ஒவ்வொரு உறவும் நட்பும் அன்பின் அடிப்படையில் அமைய வேண்டியது அல்ல. சில உறவுகள் தேவையின் அடிப்படையிலானது. அங்கு பயன் பெற்று பயனளித்தல் அல்லது வெறுமனே பயனடைதல் இருக்கும். சிலர் வெறுமனே பயனடைதலை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அவர்களையும் மீறி ஏதோ ஒரு வகையில் பயனளித்தல் நிகழ்வதால் அந்த உறவு நீடிக்கிறது. மனிதர்கள் சுயநலமிக்கவர்கள் என்பதால் பயனடைதல்தான் முதன்மையான நோக்கமாக இருக்கும். ஆனாலும் இங்கு அல்லாஹ் ஒருவருக்கு இன்னொருவர் அவசியம் என்பதால் ஏதோ ஒரு வகையில் பயனளித்தல் நிகழ்ந்து விடுகிறது.
சில உறவுகள் போட்டியின், பொறாமையின் அடிப்படையிலானதாக இருக்கும். நீங்கள் யாருடன் போட்டியிட விரும்புகிறீர்களோ யார் மீது பொறாமை கொள்கிறீர்களோ அவர்களுடனும் நீங்கள் உறவை அமைத்துக் கொள்வீர்கள். இது உண்மையில் ஒரு விசித்திரமான உறவுதான். ஆனாலும் நீங்கள் அவர்களின் உறவை நிரந்தரமாக முறித்துக் கொள்ள மாட்டீர்கள். அவ்வப்போது தற்காலிகமாக பிணக்குகள் வந்தாலும் எல்லாவற்றையும் கடந்து அவர்களுடன் நீங்கள் உறவைப் பேணிக் கொண்டுதான் இருப்பீர்கள்.
சில உறவுகள் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலானது. நீங்கள் அவர்களின் உறவை துண்டிக்க விரும்பினாலும் சூழல் உங்களை துண்டிக்க விடாது.
அன்பின் அடிப்படையிலான உறவும் இருக்கிறது. காரணமேயின்றி நீங்கள் சிலர் மீது அன்பு செலுத்துவீர்கள். அவர்களுக்காக மெனக்கெடுவீர்கள். உங்களின் நேரத்தையும் பொருளையும் அவர்களுக்காக செலவிடுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்கள் உங்களுக்காக எதுவும் செய்யாவிட்டாலும் நீங்கள் அவர்களுக்காக செய்து கொண்டேயிருப்பீர்கள்.
