ஒருவரைக் குறித்து என்னுள் இருக்கும் இருக்கும் பிம்பம் திடீரென அவரிடமிருந்து வெளிப்படும் ஒரு செயலால், அவரைக் குறித்து கேள்விப்படும் ஒரு செய்தியால் உடைந்துவிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனை எப்படி அணுகுவது?
இங்கு நாம் ஒரு விசயத்தை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்கள். யாராலும் பாவம் செய்யாமல் இருக்க முடியாது. உணர்வு மிகைக்கும்போது நாம் பாவம் செய்கிறோம். செய்து முடித்த பிறகு அதற்காக வருத்தப்படுகிறோம், அதனை எண்ணி வெட்கப்படுகிறோம். சிறிது நேரத்திற்கு அல்லது காலத்திற்குப் பிறகு மீண்டும் அதே பாவத்தையே செய்கிறோம். மீண்டும் வருந்துகிறோம், வெட்கப்படுகிறோம், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருகிறோம். இதுதான் மனிதர்களின் இயல்பு. இந்த இயல்பிலிருந்து யாரும் தப்ப முடியாது. “ஆதமுடைய பிள்ளைகள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்கள்தாம். அவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்கள்” என்ற நபிமொழி மனிதனின் இந்த இயல்பை, அவன் செய்ய வேண்டியதை தெளிவாக உணர்த்தி விடுகிறது. பாவம் செய்பவர்களை இஸ்லாம் வெறுக்கவில்லை. தம் பாவங்களை நியாயப்படுத்தக்கூடியவர்களையே அது வெறுக்கிறது.
ஒரு மனிதன் பாவம் செய்யாமல் இருக்கிறான் எனில் அதற்கான வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கப்பெறவில்லை அல்லது அல்லாஹ் அவனைக் காப்பாற்றிவிட்டான் என்று பொருள். அல்லாஹ், தான் நாடியவர்களை தவறுகளிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறான். தான் நாடியவர்களை அப்படியே விட்டுவிடவும் செய்கிறான். எந்த மனிதனும் அதை எண்ணி பெருமை கொள்ள முடியாது. யாரை ஏமாற்றினாலும் மனிதன் தன் சுயத்தை ஏமாற்ற முடியாது.
ஒரு மனிதனுக்கு இருக்கும் குற்றவுணர்ச்சியே அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்க அவனைத் தூண்டுகிறது. தன் தவறுகளுக்கு நியாயவாதங்கள், ஆறுதல்கள் கிடைக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். தன்னை பரிசுத்தமானவாக சமூகத்தில் காட்ட விரும்பும் மனிதனும் மற்றவர்களின் குறைகளை வெளிப்படுத்த விரும்புகிறான். மற்றவர்களின் இழிவில் தன்னுடைய கண்ணியம் இருப்பதாக அவன் எண்ணிக் கொள்கிறான்.
இந்த இடத்தில் இப்னு மஸ்வூத் என்ற நபித்தோழரின் கருத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் கூறுகிறார், “என் பாவங்களை நீங்கள் அறிந்தால் என்னை நீங்கள் கல்லால் அடித்திருப்பீர்கள்.” அவரைப் பெரிதாக எண்ணிக் கொண்டிருந்த அவரது மாணவர்களுக்கு முன்னால் அவர் கூறிய வார்த்தைகள் இவை. ஞானிகளைத் தவிர வேறு யாராலும் உண்மைகளை இப்படி அப்பட்டமாக உடைத்து பேச முடியாது. மனிதர்களின் இந்த இயல்பை சரியாகப் புரிந்துகொண்டால் நாம் அதிர்ச்சியடையத் தேவையில்லை. மனிதர்கள் இப்படிப்பட்டவர்கள்தாம். அவர்களிடமிருந்து எதுவும் வெளிப்படலாம். அல்லாஹ் மனிதர்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன் மட்டுமல்ல. அவற்றை மறைப்பவன், கண்டும் காணாமல் விட்டுவிடுபவன். தான் நாடியவர்களை அவன் கண்ணியப்படுத்துகிறான். தான் நாடியவர்களை அவன் இழிவுபடுத்துகிறான். கண்ணியமும் இழிவும் அவன் வசம்தான் உள்ளன.
