நம்பிக்கையாளனுக்கு தொழுகை உடலின் இதயத்தைப் போல மிக அவசியமான ஒன்றாகும். இதயத்தில் ஏற்படும் பாதிப்பு எப்படி உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துமோ அப்படித்தான் தொழுகையில் ஏற்படும் குறைபாடும் அலட்சியமும் அவனுடைய வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழுகையை விடுபவன் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை விட்டு தூரமாகி விடுவான். இதுதான் நம்பிக்கையாளர்களையும் மற்றவர்களையும் வேறுபடுத்தும் அடிப்படையான அம்சம் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
தொழுகை நம்பிக்கையாளர்களை பாதுகாக்கும் பெரும் கேடயம். அதன்மூலம் அவர்கள் பெரும் பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் தப்புகிறார்கள். அது அவர்களை மானக்கேடான காரியங்களிலிருந்து பாதுகாக்கிறது. அது அவர்களின் உள்ளத்தில் இறைநினைவை பசுமையாக வைத்திருக்கிறது. இறைநினைவில் திளைத்திருக்கும் உள்ளம் பாவங்களில் மூழ்கி விடாது. இறைநினைவில் இன்பம் காணும் உள்ளம் பாவங்களில் இன்பம் காண விரும்பாது. நம்பிக்கையாளர்கள் பாவங்களிலிருந்து விலகி இருப்பதற்கும் ஒரு வேளை அவர்கள் பாவங்களில் ஈடுபட்டு விட்டாலும் அவற்றில் நிலைத்திருக்காமல் குற்றவுணர்ச்சி கொண்டு அதிகமதிகம் நற்செயல்களில் ஈடுபடுவதற்கும் தொழுகைதான் முதன்மையான காரணம். தொழுகை அவர்களின் குற்றவுணர்ச்சியை எப்போதும் கூர்மையாக வைத்திருக்கிறது.
நம்பிக்கையாளர்கள் தொழுகையை அதற்குரிய சமயங்களில் தொழுவார்கள். அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் தொழுகையில் ஈடுபடுவார்கள். அவர்களின் தொழுகை உயிரோட்டம் அற்ற ஒரு சடங்காக, ஒரு உடற்பயிற்சியாக, வழக்கமான ஒரு செயல்பாடாக இருக்காது. தொழுகை என்பது இறைவனுடன் தாங்கள் நிகழ்த்தும் உரையாடல் என்ற உணர்வு அவர்களுக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த உணர்வுதான் அவர்களின் தொழுகையை உயிரோட்டமானதாக ஆக்குகிறது. இந்த வகையான தொழுகைதான் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். கடமையை நிறைவேற்றினால் போதும் என்ற எண்ணத்துடன் வேண்டா வெறுப்பாக, சோம்பலுடன் தொழுவது நம்பிக்கையாளர்களின் தொழுகை அல்ல.
தொழுபவர்களும் தொழாதவர்களும் சமமானவர்கள் அல்ல. உயிரோட்டத்துடன் தொழுபவர்களும் கடமையை நிறைவேற்றினால் போதும் என்ற எண்ணத்துடன் வெறுமனே ஒரு சடங்காக தொழுபவர்களும் சமமானவர்கள் அல்ல. இருவரின் வாழ்க்கையிலும் தெளிவான வேறுபாடுகளை நாம் காண இயலும்.
தொழுகையை மீளக் கண்டடைதல் என்றொரு புத்தகம் இருக்கிறது. மிக அற்புதமான புத்தகம் . நான் என் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் முதன்மையான புத்தகங்களில் இதுவும் ஒன்று. அஹ்மது பஸ்ஸாம் சஈ எழுதிய இந்தப் புத்தகத்தை பேராசிரியர் இர்ஃபான் நளீமீ தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இலங்கையில் IIIT நிறுவனம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சீர்மை பதிப்பகம் இதனை மறு வெளியீடு செய்துள்ளது. இந்தப் புத்தகத்தை வாசியுங்கள்; உங்கள் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு வாசிக்கக் கொடுங்கள். நினைவூட்டியாக அமையும்பொருட்டு இந்தப் புத்தகத்தை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் புத்தகத்தை வாங்குவதற்கான லிங்க்
https://www.commonfolks.in/books/d/thouzhugaiyai-meela-kandadaithal-fuzin-texts
இந்தப் புத்தகத்தை இலவசமாக டவுண்லோடு செய்வதற்கான லிங்க்

அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் புத்தகம் ஸ்டாக் இல்லை. இந்த லிங்கில் உள்ளது.
https://www.commonfolks.in/books/d/thozhugaiyai-meela-kandadaithal