உள்ளத்தின் மொழி என்று ஒன்று இருக்கிறதா? ஒரு உள்ளம் இன்னொரு உள்ளத்தில் உள்ளதை அறிந்துகொள்ள முடியுமா? எவ்வித வெளிப்படையான தொடர்பும் இன்றி அவை இணைந்துகொள்ள முடியுமா? நிச்சயமாக அப்படியொரு மொழி இருக்கிறது. ஆனால் ஒத்திசைவான, பிரியம்கொண்ட உள்ளங்களுக்கு மத்தியில் மட்டுமே அது சாத்தியமாகிறது. உள்ளுணர்வுகள் கடத்தப்படுகின்றன. எப்படி அவை கடத்தப்படுகின்றன? என்பதை நாம் அறிய மாட்டோம். நாம் அதனை உணர்கிறோம். அது எங்கிருந்து கிடைத்தது என்பதை அறியாமலேயே கடந்தும் விடுகின்றோம். நம் தர்க்க அறிவுக்குப் புரியாததைக் குறித்து நாம் எதுவும் பேசுவதில்லை.
ஒரு ஆன்மா தனக்கு ஒத்திசைவான, தனக்குப் பிரியமுள்ள இன்னொரு ஆன்மாவிடம் மொழியின்றி பேசுகிறது. அது என்ன சொல்ல, என்ன செய்ய விரும்புகிறது என்பதை சொல்லாமலேயே அறிந்துகொள்கிறது. நாம் பேசும் மொழி நம் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவதற்கான ஒரு சாதனம். பல சமயங்களில் அது உள்ளத்திற்கு மாற்றமானவற்றையும் வெளிப்படுத்துகிறது. உள்ளத்தின் மொழி அப்படியல்ல. அது உள்ளதை உள்ளபடியே உணர்த்திவிடும்.
பல சமயங்களில் நாம் தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்டு உள்ளத்தின் மொழியை கவனிக்கவே செய்கிறோம். அது நம்மை வழிநடத்தவும் செய்கிறது. உலகாயதவாதிகள் தர்க்க அறிவின் துணைகொண்டு எளிதில் வீழ்த்தப்பட்டு விடுவார்கள். சாக்குப்போக்குகள் அவர்களுக்கு உண்மைக் காரணங்களாகத் தெரிகின்றன. உள்ளத்தின் குரல் அவர்களுக்கு ஒரு ஊசலாட்டமாகத் தோன்றும் போலும்.
நமக்கு உரியவர்களை கண்ட மாத்திரத்தில் நீண்ட நாட்கள் அவர்களுடன் பழகியதுபோன்று நாம் உரிமை பாராட்டத் தொடங்கி விடுகின்றோம். அந்தத் தொடர்பு எங்கிருந்து தொடங்கியது என்பதை நாம் அறிய மாட்டோம். எத்தனையோ மனிதர்களின் தொடர்பு அதேபோன்று தொடங்கியிருந்தாலும் அவர்களின் தொடர்பு மட்டும் நமக்கு தனித்துவமானதாகத் தெரிகிறது. உள்ளங்களுக்கு மத்தியில் காணப்படும் இந்த இணைப்பே உள்ளத்தின் மொழியை சாத்தியமாக்குகிறது.
