உங்களால் தனித்திருக்க முடிகிறதா? யாருடனும் எந்தவொன்றுடனும் அல்லாமல் உங்களுடன் மட்டும் உங்களால் தனித்திருக்க முடிகிறதா? அப்படி உங்களால் தனித்திருக்க முடிந்தால் நீங்கள் இயல்பு நிலையில் இருக்கிறீர்கள், உங்கள் மனம் பாதிக்கப்படாமல் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
ஆனால் பலரும் தனித்திருத்தலை அஞ்சுகிறார்கள். அவர்கள் தனித்திருக்கும் சமயங்களில் செல்ஃபோனில், சமூக ஊடகங்களில், இன்னபிற பொழுதுபோக்கு அம்சங்களில் மூழ்கி விடுகிறார்கள். இந்த வகையான தனித்திருத்தல் தனிமை உணர்வை அளிக்கும்; நம்முடைய ஊக்கத்தை சிதைக்கும்; அது ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையையும் கூடவே கூர்மையான அகங்காரத்தையும் அளிக்கும். விளைவாக, உறவுச் சிக்கலும் ஏற்படும். அது மற்றவர்களுடன் இணங்கி வாழ்வதன் அவசியத்தை இல்லாமலாக்கி விடும். இப்படியான மனிதர்கள் ஒரு கட்டத்தில் கூட்டு வாழ்வை வெறுக்கும், சக மனிதர்கள் மீது எதிர்மறையான எண்ணங்கள் கொண்டிருக்கும் தனியர்களாக மாறி விடுவார்கள்.
இது நவீன வாழ்வு ஏற்படுத்திய சிக்கல்களில் ஒன்றுதான். அது மனிதனை சிற்றின்பங்களுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுக்கிறது. விளைவாக, அவனது ஆற்றல் கேளிக்கைகளில், வீணான விசயங்களில் வீணடிக்கப்படுகிறது.
உண்மையில் தனித்திருத்தல் அமைதி தரக்கூடிய, மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விசயம்தான். அது நமக்கு அளிக்கப்பட்டுள்ள இயல்பான இன்பங்களில் ஒன்று. அது நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. வாழ்வின் அர்த்தத்தைக் குறித்து, நம்மைக் குறித்து, இந்தப் பிரபஞ்சத்தின் ஆச்சரியமான ஒத்திசைவு குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது. அது நமக்குள் ஆன்மீக உணர்வுகளை தட்டியெழுப்புகிறது. அது உள்ளதை உள்ளபடியே பார்க்கும் தன்மையை அளிக்கிறது. அது நம்முடைய மனதைப் பலப்படுத்துகிறது. பெரும் பணி நிகழ்த்துபவர்களுக்கு இந்த தனித்திருத்தல் அவசியமான ஒன்று. இதன் வழியாக அவர்கள் தங்களுக்குத் தேவையான ஊட்டத்தை, மன பலத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
தனிமை பாவம் செய்யத் தூண்டும். அந்த தூண்டலுக்கு அகப்படாமல் நாம் தப்பித்து விட்டால், அந்த சமயங்களில் மனக்கட்டுப்பாடடுடன் இருப்பதற்கு நாம் பழகி விட்டால் அது நமக்கு மிகப் பெரிய வரமாக மாறிவிடும். அந்த தூண்டலுக்கு நாம் அகப்பட்டு விட்டால், அதற்கு நாம் பழகி விட்டால் தனிமை பாவம் செய்வதற்கான நேரமாக மாறிவிடும். அதுதான் வெறுமையை அளிக்கும் தனிமை. அதுதான் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் தனிமை.
தனித்திருத்தல் எழுத்தாளனுக்கும் ஆளுமைக்கும் அவசியமான ஒன்று. தனிமை அவர்களின் சிந்தனையைத் தூண்டுகிறது. தன்னை நோக்கியும் சமூகத்தை நோக்கியும் பார்க்கும் தனித்துவமான பார்வையை அது வழங்குகிறது. எப்போதும் கூட்டத்துடன் இருக்கும் மனிதர்கள் அந்தக் கூட்டத்தின் சராசரி மனநிலையைக் கொண்டவர்களாக ஆகிவிடுவார்கள். ஆகவே எப்போதும் கூட்டத்துடன் இருக்கும் மனிதர்கள் ஆளுமைகளாக வெளிப்படுவது அரிது.
தனித்திருத்தலில் இரு வகைகள் உள்ளன. ஒன்று, யாரும் இல்லாத தனிமையில் தனித்திருத்தல். இன்னொன்று, கூட்டத்திற்கு மத்தியில் தனித்திருத்தல். முதல் வகை கொஞ்சம் சிக்கலானது, அதீத மனக்கட்டுப்பாட்டை வேண்டி நிற்பது. மனக்கட்டுப்பாடு கொண்டவர்கள் தனிமையில் தனித்திருக்கும்போது ஒவ்வொன்றையும் உள்ளபடியே காணும் அகப்பார்வையை அடைகிறார்கள். அவர்கள் ஞானிகளாக, சிந்தனையாளர்களாக வெளிப்படலாம்.
இரண்டாவது வகை பலராலும் செய்ய முடிகின்ற பாதுகாப்பான ஒன்றுதான். தனியாக இருக்க பயப்படுபவர்கள்கூட இந்த வகையான தனித்திருத்தலில் ஈடுபட முடியும். அவர்கள் தங்களின் பலவீனங்களை உணர்வதற்கும் தங்களை பலப்படுத்துவதற்கும் இந்த வகையான தனித்திருத்தல் பெரிய அளவில் உதவக்கூடும். இந்த வகையான தனித்திருத்தல்கூட தங்களால் முடியாது என்று கூறுபவர்கள் மனதளவில் பலவீனமானவர்களே. அவர்களால் பெரும் பொறுப்புகளை சுமக்க முடியாது.
