வாசிக்கும் பழக்கம் எனக்கு இயல்பாகவே இருக்கிறது. இந்த பழக்கம் எப்படி என்னிடம் தொற்றிக் கொண்டது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த பேப்பரைக் கண்டாலும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதில் மிக அதிகமாக இருந்தது என்பது மட்டும் இப்போது நினைவுக்கு வருகிறது. என்னைச் சுற்றியிருந்த யாரிடமும் வாசிப்புப் பழக்கம் இருந்ததில்லை.
உண்மையில் இந்தப் பழக்கம் என் அகவுலகை மிகப் பெரிய அளவில் விசாலப்படுத்தியிருக்கிறது என்றுதான் கருதுகிறேன். வாசிக்கும்போது மட்டுமே நான் என்னை மறக்கிறேன்: என்னைச் சுற்றியிருக்கும் உலகை, மனிதர்களை மறக்கிறேன்; கனவுலகுக்கு நிகரான வேறொரு உலகில் சஞ்சரிக்கிறேன்; பார்க்காத இடங்களைப் பார்க்கிறேன்; பழகாத மனிதர்களுடன் பழகுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக என்னைக் கவலைகளிலிருந்து, அழுத்தங்களிலிருந்து விடுவிக்கும் அருமருந்தாகவும் அது இருக்கின்றது.
நான் வாசிப்பு என்று குறிப்பிடுவது வாசிப்பு என்ற வட்டத்திற்குள் வரக்கூடிய அத்தனையையும் அல்ல. நம் ஆன்மாவோடு ஒன்றக்கூடிய, நம் அகத்தில் வெளிச்சத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல எழுத்துக்கள், ஒரு நிகர் வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும் நல்ல நாவல்கள், வாழ்வின் சிதறல்களில் நமக்கு அவசியமானவற்றை பளிச்சென நம் முன்னால் கொண்டு வரக்கூடிய சிறுகதைகள் ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன்.
வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. அது இயல்பாகவே வர வேண்டும். வலிந்து எந்தவொன்றையும் வாசிக்க முடியாது. அது ஒரு சித்ரவதை. வாசிப்பு என்பது ஒரு அறிதல் முறை. அதைத் தவிர வலுவான பிற அறிதல் முறைகளும் இருக்கின்றன. அறிதல் முறைகளில் நம் இயல்புக்கு நெருக்கமானதையே நாம் தெரிவு செய்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கிறது.
