எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?

You are currently viewing எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?

நாம் எப்போது சிந்திக்கிறோம்? ஓய்வாக இருக்கும்போதுதான் சிந்திக்கிறோம். தொடர்ந்து ஏதேனும் ஒரு வேலையிலும் மீதமுள்ள சமயங்களில் பொழுதுபோக்கிலும் நாம் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தால் சிந்திப்பதையே மறந்து விடுவோம். இயல்பான, ஆரோக்கியமான சிந்தனைகளை நாம் இழந்து விடுகின்றோம். தனிமை நம்மை அச்சுறுத்தக்கூடியதாக மாறி விடுகிறது. எப்போதும் எதையேனும் ஒன்றை செய்து கொண்டிருக்கும் நிர்ப்பந்த நிலைக்கு நாம் மாறி விடுகின்றோம். நேரக்கொல்லிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உள்ளங்களில் நல்ல சிந்தனைகள் தோன்றுவதில்லை. பொழுதுபோக்குகளில் மூழ்கியிருப்பவர்கள் ஆளுமைத்திறனை இழந்து விடுகிறார்கள்.  

நாம் சிந்திக்க வேண்டும். சிந்தனைதான் நம்மை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. உண்பது, குடிப்பது, இனப்பெருக்கம் செய்வது போன்றவை மற்ற உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவானவை. நமக்குள் ஆன்மீகமான எண்ணங்கள் உருவாக, அவை வேர்ப்பிடிக்க நாம் அனுமதிக்க வேண்டும். அவற்றுக்கான சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டம் அந்த எண்ணங்களை அகற்றுவதற்கான சூழலையே கொண்டிருக்கிறது. அவை தேவையற்ற, வீணான எண்ணங்கள் என்ற எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்தி விடுகின்றது. நாம் நம்மையும் அறியாமல் அடிமைகளாக மாறி விடுகின்றோம். அன்று இருந்த அதே கொத்தடிமைகள் இன்றும் இருக்கிறார்கள், ஆனால் தாங்கள் கொத்தடிமைகள் என்பதை உணராமல்.

நாம் வாழும் உலகிலும் நம்மைச் சுற்றிலும் ஆச்சரியமான ஒத்திசைவு காணப்படுகிறது. இந்த உலகில் காணப்படும் ஆச்சரியமான ஒழுங்கு நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் காணப்படுகிறது. ஆழ்ந்து கவனிப்பவர்கள்தாம் அந்த ஒழுங்கை அறிந்துகொள்ள முடியும். சிறு நிகழ்வுகள், பெரு நிகழ்வுகள், நமக்கு முன்னால் நிகழும் நிகழ்வுகள், நமக்குத் தெரியாமல் நிகழும் நிகழ்வுகள்…  இப்படி எல்லாம் இணைந்துதான் அந்த ஆச்சரியமான ஒழுங்கு உருவாகிறது.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்ற கேள்வி நம் அறியாமையின் விளைவே அன்றி வேறில்லை. இதுவரையிலும் எதையும் கவனிக்காமல் திடீரென கவனிக்கத் தொடங்கும்போது புரிந்துகொள்ள முடியாமல் திணறுகின்றோம் அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பற்ற தற்செயல்கள் என்று தவறாகப் புரிந்து கொள்கின்றோம். பொறுமையுடனும் நிதானத்துடனும் ஆழ்ந்து கவனிக்க கவனிக்கத்தான் முடிச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவிழத் தொடங்குகின்றன. ஆச்சரியமான ஒத்திசைவு நம் பேராச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நம் இயலாமையையும் பேராற்றல்கொண்ட இறைவனின் பேராற்றலையும் உணரத் தொடங்குகின்றோம்.  

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply