நான் எழுதத் தொடங்கியது…

You are currently viewing நான் எழுதத் தொடங்கியது…

நான் எழுதிய பதிவுகள் மற்றவர்களுக்குப் பயனளிக்கிறதோ இல்லையோ பல சமயங்களில் எனக்குப் பயனளிக்கின்றன. என்னுடைய எழுத்துக்களை டைரி வகையிலான எழுத்தாக மதிப்பிடுகிறேன். என் கண்ணோட்டங்களை, உணர்வுகளை, அவதானிப்புகளை, விமர்சனங்களை, விருப்பங்களை அப்படியே எழுத்தில் முன்வைக்கிறேன். அவற்றில் காணப்படும் தனிப்பட்ட தகவல்களை அகற்றி விடுகிறேன். ஒரு எழுத்தாளனின் தனிப்பட்ட அனுபவங்கள், அவதானிப்புகள் பொதுவான மனித அனுபவங்களாக, அவதானிப்புகளாக மாறுவது இப்படித்தான்.

நான் எழுதத் தொடங்கியது இப்படித்தான். எனக்கே எனக்காகவே எழுதத் தொடங்கினேன். வேறு எந்த நோக்கமும் எனக்கு இருக்கவில்லை. அது மனதிற்கு இதமான ஒரு செயல்பாடாக மாறியது. எப்போதெல்லாம் எழுதத் தொடங்குகிறேனோ அப்போதெல்லாம் மனம் அமைதியடைந்து அதற்குள் நிகழும் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்குகிறது. எழுத்தின் வழியாக அதில் தென்படும் சிந்தனைகளை வெளிப்படுத்துகிறேன். எழுதக்கூடிய ஒவ்வொன்றையும் பொதுத்தளத்தில் வெளியிடுவதில்லை. சிலவற்றை வெளியிடுகிறேன், சிலவற்றை அப்படியே விட்டு விடுகிறேன்.

மொழிபெயர்ப்பு என்னுடைய தொழில். அது மற்றவர்களின் சிந்தனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் பணி. சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தும் பணி. சில சமயங்களில் ஆர்வமூட்டும் பணி. நான் மொழிபெயர்க்கும் குறிப்பிட்ட ஆசிரியரிடமிருந்து எனக்கு கற்க வேண்டியவை இருந்தால், புத்தகத்தின் கருப்பொருள் என் இயல்போடு ஒத்திசைந்து செல்லக்கூடியதாக இருந்தால் அந்த பணியை ஆர்வத்துடன் செய்கிறேன். அது என்னுடைய பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமின்றி எனக்கான கற்றலாகவும் அமைந்து விடுகிறது என்பதே அந்த ஆர்வத்திற்குப் பின்னாலிக்கும் காரணம். வெறுமனே பொருளாதாரத் தேவைக்காக மட்டும் மொழிபெயர்க்கும்போது அது அலுப்பூட்டும் பணியாக அமைந்து விடுகிறது.

ஒருவன் எழுத்தாளனாகவும் மொழிபெயர்ப்பாளனாகவும் ஒரே சமயத்தில் இயங்க முடியுமா என்றால் முடியும் என்பேன். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நெருக்கமான பணிகள்தாம். மற்றவர்களின் சிந்தனைகளுக்கு சிறந்த முறையில் எழுத்து வடிவம் கொடுக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளனால் தன் சிந்தனைகளை அற்புதமான, நேர்த்தியான, உயிரோட்டமான முறையில் வெளிப்படுத்த முடியும். மொழிபெயர்ப்பு என்பது சுயமாக எழுதுவதற்கான பயிற்சியும்கூட. ஆனாலும் மொழிபெயர்ப்பாளனாக அன்றி ஒரு எழுத்தாளனாக இயங்குவதற்கே நான் விரும்புகிறேன். எழுத்துதான் நான் இயங்குதற்கான தளம். எழுத்துதான் என்னுடைய அழைப்பியல் களம். என்னுடைய எழுத்து ஆளுமைகளையும் அழைப்பாளர்களையும் பட்டை தீட்டும் என்று நம்புகிறேன். அல்லாஹ்வே பாக்கியம் அளிப்பவன்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply