பிரபல்யம் சில உலகியல் இலாபங்களைக் கொண்டு வந்தாலும் அது ஒரு வகையில் துன்பம் தரக்கூடியது. அது இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடியது; அதீத சுயமோகத்தை உருவாக்கக்கூடியது. அதீத சுயமோகம் ஆளுமையைச் சிதைத்துவிடக்கூடிய அளவுக்கு கொடியது. அதுவும் கர்வம் உண்டாக்கும், அறிவை மழுங்கடிக்கச் செய்யும் ஒரு வகையான போதைதான். தாம் அடைந்த பிரபல்யத்தை ஒரு பொருட்டாகக் கருதாதவர்கள் அதன் தீங்குகளிலிருந்து ஓரளவு தப்பி விடுகிறார்கள். ஆனால் அது எல்லோராலும் அடைய முடியுமான ஒரு நிலை அல்ல. மனக் கட்டுப்பாடு கொண்டவர்களே அந்த நிலையை அடைகிறார்கள். மனக் கட்டுப்பாடு என்பது பயிற்சிகளின் வழியாக அடைய முடியுமான ஒன்றுதான்.
நற்செயல்களின் மூலம் படிப்படியாக பிரயல்யமடைபவர்களும் இருக்கிறார்கள். எதிர்மறைச் செயல்பாடுகளின் வழியே, கவன ஈர்ப்புச் செயல்பாடுகளில் அதிகமதிகம் ஈடுபடுவதன் வழியே மிக விரைவாக பிலபல்யமடைபவர்களும் இருக்கிறார்கள். எதிர்மறைச் செயல்பாடுகளின் வழியே மிக விரைவாக பிரபல்யமடைபவர்கள் தங்களுக்கான எதிரிகளையும் அதிக அளவில் பெற்றிருப்பார்கள். எந்தச் சமயத்திலும் அவர்கள் சிக்கலில் சிக்க வைக்கப்படலாம். அவர்கள் உணரும் அதீத அழுத்தம் அவர்களின் நிம்மதியை, இயல்பு வாழ்க்கையை கெடுத்துவிடும். மிக விரைவாக பிரபல்யமடைபவர்கள் மிக விரைவாக மறக்கப்பட்டும் விடுகிறார்கள். பிரபல்யத்தை தக்க வைப்பதற்கான தொடர் கவன ஈர்ப்புச் செயல்பாடுகளும் ஒரு கட்டத்திற்கு மேல் கடும் அழுத்தம் தரக்கூடியவையாக மாறி விடும். விளைவாக, அவர்கள் கடும் மனச் சிக்கல்களுக்கு உள்ளாகி விடுவார்கள்.
எந்தவொன்றும் போதையாக மாறாதவரை உங்களுக்கு அதனால் பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லை. அது போதையாக மாறி உங்களை வழிநடத்தத் தொடங்கிவிட்டால் தேவையற்ற பிரச்சனைகளில் நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள். உங்களை நீங்களே இழந்து விடுவீர்கள். கடுமையான மனச் சோர்வுக்கு உள்ளாகி விடுவீர்கள். இங்கு ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவு இருக்கிறது. எந்தவொன்றும் அதற்குரிய அளவைத் தாண்டிவிடக் கூடாது. அளவுக்கு மீறிய அமுதமும் நஞ்சாகி விடும் என்பது நம்மிடையே வழக்கத்தில் இருக்கின்றன பிரபல்யமான சொல்தான்.

Wonder full article. Appreciate your enlighten the society. I pray to almighty. to have you success.