சில மனிதர்களுடன் இருக்கும்போது நாம் அவர்களால் கவரப்படுகிறோம். அவர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்படுகிறோம். அவர்கள் நம்மிடம் எதுவும் கூறாவிட்டாலும் அவர்களின் இருப்புகூட நமக்குள் ஒரு வகையான தாக்கம் செலுத்துகிறது. இது நல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். கெட்ட மனிதர்களுக்கும் பொருந்தும்.
இரு சாராரிடமிருந்தும் அவர்களுக்கே உரிய அதிர்வுகள் (Vibes) வெளிப்படுகின்றன. இரு சாராரும் நம்மிடம் அவர்களின் நம்பிக்கையை, வாழ்வியல் முறையை வெளிப்படையாக பிரச்சாரம் செய்யாவிட்டாலும் மறைமுகமாக நமக்குள் தாக்கம் செலுத்துகிறார்கள். சிலருடன் இருக்கும்போது வாழ்க்கை அர்த்தமுள்ளது என்பதை உணர்கிறோம். சிலருடன் இருக்கும்போது வாழ்வு என்பது ஒரு கேளிக்கைதான் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சிலருடன் தொடர்ந்து இருக்கும்போது வாழ்க்கையே வீண்தான் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. ஆன்ம வலிமை கொண்ட மனிதர்கள் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் தாக்கம் செலுத்துகிறார்கள். பெரிய அளவில் மற்றவர்களிடமிருந்து தாக்கமடைவதில்லை.
நல்ல மனிதர்களுடன் நல்ல சூழலில் இருக்கும்போது நாமும் நல்ல மனிதர்களாக மாறுகிறோம். நமக்குள் இருக்கும் மிருகம் பலவீனமடைந்து விடுகிறது. நமக்குள் இருக்கும் மிருக உணர்ச்சிகள் அவற்றுக்கு உகந்த சூழலை, பொருத்தமான மனிதர்களைப் பெறும்போதுதான் வீரியமடைகின்றன. மற்ற சமயங்களில் அவை வீரியமடைவதில்லை.
மனிதர்களுக்கு ஈர்க்கும் தன்மை இருப்பதுபோல இடங்களுக்கும் ஈர்க்கும் தன்மை இருக்கிறது. பாவங்கள் நடைபெறும் இடங்கள் பாவங்களின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அந்த இடங்கள் ஷைத்தான்கள் வாழும் இடங்களைப் போன்று நம்பிக்கையாளர்களுக்கு மன அமைதியைக் குலைத்து இனம்புரியாத இறுக்கத்தை ஏற்படுத்துகின்றன. நம்பிக்கையாளர்கள் அந்த இடங்களில் மன இறுக்கத்தை உணர்கிறார்கள்.
சில இடங்களில், சில பள்ளிவாசல்களில் அற்புதமான அமைதி நிலவுகிறது. நம்பிக்கையாளர்கள் அவற்றின் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். இடங்களுக்கும் உயிர் இருக்கிறதா என்ன? சில மனிதர்களிடம் காணப்படும் ஒரு வகையான ஈர்ப்பு சில இடங்களிலும் எப்படி காணப்படுகிறது? சில இடங்கள் அமைதியளிக்கும், நிம்மதியளிக்கும் இடங்களாக இருப்பது எப்படி? அங்கு சென்றால் கவலைகள், குழப்பங்கள் நீங்கள் மனம் அமைதி அடைவது எப்படி? ஆச்சரியமான ஒன்றுதான் இது. இங்கு ஒவ்வொன்றும் அதிர்வுகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் அதற்கே உரிய மனிதர்களை ஈர்க்கிறது.

அருமை