சுமூகமான குடும்ப வாழ்வு
குடும்ப வாழ்வு சுமூகமாகச் செல்வதற்குப் பின்னால் நேரடியான அல்லது மறைமுகமான சர்வாதிகாரமும் நிர்ப்பந்தமும் இருக்கின்றன. இரு சமமான மனிதர்கள் நீண்ட நாட்கள் ஒன்றுசேர்ந்து இருக்க முடியாது. இருவரிடமும் காணப்படும் கூர்மையான ஈகோ அவர்களைப் பிரித்து விடும். ஆனாலும் அவர்கள் ஓர் இடைவெளியோடு சேர்ந்திருக்க முடியும். ஒருவர் ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தால் மற்றொருவர் அடங்கிப் போக வேண்டும். இருவரும் ஒருசேர ஆதிக்கம் செலுத்த முயன்றால் குடும்பம் உடைந்து விடும். பெரும்பாலும் இரு வேறுபட்ட மனிதர்களே ஒன்றிணைகிறார்கள். ஒரே உலகைச் சேர்ந்த இரு மனிதர்களால் வாழ்க்கைத் துணைவர்களாக நீடிக்க முடியாது. அப்படியே நீடித்தாலும் ஒருவர் ஆதிக்கம் செலுத்துபவராகவும் இன்னொருவர் பணிந்து செல்பவராகவும்தான் இருப்பார்கள்.
ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழும் வாழ்க்கைதான் நீடிக்கிறது. ஏதேனும் ஒரு வகையில் கணவன் மனைவியை, மனைவி கணவனை சார்ந்திருக்கவில்லையெனில் அவர்களின் வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கையாக ஆகிவிடும். மனிதர்களை ஒன்றிணைப்பது தேவைகள்தாம். அவை நிரந்தரமானவை. உணர்வுகள் தற்காலிகமானவை. அவை ஆரம்பகட்ட ஒன்றிணைவுக்கு உதவலாம். ஆனால் தேவைகள்தாம் அந்த ஒன்றிணைவை நீடிக்கச் செய்கின்றன.
சமம் என்பது பல தளங்களில் சாத்தியமில்லை. அது ஒரு வகையான மாயை. இந்த உலகம் தலைவர்களால் நிரம்பினால் சீர்குலைந்து விடும். இங்கு தலைவர்களும் தொண்டர்களும் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மத்தியில் உணர்வுரீதியான ஒரு சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். புறக் காரணங்களின் அடிப்படையில் யாரும் யாரையும்விட சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது என்பதுதான் அது. இஸ்லாம் அப்படித்தான் கூறுகிறது. உங்களில் மிகச் சிறந்தவர் தக்வா உடையவர்தான் என்று இஸ்லாம் கூறுகிறது. தக்வா என்பது இறைவனின் கட்டளைகளை, அறிவுரைகளைப் பின்பற்றுவது. இந்த அடிப்படையில் மனிதர்களுக்கு மத்தியில் காணப்படும் வெளிப்படையான பாகுபாட்டினால் ஏற்படும் தீய விளைவுகளை நம்மால் தடுக்க முடியும். அவர்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.
பொறுப்புகள்
பொறுப்புகள் வெளிப்படையாகப் பார்ப்பதற்கு சுமைகள் போன்று தெரியும். ஆனால் அவையே வாழ்வின் மீதான பிடிப்பை அதிகப்படுத்துபவை. வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குபவை. அவை மனிதனுடைய திறமைகளை வெளிக் கொணர்கின்றன. அவனுடைய தொடர்புகளை விரிவாக்குகின்றன. அவன் உள்நோக்கி ஒடுங்காமல் விரிவடைந்து கொண்டே செல்கிறான். பயனளித்து பயனடைகிறான். மகிழ்ச்சியளித்து மகிழ்ச்சியடைகிறான். மனிதர்கள் ஓட வேண்டும். ஓடிக் களைப்படைய வேண்டும். களைப்படைந்து உறங்க வேண்டும். அதுதான் இன்பம். அவர்கள் பொறுப்புகளை சுமக்க வேண்டும். அவற்றை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும். அதில்தான் மனநிறைவு இருக்கிறது.
பொறுப்புகள் அற்ற மனிதன் சோம்பேறியாகி விடுவான். ஏதேனும் ஒரு தீய பழக்கத்திற்கு அடிமையாகி தன்னைத் தானே அழிக்கத் தொடங்கி விடுவான். அவனுடைய வாழ்வை முன்னோக்கி நகர்த்தும், அர்த்தமுள்ளதாக ஆக்கும் எந்தவொன்றும் அவனிடம் இருக்காது. குடும்பப் பொறுப்புகளை சுமக்கும் மனிதர்களுக்கும் எந்தப் பொறுப்புகளும் அற்ற தனியர்களுக்கும் மத்தியில் எவ்வளவு வேறுபாடு காணப்படுகிறது? சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் எந்தப் பணிகளிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் எவ்வளவு வேறுபாடு காணப்படுகிறது? இரு சாராரும் சமமானவர்கள் அல்ல. முந்தையவர்களேவிட பிந்தையவர்கள் எளிதில் வாழ்க்கையிலிருந்து நிராசையடைந்து விடுகிறார்கள். சட்டென புண்படக்கூடிய, புண்படுத்தக்கூடிய மனிதர்களாக, சகிப்புத்தன்மையற்றவர்களாக இருக்கிறார்கள்.

திருமண வாழ்க்கை
திருமண வாழ்க்கை நீடிப்பது வெறுமனே அன்பின் அடிப்படையில் அல்ல. அன்பு ஆரம்ப நிலைக் காரணியாக இருக்கலாம். பெரும்பாலும் அது ஆரம்ப நிலைக் காரணியாக மட்டுமே இருக்கும். அன்பு ஒரே நிலையில் அப்படியே நீடிக்கக்கூடியது அல்ல. அது தற்காலிகமானது; மாறக்கூடியது; இடம்பெயரக்கூடியது. வெறுமனே அன்பின் அடிப்படையில் மட்டுமே மணவாழ்க்கை நிலைபெற வேண்டுமென்றால் அது சீர்குலைவாகவே எஞ்சி நிற்கும்.
திருமண வாழ்க்கை நீடிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. சில புரிந்துகொள்ளக்கூடியவை. சில புரிந்துகொள்ள முடியாதவை. புரிந்துகொள்ள முடியாதவை என்று நான் கூறுவது எந்த ஒரு ஒத்திசைவும் ஒன்றி, நிர்ப்பந்தமும் இன்றி தம்பதியினர் இணைந்திருப்பது. பரஸ்பர ஒப்பந்தம், ஒருவர் மற்றவரைச் சார்ந்திருத்தல், ஒருவர் மற்றவர் மீது இரக்கம்கொள்ளுதல், நிர்ப்பந்தம் இப்படி சில காரணங்களை சொல்ல முடியும். மணவாழ்க்கையை உறுதியான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் வர்ணிக்கிறது. அது எளிதில் முறித்து விடக்கூடிய ஒப்பந்தம் அல்ல.
ஆணும் பெண்ணும் சமமானவர்கள் அல்ல. அதே சமயம் ஆண் உயர்ந்தவனோ பெண் தாழ்ந்தவளோ பெண் உயர்ந்தவளோ ஆண் தாழ்ந்தவனோ அல்ல. அவர்கள் ஒருவர் மற்றவரை முழுமைப்படுத்தக்கூடியவர்கள். ஒருவர் மற்றவரைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள். இருவருக்கும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளுக்கேற்ப வெவ்வெறு வகையான திறமைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஏதேனும் தேவையின்றி, நோக்கமின்றி கட்டுப்பட மாட்டான். தேவையை ஒருவர் மற்றவரைச் சார்ந்திருக்கச் செய்கிறது. மனிதர்கள் சுயநலம்கொண்டவர்கள். அவர்களின் சொல் வேறு, செயல் வேறு. மிகக் குறைவான மனிதர்களை சொல்லையும் செயலையும் ஒன்றுசேர்க்கிறார்கள். இரண்டுக்கும் மத்தியில் ஒத்திசைவுகளை ஏற்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் பிற மனிதர்களிடம் தாக்கங்களை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் கண்ணியப்படுத்தப்படுகிறார்கள்.
தக்வா என்னும் வரம்பு
பெண்ணை காயப்படுத்த நினைக்கும் ஆண் அவளது உணர்வுகளைச் சீண்டுகிறான். ஆணைக் காயப்படுத்த நினைக்கும் பெண் அவனது ஈகோவைச் சீண்டுகிறாள். பெண்ணை மென்மையாளவன் என்று கூறுவது அவளது உணர்ச்சிவசப்படும் தன்மையினால்தான். ஆணைக் கடினமானவன் என்று கூறுவது எளிதில் அவன் உணர்ச்சிவசப்பட மாட்டான் என்பதனால்தான். இறைவன் இருவருக்கும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, சுமக்கும் பொறுப்புகளுக்கேற்ற பண்புகளை வழங்கியிருக்கிறான். விதிவிலக்குகள் இருக்கலாம். அவை பொதுவான வரையறைகளாக மாறிவிடுவதில்லை. மிகைத்திருக்கும் பண்புகளே புரிந்துகொள்ளப் பயன்படும் வரையறைகளாக மாறுகின்றன.
ஆணும் பெண்ணும் சமம் என்பது பண்புகளில் புறத்தோற்றங்களில் அல்ல. அது ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்பதில், ஒருவர் மற்றவரைக் காயப்படுத்தாமல் இருப்பதில் கடமைகளை நிறைவேற்றி உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் இருக்கிறது. இருவருக்கும் மத்தியிலான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்கக்கூடியது அல்ல. ஆனாலும் அந்த ஈர்ப்பின் இடத்தில் புரிதலும் மறைமுகமான ஒப்பந்தமும் ஏற்பட்டுவிட வேண்டும். அதுவே இரு தரப்புக்கும் உகந்தது, ஆரோக்கியமானது. உணர்வுகள் தற்காலிகமானவை. அவை ஒரே இடத்தில் நீடித்திருப்பவை அல்ல. வயதும் பக்குவமும் சூழலும் முன்னுரிமைகளை மாற்றிக் கொண்டே செல்லக்கூடியவை. இது ஆண், பெண் இரு தரப்புக்கும் பொதுவானவை. ஆனாலும் இருவரும் ‘தக்வா’ என்னும் வரம்பை மீறாமல் இருப்பது மட்டுமே குடும்பத்தை உடைந்து விடாமல் பாதுகாப்பதற்கான ஒரே வழி.
தனியர் வாழ்க்கை
எனக்கும் அவருக்கும் சின்னதொரு பிணக்கு. அவரைக் குறித்து அவரது நண்பரிடம் முறையிட்டேன். பாய், “அவர் குழந்தை இல்லாதவர். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார் அவரது நண்பர். அவருக்கும் எனக்குமான விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட்டு விட்டாலும் அவரது நண்பர் சொன்ன இந்த வார்த்தைகள் மட்டும் என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அந்தக் காரணம் எனக்கு அந்தச் சமயத்தில் விசித்திரமான ஒன்றாகத் தெரிந்தது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, அவர் சொன்ன வார்த்தைகள் மட்டும் எனக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கின்றன.
இன்னொரு மனிதர் நீண்ட காலமாக தனியாக இருந்து வருகிறார். திருமணம் செய்து கொண்ட சில மாதங்களுக்குள்ளே மனைவியைப் பிரிந்தவர் அதற்குப் பிறகு அந்த மனைவியுடன் மீண்டும் இணையவும் இல்லை. வேறு ஒரு திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவரிடம் கேட்டால் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வீணடித்து விடாதீர்கள் என்கிறார். சில காலம் அவருடன் பழகிய பிறகுதான் மனைவியுடன் மட்டுமல்ல வேறு யாருடனும் அவரால் இணைந்திருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டேன். சகிப்பின்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததும் மனிதப் பலவீனங்களை உணர்ந்து கொள்ளாமல் மற்றவர்களிடம் அதீத துல்லியத்தை எதிர்பார்ப்பதும்தான் அதற்குக் காரணம்.
திருமண வாழ்க்கையும் அதன் விளைவாக வரக்கூடிய குழந்தைகளும் மனிதனைப் பண்படுத்துகின்றன. தனியனாக, கட்டுப்பாடுகள் அற்றவனாக இருக்கும் மனிதன் திருமணத்தின்மூலம் கட்டுப்பாடுகள் கொண்ட சமூக மனிதனாக மாறுகிறான். இரு மனிதர்கள் இணைந்திருக்க வேண்டுமெனில் இருவரும் சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும் விட்டுக் கொடுக்கும் தன்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இருவரிடையே காணப்படும் அன்பும் காமமும் அவர்கள் இணைந்திருக்க வேண்டிய, ஒருவர் மற்றவரை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கொண்டேயிருக்கின்றன.
திருமண வாழ்க்கையில்தான் ஒருவர் மற்றவரைப் பொறுத்துக் கொள்ள பழகுகிறார்கள். அவர்கள் இருவரின்மூலம் உருவாகும் குழந்தைகளால் அந்தக் குடும்பம் வலுவடைகிறது. அன்பும் காமமும் நீண்ட காலம் நீடிக்க முடியாது. அவற்றின் இடத்தில் பாசம், அக்கறை, இரக்கம் ஆகிய பண்புகள் வந்து விடுகின்றன. ஆணும் பெண்ணும்தான் இணைய முடியும். அதுதான் இயல்பானது. ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் நிச்சயம் இணையவோ ஒரு குடும்பத்தை உருவாக்கவோ முடியாது. அவர்களிடைய காணப்படும் பிறழ் காமம் தீர்ந்து விட்டால் அவர்கள் ஒருவர் மற்றவரைத் தாக்கிக் கொண்டு பிரிந்து விடுவார்கள்.
மனிதர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தனியர்களாக இருப்பதற்கான முதற்காரணம், அவர்களிடையே காணப்படும் சகிப்பின்மைதான். இந்த சகிப்பின்மை அவர்களிடம் தன்னல வெறியை ஏற்படுத்திவிடுகிறது. இந்த வகையில் அவர்கள் ஆபத்தானவர்கள். இதன் காரணமாகத்தான் சமூகம் தனியர்களை ஆபத்தானவர்களாகக் கருதுகிறது. ஏனெனில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. அவர்களை எந்தச் சட்டகத்திற்குள்ளும் பொருத்த முடியாது.
உங்களில் மணமாகதவர்களுக்கு மணமுடித்து வையுங்கள் என்கிறது திருக்குர்ஆன். இந்த வாசகம் சட்டென எனக்கு ஒரு திறப்பாக அமைந்து விட்டது. மனிதர்களின் சுதந்திரம் எல்லைக்குட்பட்டது. அது சமூகத்தின் நலனிற்கு பாதகமாக ஒரு போதும் அமைந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட சுதந்திரம் பெரும் சீரழிவுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே சமூகம் சார்ந்த சில விவகாரங்களில் யாரும் “என் இஷ்டம், நான் இப்படித்தான் செய்வேன்” என்று வாதிட்டுக் கொண்டிருக்க முடியாது.

பதிவிற்கு மிக்க நன்றி. சிறப்பான கட்டுரை. நிறைய எழுதுங்கள் Shah.