கிறது. கிட்டத்தட்ட அந்தப் பொருளில்தான் நாம் ஓதிக் கொண்டிருக்கிறோம். கிராஅத் என்ற வார்த்தை வாசிப்பதையும் ததப்புர் என்ற வார்த்தை ஆழ்ந்து கவனம் செலுத்துவதையும் குறிக்கின்றன. இந்த வார்த்தைகளைத்தான் திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. நாம் குர்ஆனை பொருள் உணர்ந்து ஆழ்ந்து வாசிக்கிறோமோ? அல்லது வெறுமனே ஓதிக் கொண்டிருக்கிறோமா?
