மக்காவில் அருளப்பட்ட ஏழு வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்திற்கு ‘அல்ஃபாத்திஹா’ என்று பெயர். அல்ஃபாத்திஹா என்றால் ஆரம்பம் என்று பொருள். திருக்குர்ஆனின் ஆரம்பமாக இந்த அத்தியாயம் இடம்பெற்றிருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். திருக்குர்ஆனுக்கு ஒரு முன்னுரைபோல இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது.
இரத்தினச் சுருக்கமான ஏழு வசனங்கள் இஸ்லாமிய வாழ்வின் அடிப்படையான அம்சங்களை, கண்ணோட்டங்களை கச்சிதமாகத் தெளிவுபடுத்தி விடுகின்றன. இந்த அத்தியாயம் ஒட்டுமொத்த குர்ஆனின் சாரம்சம் என்ற கருத்து அறிஞர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் வசனங்களை கூர்ந்து கவனிக்கும்போது இந்தக் கருத்து சரியென்றே தெரிய வருகிறது. சிறிய விதை பெரிய மரத்தை உள்ளடக்கி இருப்பதுபோல இது ஒட்டுமொத்த குர்ஆனையும் உள்ளடக்கி இருக்கிறது.
இந்த அத்தியாயம் மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டும் என்று கட்டளை இடப்பட்டிருப்பதற்குப் பின்னால் இந்த நோக்கமும் இருக்கலாம் என்று கருதுகிறேன். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பதினேழு முறை இந்த அத்தியாயத்தை கடமையாக்கப்பட்ட தொழுகைககளில் நாம் படிக்கிறோம். உபரியான தொழுகைகளைத் தொழும்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகி விடுகிறது. செறிவான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் இந்த அத்தியாயம் மீண்டும் மீண்டும் படிக்கப்படுவதன் வழியாக புதிய திறப்புகளை அளிக்கக்கூடியதாகவும் மிகச் சிறந்த நினைவூட்டலாகவும் அமைந்து விடுகிறது.மனிதன் மறதியாளன் என்பதாலும் இச்சைகளால் அவன் மிகைக்கப்படுவான் என்பதாலும் இஸ்லாம் சொல்லும் அடிப்படையான அம்சங்களும் நேர்வழியில் நிலைத்திருப்பதன் அவசியமும் அவனுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த அத்தியாயம் அந்தப் பணியை திறம்படச் செய்து விடுகிறது.
திருக்குர்ஆன் அருளப்பட்ட வரிசை வேறு. அது தொகுக்கப்பட்ட வரிசை வேறு. அது அருளப்பட்ட வரிசையின் அடிப்படையில் தொகுக்கப்படவில்லை. அது தொகுக்கப்பட்ட வரிசை வஹியின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும். நபியவர்களின் வழிகாட்டலுக்கேற்பவே ஒவ்வொரு அத்தியாயமும் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டது. திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரிசையின் அடிப்படையில் இதுதான் முதல் அத்தியாயமாகும். இதற்கு முன்னால் வேறு வசனங்கள் அருளப்பட்டிருந்தாலும் இதுதான் முதன்முதலாக அருளப்பட்ட முழுமையான அத்தியாயமாகும்.
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1:2. அளவற்ற அருளாளனும் தொடர் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் (اللهُ) என்ற வார்த்தை இலாஹ் (إِلَهٌ) என்ற வார்த்தையில் அலிஃப், லாம் இணைப்பதன்மூலம் உருவானது. இது இருமையோ பன்மையோ அற்ற வார்த்தை. அன்றைய காலகட்டத்தின் அறபுக்கள் வானங்களையும் பூமியையும் படைப்புகள் அனைத்தையும் படைத்த, பேராற்றல் கொண்ட, எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள படைப்பாளனைக் குறிப்பதற்கு மட்டுமே இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். தங்களுடைய ஏனைய தெய்வங்களைக் குறிப்பதற்கு அவர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் பயன்படுத்திய அதே பொருளில்தான் திருக்குர்ஆனும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறது. இது எல்லாவற்றையும் படைத்துப் பராமரிக்கும், பேராற்றல் கொண்ட, வணக்கத்திற்கு உரிய இறைவனைக் குறிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் தனித்துவமான சொல் ஆகும்.
அர்ரஹ்மான், அர்ரஹீம் என்ற இரு வார்த்தைகளும் ‘ரஹ்மத்’ என்ற வேர்ச் சொல்லிருந்து வெளிப்பட்டவை ஆகும். ’ரஹ்மத்’ என்றால் மனம் உருகுதல் என்று பொருள். அது அல்லாஹ்வின் விசயத்தில் அதன் வெளிப்பாடுகளான கருணை காட்டுதல், அருள்புரிதல், கிருபை செய்தல், அன்பு காட்டுதல் ஆகிய அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை ‘ரஹ்மான்’ என்ற வடிவில் வரும்போது அளவற்ற, எல்லையில்லாத, விசாலமான என்ற பொருளைத் தருகிறது. ஆகவேதான் நாம் இந்த வார்த்தைக்கு ‘அளவற்ற அருளாளன்’ என்ற மொழிபெயர்ப்பை தெரிவு செய்திருக்கிறோம். இந்த வார்த்தையை திருக்குர்ஆன்தான் முதன்முதலாகப் பயன்படுத்தியது. அன்றைய அறபுக்கள் இந்த வார்த்தையை அறிந்திருக்கவில்லை. இதுவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் தனித்துவமான சொல்லாகும். இது ‘ரஹீம்’ என்ற வடிவில் இடம்பெறும்போது அவனுடைய அருளின், கருணையின் நிரந்தரத்துவத்தைக் காட்டுகிறது. எப்போதும் அருள்புரிபவன், கிருபை காட்டுபவன் என்று நாம் கூறலாம். இந்த வார்த்தைக்கு ‘தொடர் கிருபையாளன்’ என்ற மொழிபெயர்ப்பை நாம் தெரிவு செய்திருக்கிறோம்.
அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே இந்தக் குர்ஆன் தொடங்குகிறது. “அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு படிப்பீராக” என்பதுதான் குர்ஆனில் முதன் முதலாக அருளப்பட்ட வசனம். ஒவ்வொரு செயலும் அவனுடைய பெயரைக் கொண்டே, அவனிடம் உதவி தேடியவாறே தொடங்கப்பட வேண்டும். அவனுடைய நாட்டமின்றி, உதவியின்றி நாம் எந்தவொரு செயலையும் தொடங்கவோ முடிக்கவோ முடியாது. ஒட்டுமொத்த அதிகாரமும் அவனிடம்தானே இருக்கிறது!
இந்த அடிப்படையில்தான் நபியவர்கள் ஒவ்வொரு நற்செயலையும் அவனுடைய பெயரைக் கொண்டு தொடங்கி இருக்கிறார்கள். அவனுடைய பெயரைக் கொண்டே ஒவ்வொன்றையும் தொடங்குமாறு நமக்கு வழிகாட்டியும் இருக்கிறார்கள்.
திருக்குர்ஆனுக்கான அற்புதமான தொடக்கம் இது. அவனுடைய பெயரைக் கொண்டே இந்தக் குர்ஆன் தொடங்குகிறது. இங்கு ஒவ்வொன்றும் அவனுடைய அருளின், கருணையின் வெளிப்பாடுகள்தாம். அவனுடைய அருளின், கருணையின் மாபெரும் வெளிப்பாடுதான் இந்தக் குர்ஆன்.
“அளவற்ற அருளாளன். அவன்தான் இந்தக் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைப் படைத்தான். அவனே மனிதனுக்குப் பேசக் கற்றுக் கொடுத்தான்.” (55:1-4)
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
1:2. படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
அல்ஹம்து என்ற வார்த்தையிலுள்ள அலிஃப், லாம் ஒட்டுமொத்தமாக என்ற அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. அல்ஹம்து என்ற வார்த்தைக்கு எல்லாப் புகழும் நன்றியும் என்று மொழிபெயர்க்கலாம்.
‘ரப்’ என்ற வார்த்தைக்கு உரிமையாளன், பராமரிப்பவன், வளர்ப்பவன், சீர்திருத்தம் செய்பவன் ஆகிய பொருள்கள் உண்டு. அவன் எந்தவொன்றையும் படைத்து அப்படியே விட்டுவிடவில்லை. ஒவ்வொரு படைப்புக்கும் தேவையான ஒவ்வொன்றையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான். அவனே ஒவ்வொன்றையும் வளர்த்துக் கொண்டும் பராமரித்துக் கொண்டும் இருக்கிறான். அவனுக்கும் படைப்புகளுக்குமான தொடர்பு ஒவ்வொரு நொடியிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது எந்தச் சமயத்திலும் அறுபட்டு விடுவதில்லை.
’ஆலம்’ என்ற வார்த்தைக்கு தமிழில் உலகம் என்று மொழிபெயர்க்கலாம். அதாவது மனிதர்கள் உலகம், ஜின்களின் உலகம், விலங்குகளின் உலகம், தாவரங்களின் உலகம்… இப்படி படைப்புகள் அனைத்தையும் இந்த வார்த்தை உள்ளடக்கி இருக்கிறது. ஆகவேதான் நாம் மொழிபெயர்ப்பில் ‘படைப்புகள் அனைத்தையும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளோம்.
இங்குள்ள ஒவ்வொரு படைப்புக்கும் அவன்தான் உரிமையாளன். அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவன்தான் அவற்றைப் படைத்தான். அவனே அவற்றுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து வளர்த்துக் கொண்டும் பராமரித்துக் கொண்டும் இருக்கிறான். இந்த உண்மையை உணரும் நம்பிக்கையாளனின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் இயல்பான வாசகம்தான் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் நன்றியும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது)
நம்பிக்கையாளனின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் இயல்பான வாசகம் இது. அவன் மீண்டும் மீண்டும் இந்த வாசகத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கிறான். நன்றியுணர்ச்சி அவனிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்த தனக்கு அல்லாஹ்தான் இருப்பும் இங்கு வாழ்வதற்கான வசதிகள் அனைத்தும் அளித்தான் என்பதை அவனை மீண்டும் மீண்டும் நினைவுறுகிறான்.
அவன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொல்லும்போது அது உயிரற்ற வெற்று வார்த்தையாக இருக்காது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவனிடமிருந்து வெளிப்படும் இந்த வார்த்தை அவனுடைய உணர்வின், நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடு.
எத்தனை வகையான உயிரினங்கள் இருக்கின்றன இங்கு! எத்தனை வகையான படைப்பினங்கள் இருக்கின்றன இங்கு! அவனுக்கும் படைப்புகள் ஒவ்வொன்றுக்குமான தொடர்பு அறுபடாமல் இருந்து கொண்டே இருக்கிறது. எந்தவொரு நொடியிலும் அது அறுந்து விடுவதில்லை.
அவன் படைப்புகளைப் படைத்து அப்படியே விட்டுவிடவில்லை. ஒவ்வொன்றும் அவனிடமிருந்தே தனக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொண்டிருக்கிறது. அவனுடைய அனுமதி இன்றி இங்கு எந்தவொன்றும் நிகழ்ந்துவிட முடியாது. அவனிடம் தேவையற்று இங்கு யாரும் இருந்துவிட முடியாது. அவனிடமிருந்து ஒதுங்கி இங்கு யாரும் வாழ்ந்துவிட முடியாது. அவன் தேவைகள் அற்றவன். அனைவரும் அவனிடம் தேவையுடையவர்களே. அவனே அவர்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறான்.
நன்றிகெட்டத்தனம் எவ்வளவு பெரிய குற்றம்? அத்தனையையும் அனுபவித்துக் கொண்டு மனிதன் படைப்பாளனை மறந்து வாழ்வது எவ்வளவு பெரிய குற்றம்? அத்தனையையும் கொடுத்த அருட்கொடையாளனை விட்டுவிட்டு போலியான தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை வணங்குவது எவ்வளவு பெரிய குற்றம்? இதனால் படைப்பாளனின் மகத்துவம் எந்த வகையிலும் குறைந்து விடுவதில்லை. அவ்வாறு செய்வதன்மூலம் மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ
1:3. அவன் அளவற்ற அருளாளன்; தொடர் கிருபையாளன்.
மனிதர்கள் மீது அவன் புரியும் அருளுக்கும் கருணைக்கும் கிருபைக்கும் எல்லையே இல்லை. அருள்புரிவதும் கருணை காட்டுவதும் அவனுக்கே உரிய நிரந்தரமான பண்புகள். மனிதர்களும் அவர்களிடம் காணப்படும் அனைத்தும் அவனுடைய அருளின், கருணையின் வெளிப்பாடுகள்தாம். படைப்புகள் எல்லாவற்றையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன் அளவற்ற அருளாளனும் பெரும் கருணையாளனும் தொடர் கிருபையாளனும் ஆவான். அவனுக்கும் படைப்புகளுக்குமான தொடர்பு அன்பின், அருளின், கருணையின் அடிப்படையிலானது.
مٰلِكِ يَوْمِ الدِّيْنِ
1:4. கூலி கொடுக்கப்படும் நாளின் அதிபதி.
மறுமை நாள்தான் கூலி கொடுக்கப்படும் நாள். அந்த நாளில் ஒட்டுமொத்த அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாக இருக்கும்.
“அந்த நாளில் யாரும் யாருக்கும் எந்தப் பயனும் அளிக்க முடியாது. அந்த நாளில் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கும்.” (82:19)
அவன் அடியார்களின் விசயத்தில் பேரன்பும் பெரும் கருணையும் கொண்டவன்தான். ஆனாலும் அவன் நீதியாளன். ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்த செயல்களுக்கேற்ப கூலி வழங்குபவன். அவனை நம்பி அவன் அளித்த வழிகாட்டலுக்கேற்ப நற்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவன் நற்கூலி அளிப்பான். அவனை மறுத்து அல்லது மறந்து பாவங்களில் மூழ்கியவர்களுக்கு அவன் தக்க தண்டனை அளிப்பான்.
இந்த உலகிலும் நாம் செய்த நற்செயல்களுக்கான பலன்களைப் பெறுகிறோம், நாம் செய்த பாவங்களுக்கான தண்டனைகளை அனுபவிக்கிறோம். ஆனாலும் இங்கு நாம் முழுமையான அளவில் பெறுவதில்லை. சில சமயங்களில் நாம் செய்த நற்செயல்களுக்கான பலன்களைப் பெறாமல் நாம் மரணித்து விடலாம். அதே போன்று நாம் செய்த பாவங்களுக்கான தண்டனைகளைப் பெறாமலும் நாம் மரணித்து விடலாம். கூலி கொடுக்கப்படும் அந்த நாளில் நம்முடைய செயல்களுக்கேற்ப முழுமையான அளவில் நாம் கூலி கொடுக்கப்படுவோம். யாருக்கும் சிறிதும் அநீதி இழைக்கப்படாது.
இந்த உலகிலும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. ஆனாலும் அவன் இங்கு சில மனிதர்களுக்கு குறிப்பிட்ட வகையான அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறான். அது அவர்களைச் சோதிக்கும்பொருட்டு அவன் வழங்கியதேயாகும். அவன் தான் நாடியவர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். தான் நாடியவர்களிடமிருந்து அதனைப் பறித்து விடுகிறான். நன்மைகள் அனைத்தும் அவன் கைவசமே உள்ளன.
சிறிய, செறிவான இந்த வாசகம் நம்பிக்கையாளனின் உள்ளத்தில் மறுமை நாள் குறித்த கண்ணோட்டத்தை ஆழமாகப் பதிய வைத்து விடுகிறது. அந்த நாள் இங்கு நிகழ்ந்த ஒவ்வொன்றுக்கும் கூலி வழங்கப்படும் நாள். அந்த நாள் நீதி சரியான அளவில் நிலைநிறுத்தப்படும் நாள். அந்த நாளில் ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதித்தவற்றுக்கான கூலியை முழுமையான அளவில் பெறுவார்கள். யாருக்கும் சிறிய அளவில்கூட அநீதி இழைக்கப்படாது.
யாருடைய உள்ளத்தில் மறுமை நாளைக் குறித்த கண்ணோட்டம் ஆழமாகப் பதிந்து விட்டதோ அவர்கள் தாங்கள் செய்தவற்றுக்கான கூலியை உடனுக்குடன் பெற்றுவிட வேண்டும் என்று விரும்புவதில்லை. தங்களின் முயற்சி இந்த உலகில் பயனளிக்கா விட்டாலும் மறுமை நாளில் அதற்கான முழுமையாகக் கூலியைப் பெறுவோம் என்று அவர்கள் உறுதியாக நம்புவார்கள். இந்தக் கண்ணோட்டம்தான் அவர்களை தொடர்ந்து செயல்படத் தூண்டுகிறது. இதுதான் அவர்களை நிராசையிலிருந்து பாதுகாக்கிறது. இதுதான் மற்றவர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தும் அடிப்படையான அம்சம்.
படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும், எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அடியார்களின் மீது பேரன்பும் என்றும் வற்றா பெரும் கிருபையும் கொண்ட அல்லாஹ்தான் மனிதர்கள் முழு மனதுடன் கட்டுப்படுவதற்கும் வழிபடுவதற்கும் உதவி தேடுவதற்கும் தகுதியான ஒரே இறைவன். ஆகவே நாம் இந்த வகையான கட்டுப்படுதலையும் வழிபடுதலையும் உதவி தேடுதலையும் அவனுக்கு மட்டுமே உரித்தாக்க வேண்டும். அவனைத் தவிர வேறு யாருக்கும் அவற்றை உரித்தாக்கக்கூடாது. இதுதான் தவ்ஹீத்.
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ
1:5. “உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.”
இந்த வாசகத்தை இன்னும் விரிவாக பின்வருமாறு மொழிபெயர்க்கலாம்:
“உன்னை மட்டுமே நாங்கள் வணங்குகிறோம். உன்னைத் தவிர வேறு யாரையும் நாங்கள் வணங்க மாட்டோம். உன்னிடம் மட்டுமே நாங்கள் உதவி தேடுகிறோம். உன்னிடம் தவிர வேறு யாரிடமும் நாங்கள் உதவி தேட மாட்டோம்.”
இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘இபாதத்’ என்ற வார்த்தைக்கு அறபு மொழியில் உச்சகட்ட பணிவுடன் மனமுவந்து கட்டுப்படுதல், கண்ணியப்படுத்துதல் என்று பொருள். திருக்குர்ஆன் இந்த வார்த்தையை உள்ளச்சத்தோடு, பணிவோடு வணங்குதல், கட்டுப்படுதல் என்ற பொருளில் பயன்படுத்துகிறது.
இங்கு உதவி தேடுதல் என்பது வணக்க வழிபாட்டின் ஒரு வகையாக இருக்கும் உதவி தேடுதலைக் குறிக்கிறது. அது அல்லாஹ் இங்கு அமைத்த விதிகளுக்கு, காரண காரியங்களுக்கு உட்பட்டு நாம் சக மனிதர்களிடம் உதவி தேடுவதைக் குறிக்கவில்லை. நாம் ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழ்கிறோம். நாம் சக மனிதர்களுக்கு உதவி செய்தும் அவர்களிடம் உதவி பெற்றும் வாழ்கிறோம். மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழக்கூடியவர்கள்தாம். சார்பு வாழ்க்கை மனித வாழ்க்கை நிலைபெறும் அடித்தளங்களில் ஒன்று. ஆனால் அல்லாஹ் அமைத்த விதிகளுக்கு, காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு உதவி தேடுவது வணக்க வழிபாட்டின் ஒரு வகையாக மாறி விடும். அந்த வகையான உதவி தேடலை அல்லாஹ்விடம் தவிர வேறு யாரிடமும் முன்வைக்கக்கூடாது.
உதாரணமாக, நாம் நோயுற்றால் மருத்துவரிடம் சென்று அவர் தரக்கூடிய மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். இங்கு மருத்துவரோ மருந்துகளோ அல்லாஹ் அமைத்த விதிகளுக்கு உட்பட்ட கருவிகள்தாம். அப்படி அல்லாமல் குறிப்பிட்ட மருத்துவருக்கு நோயைக் குணப்படுத்தும் இயல்பாகவே ஆற்றல் இருக்கிறது என்று நம்பி அவரிடம் செல்வது இறைவனுடைய ஆற்றல் அவருக்கு இருக்கிறது என்று நம்புவதற்கு ஒப்பானது. காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டு உதவி செய்யும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு அன்றி வேறு யாருக்கும் இல்லை.
முதல் நான்கு வசனங்களின் பாணியிலிருந்து சட்டென இந்த வசனம் வேறுபடுகிறது. அல்லாஹ்வின் பண்புகளை புரிந்து கொண்ட நம்பிக்கை கொண்ட மனம் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை இயல்பான குரலில் முன்வைப்பதுபோல இருக்கிறது. இபாதத் என்ற நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டே மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். மனித வாழ்வு இபாதத் இருந்தால்தான், அந்த இபாதத் அவனுக்கு மட்டுமே உரித்தாக்கப்பட்டால்தான் நிறைவடைய முடியும். அல்லாஹ்வுடைய திருப்தியை பெற்றுத்தரக்கூடிய ஒவ்வொன்றும் இபாதத்தான். அது என்பது அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதும் அவனுடைய திருப்தியைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் அவனுடைய பாதையில் பாடுபடுவதும் அவனுடைய மார்க்கத்தின் அடிப்படையில் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வதும் ஆகும்.
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ
1:6. நீ எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக.
பேரறிஞர் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி இந்த வாசகத்தை பின்வருமாறு விரித்து மொழிபெயர்க்கிறார்:
“நீ எங்களுக்கு நேரான பாதையைக் காட்டுவாயாக. அந்த பாதைதான் சரியானது என்பதற்கு எங்கள் மனதில் திருப்தியை ஏற்படுத்துவாயாக. எங்களுக்கு அந்தப் பாதையில் செல்வதற்கான ஆர்வத்தை தருவாயாக. அந்தப் பாதையில் செல்வதற்கான தடைகளை நீக்கி விடுவாயாக. அந்தப் பாதையில் செல்லும்போது எதிர்ப்படும் இடர்களிலிருந்து எங்களைப் பாதுகாத்தருள்வாயாக.”
அல்லாஹ் நமக்குக் கற்றுத் தரும் முதல் பிரார்த்தனை இதுதான். இந்த பிரார்த்தனையைத்தான் நாம் அல்லாஹ்விடம் முதலில் கேட்கிறோம். இதைத்தான் நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவன் நமக்கு நேரான வழியைக் காட்டுவதும் அந்த வழியில் செல்லக்கூடிய பாக்கியம் தருவதும் அந்த வழியில் நிலைத்திருக்கச் செய்வதும் அவன் அளித்த அருட்கொடைகளில் எல்லாம் மிகப் பெரிய அருட்கொடையாகும். அதற்கு இணையான அருட்கொடை வேறு எதுவும் இல்லை.
இந்த பிரார்த்தனை நேர்வழியில் செல்வதன், அதில் நிலைத்திருப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. அது நம்முடைய இதர தேவைகள் அனைத்தையும்விட முதன்மையானது. அதுதான் நமக்கு வாழ்வின் அர்த்தத்தைக் காட்டும். அதன்மூலமே உள்ளங்கள் உயிர்பெறுகின்ன. அதன்மூலமே நாம் இந்த உலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெற முடியும். அதன்மூலமே நாம் மனநிறைவும் நிம்மதியும் அடைய முடியும். அது அல்லாத வாழ்வு வாழ்வே இல்லை.
மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய வழிகாட்டல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
- மனிதர்களுக்கு உள்ளுணர்வின் வழியாக சரியையும் தவறையும் அவன் பிரித்துக் காட்டி இருக்கிறான். யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே அவர்களால் சரியையும் தவறையும் இயல்பாகவே அறிந்து கொள்ள முடிவது இதனால்தான்.
- அவர்களுக்கு புலனுறுப்புகளை, உணர்வுகளை வழங்கி வழிகாட்டியிருக்கிறான்.
- அவர்களுக்கு அறிவை வழங்கி வழிகாட்டியிருக்கிறான்.
- எல்லாவற்றுக்கும் மேலாக தூதர்களை அனுப்பி மனித சமூகத்திற்கு இந்த மார்க்கத்தை வழங்கி வழிகாட்டியிருக்கிறான்.
நேரான வழி என்பது அல்லாஹ் தூதர்களை அனுப்பி மனிதர்களுக்குக் காட்டியே வழியேயாகும். அது இறுதித் தூதர் முஹம்மது நபியவர்கள் மூலமாக அவன் மனித சமூகத்திற்கு வழங்கிய இஸ்லாம் என்ற மார்க்கமேயாகும். அது ஒன்றே அவனை அடைவதற்கான வழி. அது அல்லாத மற்ற வழிகள் அனைத்தும் தவறான வழிகளே. இங்கு நபித்தோழர் இப்னு மஸ்வூத் அறிவிக்கும் ஓரு ஹதீஸைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
அவர் கூறுகிறார்:
“நபியவர்கள் எங்களுக்கு ஒரு கோடு வரைந்தார்கள். பிறகு கூறினார்கள், “இது அல்லாஹ்வின் வழி.” பிறகு அதன் வலப்பக்கமும் இடப்பக்கமும் பல கோடுகள் வரைந்து கூறினார்கள், “இவை வழிகள் ஆகும். இதன் ஒவ்வொரு வழியிலும் ஷைத்தான் அமர்ந்து அதன் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கிறான்.” பிறகு நபியவர்கள் பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்: “நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். வேறு வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்து விடும். நீங்கள் தக்வா உடையவர்களாக ஆகும்பொருட்டு இவற்றை அவன் உங்களுக்கு அறிவுறுத்துகிறான்.” (6:153) (இது திர்மீதி, ஹாகிம் இடம்பெற்றுள்ள அறிவிப்பாகும்.)
இங்கு எக்கச்சக்கமான வழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வழியிலும் மனித இனத்தின் ஷைத்தான்கள் அமர்ந்து கொண்டு மனிதர்களை அதன் பக்கம் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனிதர்களை அல்லாஹ்வின் பாதையில் செல்ல விடாமல் தடுப்பதற்கும் வேறு பாதைகளில் அவர்களை மூழ்கடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. நாம் விழிப்பாக இல்லையெனில் ஷைத்தான்கள் நம்மை வழிகெடுத்து விடுவார்கள். இந்த பிரார்த்தனை நம்மை எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கச் செய்கிறது. அது மற்ற எல்லாவற்றையும்விட முதன்மையானது என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
1:7. அது நீ யார் மீது அருள்புரிந்தாயோ அவர்களின் வழி. அது உன் கோபத்திற்கு ஆளானவர்களின் வழியும் அல்ல, வழிதவறியவர்களின் வழியும் அல்ல.
பேரறிஞர் இப்னு கய்யூம் நேர்வழியின் விசயத்தில் மனிதர்களை மூன்று வகையினராகப் பிரிக்கிறார்.
- நேர்வழி இன்னதென்று அறிந்து அந்த வழியில் சென்றவர்கள். இவர்கள்தாம் தாங்கள் அறிந்ததன்படி செயல்பட்டவர்கள். இவர்களின் மீதுதான் அல்லாஹ் அருள்புரிந்திருக்கிறான்.
- நேர்வழி இன்னதென்று அறிந்த பிறகும் அதற்கு எதிரான திசையில் சென்றவர்கள். இவர்கள் தங்களின் அறிவைக் கொண்டு பயனடையாததனால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள்.
- நேர்வழியைப் பற்றிய அறிவின்றி வழிதவறிச் சென்றவர்கள்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் இந்த மூன்று வகையினரையும் குறித்து விரிவாகத் தெளிவுபடுத்துகிறான். யார் மீதெல்லாம் அவன் அருள்புரிந்திருக்கிறான், அவர்களிடம் காணப்பட்ட பண்புகள், தகுதிகள் என்னென்ன என்பதை எல்லாம் அவன் தெளிவுபடுத்தியுள்ளான். இதன்மூலம் அவர்கள் சென்ற பாதையில் செல்பவர்கள் அவர்களைப் போல அவனுடைய அருளுக்கு உரியவர்களாக ஆவார்கள் என்ற உத்தரவாதத்தையும் அவன் வழங்குகிறான். அவர்கள்தாம் நம்பிக்கையாளர்களுக்கான முன்மாதிரிகள்.
அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள் யார், அவர்களிடம் காணப்பட்ட எந்தெந்த பண்புகளின் காரணமாக அவர்கள் அவனுடைய கோபத்திற்கு ஆளானார்கள் என்பதையும் வழிதவறிச் சென்றவர்கள் யார், எந்தெந்த பண்புகளின் காரணமாக அவர்கள் வழிதவறிச் சென்றார்கள் என்பதையும் அவன் தெளிவுபடுத்துகிறான். அவர்களிடம் காணப்பட்ட பண்புகளை யார் பின்பற்றினாலும் அவர்கள் அடைந்த அதே விளைவுகளையே அடைவார்கள். அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளானவர்களும் வழிதவறியவர்கள்தாம்.
ஒரு சமூகத்தினர் அல்லாஹ்வுடைய அருளுக்கு உரியவர்களாகிறார்கள் எனில் அதற்கான தெளிவான காரணிகள் இருக்கின்றன. அதேபோன்று ஒரு சமூகத்தினர் அவனுடைய கோபத்திற்கு ஆளாகிறார்கள் எனில் அதற்கான தெளிவான காரணிகள் இருக்கின்றன. ஒரு சமூகத்தினர் வழிதவறிச் செல்கின்றனர் எனில் அதற்கான தெளிவான காரணிகள் இருக்கின்றன. தனி மனித வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளாக இருந்தாலும் ஒரு சமூகத்தின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளாக இருந்தாலும் அனைத்தும் அல்லாஹ் அமைத்த விதிகளுக்கும் அவனுடைய நாட்டத்திற்கும் உட்பட்டவையாகவே இருக்கின்றன. இங்கு குருட்டுத்தனங்கள், தற்செயல்கள் என்று எதுவும் இல்லை.
சிலர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி. சிலர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான முன்மாதிரி. முந்தைய முன்மாதிரி நாம் அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போல ஆக வேண்டும் என்பதற்கானது. பிந்தைய முன்மாதிரி அவர்கள் எந்த இடங்களில் சறுக்கி விழுந்தார்களோ அந்த இடங்களில் நாம் எச்சரிக்கையாக, விழிப்பாக இருக்க வேண்டும்; அவர்களைப் போல நாம் ஆகிவிடக்கூடாது என்பதற்கான முன்மாதிரி.
இந்த அத்தியாயம் நம்பிக்கையாளன் அல்லாஹ்வுடன் நிகழ்த்தும் இரகசியமான உரையாடலாகும். ஒவ்வொரு தொழுகையின்போதும் இந்த உரையாடல் நிகழ்கிறது. தொழுகை அதற்கே உரிய உயிரோட்டத்துடன் அமைந்து விட்டால் அது தொழுக்கூடிய மனிதனின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும். தொழுகையில் இந்த அத்தியாயத்தின் பங்கு முதன்மையானது. அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த அத்தியாயம் ஓதப்படுகிறது. இந்த அத்தியாயம் ஓதாதவரின் தொழுகை செல்லுபடியாகாது என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா கூறுகிறார்:
“அல்லாஹ் கூறுகிறான், “நான் தொழுகையை எனக்கும் என் அடியானுக்கும் இடையே சரிபாதியாக பங்கிட்டுக் கொண்டேன். அதில் பாதி எனக்குரியது. பாதி என் அடியானுக்குரியது. என் அடியானுக்கு அவன் கேட்டதெல்லாம் கிடைக்கும். அடியான், “படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறினால் “என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்” என்று அல்லாஹ் கூறுகிறான். அடியான், “அவன் அளவற்ற அருளாளன், தொடர் கிருபையாளன்” என்று கூறினால், “என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான்” என்று அல்லாஹ் கூறுகிறான். அடியான், “கூலி கொடுக்கப்படும் நாளின் அதிபதி” என்று கூறினால், “என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான்” என்று அல்லாஹ் கூறுகிறான். அடியான், “உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்” என்று கூறினால், “இது எனக்கும் என் அடியானுக்கும் உரியதாகும். என் அடியானுக்கு அவன் கேட்டதெல்லாம் கிடைக்கும்” என்று அல்லாஹ் கூறுகிறான். அடியான், “எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக. அது நீ யாருக்கெல்லாம் அருள்புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி. உன் கோபத்திற்கு ஆளானோரின் வழியுமல்ல, தவறான வழியில் சென்றோரின் வழியுமல்ல” என்று கூறினால், “இது என் அடியானுக்குரியது. என் அடியானுக்கு அவன் கேட்டதெல்லாம் கிடைக்கும்” என்று அல்லாஹ் கூறுகிறான். (முஸ்லிம்)

இந்த அத்தியாயம், மனிதன் இறைவனிடம் எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும் என்று இறைவனே கற்றுத்தந்த நடைமுறையாகும்.
இறையடியான் இதுபோன்ற பிரர்த்தனை செய்ய முன் வர வேண்டும் என்று கற்பிததல் முறையுமாகும்