பாவங்கள் என்னும் சிறைச்சாலை

You are currently viewing பாவங்கள் என்னும் சிறைச்சாலை

பாவங்களிலிருந்து விடுபட நான் என்ன வேண்டும்?

மனிதர்களிடம் இயல்பாகவே பலவீனம் இருக்கிறது. அந்த பலவீனத்தைப் பயன்படுத்தியே ஷைத்தான் அவர்களை வழிகெடுக்க முயற்சிக்கிறான். பாவங்கள் செய்யாமல் வாழும் வாழ்க்கை இன்பங்கள் அற்ற துறவு வாழ்க்கை என்ற ஒரு மாயையை அவன் அவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான். அவர்கள் பாதுகாப்புக் கவசங்களைக் கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை எனில் எளிதாக பாவங்களில் வீழ்ந்து விடுவார்கள். அவன் விரிக்கும் சதி வலைகளில் சிக்கி விடுவார்கள்.

தொழுகை மனிதர்களைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த பாதுகாப்புக் கவசம். அது அவர்களின் உள்ளங்களில் இறையுணர்வை பசுமையாக வைத்திருக்கச் செய்கிறது. விபச்சாரம் போன்ற மானக்கேடான காரியங்களிலிருந்தும் இன்னபிற தீமைகளிலிருந்தும் தொழுகை மனிதர்களைத் தடுக்கிறது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. தொழுகையின் வழியாக அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும் மனிதர்கள் ஷைத்தானின் சதிவலைகளை அடையாளம் காணுகிறார்கள். அவன் உள்ளத்தில் உருவாக்கும் சந்தேகங்களை, குழப்பங்களை, அச்சுறுத்தல்களை அவர்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கிறார்கள். அவர்கள் அவ்வளவு எளிதாக வீழ்த்தப்பட்டு விடுவதில்லை. சில சமயங்களில் அவர்கள் வீழ்த்தப்பட்டாலும் உடனே விழிப்படைந்து மீண்டு விடுகிறார்கள். அவர்கள் செய்யும் பாவங்கள்கூட அவர்கள் அதிகமதிகம் நற்செயல்களில் ஈடுபடுவதற்கும் இன்னும் அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன.

நான் கூறுவது இதுதான்: தொழுகையை முறையாகக் கடைப்பிடியுங்கள். குறிப்பாக, பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழுவதும் வீட்டில் தனியாகத் தொழுவதும் ஒன்றல்ல. பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழுவது உங்களுக்கு எல்லா வகையிலும் அளவில்லாத நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். எந்தச் சமயத்திலும் தொழுகையை விட்டு விடாதீர்கள். தொழுகை உங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும். அவனுடைய அரவணைப்பை உணர வைக்கும். தொழுகையை விட்டுவிடுவது ஆபத்தானது. அது உங்களை ஷைத்தானின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும். நீங்கள் பாவங்களின் பக்கம் ஈர்க்கப்படுவீர்கள். அவைதாம் வாழ்க்கையின் இன்பங்கள் என்று கருதி அவற்றுக்கு அடிமையாகி விடுவீர்கள். தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் பாவங்களில் மூழ்கி இருக்க மாட்டார்கள். பாவங்களில் மூழ்கி இருப்பவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிக்க மாட்டார்கள். தொழுகையையைக் கொண்டே ஆன்மாக்கள் தூய்மைப்படுத்தப்படுகின்றன.  

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply