நோன்பின் மகிழ்ச்சி

You are currently viewing நோன்பின் மகிழ்ச்சி

நோன்பாளி இரண்டு சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைகிறார். ஒன்று நோன்பு துறக்கும் சமயத்தில். மற்றொன்று தம் இறைவனைக் காணும் சந்தர்ப்பத்தில். இது நபியவர்கள் கூறியது. உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது, நோன்பு முடிகிறது என்பதை எண்ணும்போது; இனி உண்ணாமல் பருகாமல் இருக்க வேண்டியதில்லை என்பதை எண்ணும்போது.

கிட்டத்தட்ட இந்த வாழ்வும் இதைப் போன்றதுதான். ஒருவர் தம் மன இச்சைகளைக் கட்டுப்படுத்தி சரியான வழியில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது அவர் இவ்வுலகில் தற்காலிக மகிழ்ச்சியையும் மறுமையில் நிரந்தரமான மகிழ்ச்சியையும் பெறுவார். இச்சைகளுக்குப் பின்னால் அலைபவர், அவற்றை நிறைவேற்றுவதையே தம் வாழ்க்கையின் நோக்கமாக ஆக்கிக் கொள்பவர் கொல்லும் வெறுமையினாலும் தீராத சலிப்பினாலும் தம்மைத் தாமே அழித்துக்கொள்வார்; துன்பங்கள் அவரிடம் நிரந்தரமாகக் குடிகொண்டுவிடும். மன இச்சைகளைக் கட்டுப்படுத்த முடியாதவன் கர்வம் கொண்டவனாகவும் இருந்தால் அவன் இறைமறுப்பாளானாக, ஷைத்தானாக மாறிவிடுவான்.

நோன்பு இறை நெருக்கத்தைப் பெறுவதற்கான ஒரு வழிமுறை. அது இச்சைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அற்புதமான பயிற்சி. அது மனிதனை இவ்வுலக இன்பங்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் அருமருந்தும்கூட. மனிதன் தன் இச்சைகளைக் கட்டுப்படுத்துவதில் தான் அவனுடைய வெற்றியும் நிம்மதியும் அடங்கியுள்ளது என்கிறார் ஷாஹ் வலியுல்லாஹ். ஆம், அவன் இச்சைகளைக் கட்டுப்படுத்தும்போது கீழ்மைகளின் பிடியிலிருந்து விடுபட்டு ஆன்மீக இன்பங்களை உணரத் தொடங்குகிறான். நிம்மதி மனதிற்கு அருளப்பட வேண்டும். அது அல்லாஹ் தன் நேசர்களுக்கு வழங்கும் மாபெரும் கொடை. அதுதான் இந்த உலகின் சொர்க்கமும்கூட.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply