நாம் விரும்பும் விசயத்தை சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக வெளிப்படுத்துவது ஒரு வகை. இது இலகுவானது, சிக்கல் அற்றது, புரிந்து கொள்ளத்தக்கது. இன்னொரு வகை, நாம் விரும்பும் விசயத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு அதை அவர்கள் நமக்காகச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது. மனிதர்கள் சுயநலம் கொண்டவர்கள் என்பதால் பெரும்பாலும் அவர்கள் அதனைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அப்படியே புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளாததுபோன்று காட்டிக் கொள்வார்கள். மனிதர்கள் தங்களுக்குப் பயன் இருந்தால்தான் எந்தவொன்றையும் செய்வார்கள். இரண்டாம் வகை மனிதர்கள் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள். அவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதையே மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆனாலும் அவர்கள் தங்களின் விருப்பங்களை, தேவைகளை ஏதோ ஒரு வகையில் மறைமுகமாக வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.
எந்தவொன்றுக்கும் மறுப்பு சொல்லாதவர்கள் தங்களின் எந்தவொன்றும் மறுக்கப்படக்கூடாது என்று விரும்புவதால் தங்களின் தேவைகளை நேரடியாகக் கேட்காமல் மறைமுகமாக உணர்த்துகிறார்கள். அவை நிறைவேறாதபோது உங்களின் மீது குற்றம்சாட்டத் தொடங்குகிறார்கள். உங்களுக்கு ஒருவர் உதவி செய்கிறார் எனில், உங்களுக்கு ஒருவர் பணிவிடை செய்கிறார் எனில், உங்களுக்குத் தேவையானபோதெல்லாம் உங்களுடன் ஒருவர் நிற்கிறார் எனில் அவர் செய்யும் செயல்களுக்குப் பகரமாக நீங்கள் அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உபகாரங்களை செய்ய வேண்டும். இங்கு இலவசமாக எதையும் பெற முடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. உரிய இடத்தில் அதற்கான விலையைக் கொடுக்கவில்லையெனில் வேறு எங்கோ அதற்கான தண்டத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். நட்பு, உறவு போன்ற எந்தவொரு தொடர்பும் பண்டமாற்று இல்லாமல் இருப்பதில்லை.
