நெருங்கிய உறவுகளிடமிருந்து உணரும் புறக்கணிப்பின் வலியை எப்படி எதிர்கொள்வது?
மனிதர்கள் ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழக்கூடியவர்கள் என்பதை ஒருவர் மற்றவரைச் சுரண்டி வாழக்கூடியவர்கள் என்றும் கூறலாம். இரண்டுக்கும் மத்தியில் சிறிய அளவுதான் வேறுபாடு காணப்படுகிறது. சில சமயங்களில் இரண்டும் ஒன்றுபோலவே தோற்றம் தருகிறது.
நாம் பிள்ளைகளை வளர்க்கிறோம். அது ஒரு இயல்பான செயல்பாடு. நமக்கு எவ்வித பிரபதிபலனும் அவர்கள் தர மாட்டார்கள் என்று தெரிந்தாலும் அவர்களை நாம் வளர்ப்போம். நமக்கு வளர்ப்பதில் பிரியம் இருக்கிறது. அதனால் வளர்க்கிறோம். நம் உழைப்பை அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் சுரண்டப்படுவதை மனமார ஏற்றுக்கொள்கிறோம். அவ்வாறு சுரண்டப்படுவதில் மனநிறைவும் அடைகின்றோம். ஆனால் வளர்ந்த பிறகு அவர்கள் நம்மைக் கவனிப்பார்களா? அவர்கள் நம்முடன் எப்படி நடந்து கொள்வார்கள்? இவை எதுவும் நமக்குத் தெரியாது. வளரும் தலைமுறையின் மீது இருக்கும் இயல்பான பாசம் தேய்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மீது இருப்பதில்லை. அங்கு நினைவூட்டல் அவசியமாகிறது. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முடிவை நோக்கி செல்கிறார்கள். இயல்பான செயல்பாடு போன்று அது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் விடைபெறுகிறார்கள். விடைபெறுதலும் இயல்பான ஒன்றாக நிகழ்ந்து விடுகிறது.
பிள்ளைகளை வளர்ப்பதற்கு பாசம் அவசியமாகிறது. முதியவர்களை பராமரிப்பதற்கு இரக்கம் அவசியமாகிறது. இரண்டுமே உள்ளத்திற்கு வழங்கப்பட வேண்டும். இரண்டும் அருட்கொடைகள்தாம். உள்ளம் இரண்டையும் பெறாவிட்டாலும் அதன் வெளிப்படையான அடையாளங்களையாவது நிறைவேற்ற வேண்டும். பாசம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படாத பிள்ளைகள் எதிர்மறையான பண்புகளைக் கொண்ட பிள்ளைகளாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இரக்கம் காட்டப்படாத முதியவர்கள் நிராசையில் தீராத புலம்பலில் வீழ்ந்து விடுகிறார்கள்.
மனிதர்கள் முழுக்க முழுக்க தங்களின் மனதிருப்திக்காக அவ்வாறு செயல்பட்டாலும் அதனை தியாகமாகவும் கருதுகிறார்கள். அதனால் எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் புறக்கணிப்பை உணரும்போது நான் இப்படியெல்லாம் செய்தேனே! எனக்கு அதற்குப் பதிலாக என்ன செய்தாய்? என்று புலம்பவும் செய்கிறார்கள். மனிதர்கள் சுயநலம்மிக்கவர்கள். அவர்கள் தாங்கள் அடைந்த பயன்களை மறந்து விடுவார்கள். தாங்கள் செய்த உபகாரங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.
காதலுக்கும் பாசத்திற்கும் நாம் பிரதிபலனை எதிர்பார்க்க முடியாது. அப்படித்தான் நமக்கு செய்ய முடியும். அப்படிச் செய்வதில்தான் நமக்கு இன்பமும் மனநிறைவும் இருந்திருக்கிறது. அதனால்தான் அப்படிச் செய்தோம். அதை விடுத்து வேறு எப்படியும் நாம் செயல்பட்டிருக்க மாட்டோம். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் நாம் அதனை தியாகமாகக் கருத மாட்டோம். தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்க மாட்டோம்.
அதே சமயம் உங்கள் பெற்றோர் தள்ளாத வயதை அடைந்துவிட்டால் அவர்களை உதாசீனம் செய்து விடாதீர்கள் என்று கூறுகிறது இஸ்லாம். சிறு வயதில் அவர்கள் நம்மை பாசம் காட்டி வளர்த்ததுபோன்று அவர்கள் மீது இரக்கம் காட்டச் சொல்கிறது அது. மனிதனுக்கு இந்த நினைவூட்டல் அவசியமாகிறது. அவன் எந்தவொன்றையும் மிக எளிதாக மறந்து விடுகிறான் என்பதால். காலம் எல்லாவற்றையும் அவனுக்கு திருப்பி அளித்து விடும். அவன் மற்றவர்களை எப்படி நடத்துகிறானோ அப்படி நடத்தப்படுவான். அவன் நன்றிகெட்டத்தனமாக நடந்து கொண்டால் அதே நன்றிகெட்டத்தனத்தை அவன் அனுபவிக்காமல் மரணிக்க மாட்டான்.
