நீண்ட நாளுக்குப் பிறகு அவரது கடைக்குச் சென்றேன். மனிதர் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் தெரிந்தார். அவருக்கும் எனக்கும் மத்தியில் நடைபெற்ற உரையாடல்:
“என்னாச்சு, ரொம்ப சோர்வா இருக்கீங்களே?”
“அம்மா இறந்து விட்டார்கள், அதான்.”
“இறந்து எவ்வளவு நாளாயிற்று?”
“ஒரு மாதம் ஆகிவிட்டது.”
“பிறகு ஏன் இவ்வளவு கவலையாக இருக்கிறீர்கள்? எழுபது வயது என்பது பெரிய வயதுதானே!”
“இல்லை, அவர் தற்கொலை செய்து விட்டார். எப்போதும் அவங்ககூட யாராவது ஒருத்தர் இருந்து கொண்டே இருப்போம். அன்று யாரும் இல்லை. அவசர வேலையாக நானும் வெளிக்கிளம்பி விட்டேன். நீண்ட நாளாகவே மனச்சிக்கலில் இருந்து வந்தார். அதற்காக பயன்படுத்திய மாத்திரைகள் கடும் உபாதைகளை ஏற்படுத்தியதனால் மாத்திரைகளையும் நிறுத்தி விட்டோம். சாவு, சாவு என்ற குரல் தனக்குள் ஒலித்துக் கொண்டே இருப்பதாகக் கூறுவார். ஆகவே நாங்கள் யாராவது ஒருவர் எப்போதும் அவருடன் இருப்போம். அன்று நான் சென்ற சிறிது நேரத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது. உறவினர்கள், அருகில் உள்ளவர்கள் பலவாறு பேசுகிறார்கள். என்னால்தான் நிகழ்ந்து விட்டதோ என்ற குற்றவுணர்ச்சி எனக்குள் வடுவாக பதிந்து விட்டது. சம்பவம் நிகழ்ந்து இன்றுவரை என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. வாழ்வு வெறுத்துப் போய் விட்டது.”
“கவலை கொள்ளாதீர்கள். நிகழ வேண்டியது நிகழ்ந்து விட்டது. உங்கள் தவறு இல்லை. உங்களால் முடிந்த அளவு நீங்கள் கவனமாகத்தான் இருந்தீர்கள். அவர்களிடம் ஒலித்த சாவின் குரலுக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியாது. இது தற்கொலை அல்ல. தீவிர மனச்சிதைவு நோயினால் ஏற்பட்ட பாதிப்புதான். நோயில் மரணமடைவது போலத்தான் இதுவும். ஒருவரிடம் அவரையும் மீறி ஒலித்துக் கொண்டிருக்கும் குரலுக்கு, அவர் பொறுப்பாக மாட்டார். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளன். அவன் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கக்கூடியவன். உங்கள் தாயாருக்காக மன்னிப்புக் கோருங்கள். நற்செயல்களில் அதிகம் ஈடுபட்டு உங்களை நீங்களே மீட்டுக் கொள்ளுங்கள். உங்களின் மனம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மனம் தளர்ந்து விடாதீர்கள். அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டிவிட்டு அடுத்து நிகழ வேண்டியதைக் கவனியுங்கள். மக்களின் பேச்சுகளை பொருட்படுத்தாதீர்கள். யாருக்கும் நீங்கள் புரிய வைக்க முடியாது. யாரையும் நீங்கள் திருப்திபடுத்த முடியாது.”
“நீங்கள் ஒருவர்தான் கொஞ்சம் ஆறுதலாக பேசியிருக்கிறீர்கள்”
தீவிர மனச்சிக்கலுக்கு உள்ளானவர்களிடம் தற்கொலை எண்ணங்கள் வரத் தொடங்குகின்றன. தற்கொலை எண்ணங்கள் அவர்கள் தீவிரமான மனச்சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதன் அடையாளங்கள்தாம். தகுந்த சிகிச்சையும் போதுமான கவனிப்பும் அவர்களுக்கு அவசியமாகின்றன. அவர்கள் தங்களின் எண்ணங்களை தகுந்த ஆலோசகர்களிடம் வெளிப்படுத்தி அவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை அவர்களால் தனித்து எதிர்கொள்ள முடியாது. அவற்றை வெளிப்படுத்தாமல் அப்படியே மனதுக்குள் வைத்துக்கொள்ளக்கூடாது. அவற்றை அனைவரிடமும் சொல்லத் தேவையில்லை. ஆனால் மருத்துவர்களிடமோ ஆலோசகர்களிடமோ நெருங்கியவர்களிடமோ அவற்றை வெளிப்படுத்த வேண்டும். அந்த எண்ணங்கள் அதிகமாகி விட்டால் மனநல மருத்துவர்களை அணுகி மருந்துகள் எடுத்துக் கொள்வதே சிறந்தது.
தற்கொலை ஒரு பெரும் பாவம் என்ற கண்ணோட்டத்தை மனதில் மீண்டும் மீண்டும் ஆழமாகப் பதிய வைப்பதன்மூலம் மனிதர்கள் அதிலிருந்து விடுபட முடியும். இந்தக் கருத்தை அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தக் கருத்தை அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்கொலையை நியாயப்படுத்தும் எந்தவொன்றையும் அவர்கள் பார்க்கவோ கேட்கவோ படிக்கவோ கூடாது.
