கற்றுக் கொடுத்தலும் கற்றலின் ஒரு வகைதான். கற்கும்போது புரியாத சில விசயங்கள் கற்றுக்கொடுக்கும்போது தெளிவாகப் புரிகின்றன. எனக்கு எழுதும்போதும் அப்படித்தான். அதுவரை புரியாத சில விசயங்கள் எனக்கு எழுதும்போது புரிகின்றன. என் எழுத்திலிருந்து வெளிப்பட்டாலும் எனக்கு அது புதிய ஒன்றுதான். மொழிபெயர்த்தல் என்பது ஆழமான கற்றல். அது ஒரு ஆழமான வாசிப்பு. ஒரு புத்தகத்தை ஆழமாகக் கற்க விரும்பினால் அதனை மொழிபெயர்ப்பது நல்லது. சில புத்தகங்களில் ஆசிரியரையும் மீறி வெளிப்படக்கூடிய திறப்புகளும் இருக்கின்றன.
இந்த உலகில் வெளிப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றும் அதற்குரிய சமயத்தில் அதற்குரிய மனிதர்களிடமிருந்து வெளிப்பட்டு விடுகின்றன. சில சமயங்களில் வெளிப்பட்ட மனிதர்களிடமிருந்தும் அவை அந்நியமானவையாகவும் ஆகிவிடுகின்றன. பெரும்பாலும் ஒன்றைக் குறித்த தேடலும் ஆர்வமும் கொண்டவர்களிடத்தில்தான் அது வெளிப்படுகிறது.
ஞானம் என்பது தூய உள்ளத்திலிருந்து, உன்னதத்திலிருந்து மட்டும் வெளிப்படக்கூடிய ஒன்றல்ல. அது கீழ்மையிலிருந்தும் வெளிப்படலாம். முற்றிலும் நேர் எதிரான மனிதர்களிடமிருந்தும் வெளிப்படலாம். வாழ்வின் மீதான பிடிப்பு விடுபடும்போது மனிதன் ஞானியாகிறான். அந்த விடுபடல் உன்னதத்தை நோக்கிய ஆவலினாலும் இருக்கலாம். பாவங்களில் மூழ்கி வாழ்க்கையைவிட்டு நிராசையடைந்ததனாலும் இருக்கலாம். லௌகீக இன்பங்களில் திளைப்பவர்களுக்கு ஞானம் எட்டாக்கனி.
நிச்சயம் ஞானம் என்பது அருட்கொடைதான். அது ஒவ்வொன்றையும் குறித்த சரியான பார்வையை வழங்குகிறது. ஆனாலும் தம் வழியாக வெளிப்படும் ஞானத்தைக் கொண்டு பயனடையாத மனிதர்களும் இருக்கிறார்கள். அந்த ஞானத்தைக் கொண்டு பிற மனிதர்கள் நேரான வழியை அடைகிறார்கள். ஆனால் அதே ஞானம் அவர்களை செருக்கில் ஆழ்த்தி தவறான பாதையில் செலுத்திவிடுகிறது.
