பல சமயங்களில் நீங்கள் மனச்சிக்கல் கொண்டவர்களை கரிசனத்தோடு அணுக வேண்டும் என்கிறீர்கள்! அப்படிப் பார்த்தால் குற்றவாளிகளும் மனச்சிக்கல் கொண்டவர்கள்தானே? பிறகு அவர்களை எப்படி அணுகுவது?
நீங்கள் எழுப்பிய இந்தக் கேள்வி மிக முக்கியமானது. பல முறை எனக்கு நானே இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறேன். அணுக்கமான நண்பர்களிடமும் இது குறித்து விவாதித்திருக்கிறேன். நாம் அவர்களோடு கரிசனத்தோடு நடந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக ஆக்கிவிடக்கூடாது. தாங்கள் செய்யும் எல்லா தவறுகளையும் தங்களின் மனச்சிக்கல் கொண்டு அவர்கள் நியாயப்படுத்தி விடக்கூடாது. அவர்கள் எல்லோருடனும் அப்படி நடந்து கொள்வதில்லை. குறிப்பிட்ட சிலருடன்தான், அதுவும் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என்று அவர்கள் கருதுபவர்களுடன்தான் அப்படி நடந்து கொள்கிறார்கள். அவர்களிடமிருந்து வெளிப்படும் சொற்களுக்கும் செயல்களுக்கும் அவர்கள்தாம் பொறுப்பு. மனதில் தோன்றும் தீய எண்ணங்கள் நம்முடைய பேச்சிலோ செயலிலோ வெளிப்பட்டு விட்டால் நாம்தான் அதற்குப் பொறுப்பு. அவற்றின் காரணமாக நாம் அல்லாஹ்விடத்தில் குற்றம்பிடிக்கப்படுவோம்.
மனச்சிக்கல் கொண்டவர்கள் குறிப்பிட்ட சிலருடன் கடுமையாக அல்லது மோசமாக நடந்துகொண்டால் அதன் காரணமாக அவர்கள் குற்றம்பிடிக்கப்படுவார்கள். அவர்கள் வரம்புமீற நாம் அனுமதிக்கக்கூடாது. அவர்கள் வரம்புமீறினால் அதற்குரிய விளைவை அனுபவிக்க நேரிடும் என்ற அச்சுறுத்தலை நாம் அவர்களுக்கு வழங்காவிட்டால் அவர்கள் தொடர்ந்து வரம்புமீறிக் கொண்டேதான் இருப்பார்கள். நிர்ப்பந்தமும் அச்சமும் அவர்களை தடுத்து விடும்.
தற்கால வாழ்க்கை முறை மனச்சிக்கல் கொண்டவர்களை அதிக அளவில் உற்பத்தி செய்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிய அளவிலோ பெரிய அளவிலோ பெரும்பாலான மனிதர்களிடம் மனச்சிக்கல் காணப்படத்தான் செய்கிறது. ஒவ்வொருவரும் தங்களின் குற்றங்களை, மோசமான சுயநலனை இதன் வழியாக மறைத்துவிடக்கூடும். ஆகவே யாருக்கும் அவர்கள் ஏதோ ஒரு வகையில் மனச்சிக்கல் கொண்டவர்கள் என்ற காரணத்திற்காக எந்த சலுகையும் தரப்படக்கூடாது. நிர்ப்பந்தமான சூழல் இத்தகையைவர்களை வழிக்குக் கொண்டுவர ஓரளவுக்கு உதவத்தான் செய்கிறது.
