ஏமாற்றம்

You are currently viewing ஏமாற்றம்

நான் அவரை முன்னரே அறிவேன். அவர் இப்போது முழுமையாக மாறிவிட்டார் என்பதை உணர்கிறேன். உண்மையில் அவர் மாறிவிட்டரா அல்லது என் பார்வைதான் மாறிவிட்டதா என்று உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் முன்னர் அவர் அப்படி இருக்கவில்லை. உற்சாகமானவராக, உற்சாகப்படுத்தக்கூடியவராகத்தான் இருந்தார். உற்சாகமானவர்கள் பழகுவதற்கு இலகுவானவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும். அந்த வகையில் அவர்கள் உற்சாகமூட்டக்கூடியவர்கள்.

அவரிடம் பேசும்போது புறக்கணிப்பின் வலியை உணர்ந்ததாகச் சொல்கிறார். சமூகம் தன்னை கைவிட்டு விட்டதாகச் சொல்கிறார். அங்கீகாரத்தை எதிர்பார்த்திருப்பார் அல்லது வேறு எதையோ எதிர்பார்த்திருப்பார். அது கிடைக்காததனால் கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகம் இழந்தவராக, இறுக்கமானவராக, எதையும் எதிர்மறையான கண்ணோட்டத்தில் அணுகக்கூடியவராக ஆகியிருப்பார் என்று கருதுகிறேன். உண்மையில் சமூகம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அவருடைய பார்வைதான் மாறிவிட்டது. மனிதர்கள் பெரும்பாலும் தங்களைத் தாண்டி வேறு எதைக் குறித்தும் யாரைக் குறித்தும் சிந்திப்பதில்லை. தனக்கு ஏதாவது ஒரு வகையில் பயன் இருந்தால் மட்டுமே மனிதன் சக மனிதனைப் பற்றி சிந்திக்கிறான். சமூகம் என்பது என்ன? அது ஒரு கடல். அங்கு யாரைக் குற்றம் சாட்ட முடியும்? காரிருளில் கல்லெறிவது போலத்தான்.

அனைவரும் அறிந்து ஒன்றுதான், எதிர்பார்த்தது கிடைக்கவில்லை எனில் அது கடுமையான ஏமாற்றத்தை உருவாக்கும். அந்த ஏமாற்றம் நிராசையான, எதிர்மறையான, மனிதர்கள் அனைவரும் அல்லது குறிப்பிட்ட சமூக மக்கள் அல்லது உறவினர்கள் அனைவரும் இப்படித்தான என்ற எண்ணங்களை உருவாக்கி விடும். அங்கிருந்துதான் மனிதர்கள் இறுக்கமானவர்களாக, தங்களின் கோபத்தை சம்பந்தமில்லாத வேறு எங்கோ வெளிப்படுத்தக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள். பொதுவாக முகநூலில் ஆக்ரோஷமாக உரையாடும் யாரிடமும் நாம் உரையாடக்கூடாது. அவர்கள் வேறு எங்கோ அடிபட்டவர்களாக, இங்கு வந்து சம்பந்தமில்லாமல் கோபம் கொள்ளக்கூடியவர்களாக, பொங்கக்கூடியவர்களாக இருக்கலாம். மனிதர்கள் பலவீனமானவர்கள். தம் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு உகந்த இடம் இல்லையெனில் அல்லது உகந்த இடத்தில் வெளிப்படுத்துவதற்கான தைரியத்தைப் பெறவில்லையெனில் வேறு எங்கோ வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

சரி, விசயத்திற்கு வருகிறேன். எதிர்பார்ப்பை முடிந்த மட்டும் குறைத்துக் கொள்ளுதல் நல்லது. மனித இயல்பை உணர்ந்து கொள்வது நல்லது. யாரும் யாருக்காகவும் இல்லை. இதுதான் உண்மை. இந்த இடத்தில் இறைதிருப்திக்காக செயல்படுதல் என்ற நோக்கம் உள்ளத்தில் ஆழப்பதிந்திருந்தால் அது பல ஏமாற்றங்களிலிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கும் என்று கருதுகிறேன். அந்த நோக்கம் மட்டுமே பாதுகாப்பானது. நமக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் பயன்தரக்கூடியது. இங்கு மனிதர்கள் கொண்டாடப்படலாம், தூற்றப்படலாம், புறக்கணிக்கப்படலாம், அடையாளம் இல்லாமல் ஆக்கப்படலாம். ஆனால் எதுவும் நிரந்தரமானதல்ல. எல்லாம் கடந்து விடும். எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். இங்கு இறைதிருப்திக்காக செயல்படுதல் மட்டுமே ஒரே தீர்வு. மனிதர்கள் உங்களைக் கண்டு கொண்டாலும் கண்டு கொள்ளாவிட்டாலும் அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காவிட்டாலும் இறைவனிடத்தில் அதற்கான கூலியைப் பெறுவீர்கள். முட்டி மோதி கடைசியில் இந்த இடத்திற்குத்தான் நாம் வர வேண்டும்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply