பூமியிலுள்ள அனைத்தும் மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன என்ற கண்ணோட்டம் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு மனிதப் படைப்பின் ஆரம்பம் குறித்த விசயம் இடம்பெறுகிறது. மனிதனைப் படைப்பதற்கு முன்னால் அல்லாஹ் வானவர்களுடன் நிகழ்த்திய உரையாடல் குறித்தும் படைத்த பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்படுகிறது. அடுத்து வரக்கூடிய ஒன்பது வசனங்களில் மனித வாழ்வின் ஆதாரமான விசயங்கள் தெளிவுபடுத்துகின்றன. இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவம் மிக நீளமான சம்பவம் அல்ல. குறைவான வார்த்தைகளைக் கொண்டிருக்கும் சிறிய சம்பவம்தான். ஆனால் அது பெரும் ஞானக் கருவூலங்களை உள்ளடக்கி இருக்கும் அற்புதமான சம்பவம். ஒவ்வொரு முறையும் படிக்க படிக்க, சிந்திக்க சிந்திக்க ஞானங்களையும் புதிய திறப்புகளையும் தரக்கூடிய சம்பவம்.
மனிதனுக்கு அளிக்கப்பட்ட கண்ணியம், வானவர்களைவிட அவன் கண்ணியப்படுத்தப்பட்டது, அவனுக்கும் ஷைத்தானுக்குமான பகைமையின் தொடக்கம், அந்த பகைமையின் இயல்பு, அந்தப் பகைமையை எதிர்கொள்வதற்கான வழிமுறை, இந்த உலக வாழ்வின் இயல்பு, இந்த உலக வாழ்விலும் மறுவுலக வாழ்விலும் வெற்றி பெறுவதற்கான வழிமுறை, தூதுத்துவம் என்னும் மகத்தான அருட்கொடை… இப்படி பல விசயங்களை இந்த வசனங்கள் உள்ளடக்கி இருக்கின்றன.
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ قَالَ يَاآدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ
2:30-33. “உம் இறைவன் வானவர்களிடம், “நான் பூமியில் ஒரு பிரதிநிதியை ஏற்படுத்தப் போகின்றேன்“ என்று கூறியபோது அவர்கள், “பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடியவர்களையா நீ ஏற்படுத்தப் போகின்றாய்!?. நாங்களோ உன்னைப் புகழ்ந்து உன் தூய்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவன், “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்” என்று கூறினான். அவன் ஆதமுக்கு பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான். பிறகு அவன் அவற்றை வானவர்களிடம் முன்வைத்து, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்களின் பெயர்களை எனக்குக் கூறுங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவனே! நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர வேறு எதையும் நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ நன்கறிந்தவனாகவும் ஞானம்மிக்கனாகவும் இருக்கின்றாய்” என்று கூறினார்கள். “இவர்களின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக” என்று அவன் கூறினான். அவர்களின் பெயர்களை ஆதம் அறிவித்தபோது, “வானங்களிலும் பூமியிலும் மறைவாக உள்ளவற்றை நான் நன்கறிவேன் என்றும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைத்துக் கொண்டிருப்பதையும் நன்கறிவேன் என்றும் நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று அவன் கேட்டான்.”
கலீஃபா என்ற வார்த்தைக்கு பிரதிநிதி என்று பொருள். இந்த வார்த்தை மனிதனுக்கு குறிப்பிட்ட வகையான அதிகாரமும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. மனிதன் இந்த பூமியில் அல்லாஹ்வுடைய பிரதிநிதியாவான். இந்த பூமியில் அல்லாஹ்வின் மார்க்கத்தை நடைமுறைப்படுத்தி இதனை வளப்படுத்தும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடவே அவனுக்கு குறிப்பிட்ட அளவு அதிகாரமும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. அவனைச் சோதிப்பதற்காகவே இந்த பொறுப்பும் அதிகாரமும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன.
மலாயிகா என்பது மலக் என்ற வார்த்தையின் பன்மை. அது தூதர் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. மலக்குகள் அல்லாஹ்விடமிருந்து செய்திகளை அவனுடைய தூதர்களுக்குக் கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக இருக்கிறார்கள். நாம் இந்த வார்த்தைக்கு வானவர்கள் என்று மொழிபெயர்ப்பை தெரிவு செய்துள்ளோம். வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே செயல்படுத்துபவர்கள். அவனை எந்நேரமும் துதித்துக் கொண்டும் புகழ்ந்து கொண்டும் இருப்பவர்கள். மனிதர்களுக்கு வழங்கப்பட்டதுபோன்ற அதிகாரமும் சுதந்திரமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
நாம் அறிந்திடாத இன்னொரு உலகில் நடைபெற்ற உரையாடல் இது. மனிதனைப் படைக்கப்போவதை, அவனை இந்த பூமியில் கலீஃபாவாக ஆக்கப்போவதை அல்லாஹ் வானவர்களுக்கு அறிவிக்கிறான். அவனுக்கு சுதந்திரமும் அதிகாரமும் அளிக்கப்பட்டால் அவன் குழப்பம் செய்து இரத்தம் சிந்துவானே என்று வானவர்கள் தங்களின் சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு அல்லாஹ், “நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நான் அறிவேன்” என்று பதிலளித்தான். அவனுடைய அறிவு அனைத்தையும் தழுவியது. படைப்புகளின் அறிவு என்பது படைப்பாளன் கற்றுக் கொடுத்தது மட்டும்தான். படைப்பாளன் கற்றுக்கொடுத்தவற்றைத் தாண்டி படைப்புகளால் எதையும் அறிந்துகொள்ள முடியாது. எந்த வரம்புகளாலும் பாதிக்கப்படாத, எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.
“அவன் ஆதமுக்கு பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான்”
எந்த வகையான பெயர்களை அவன் கற்றுக் கொடுத்தான்? இது தொடர்பாக குர்ஆன் விரிவுரையாளர்களிடையே பல்வேறு கருத்துகள் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு கருத்துகளை நாம் முக்கியமானவையாகக் கருதுகிறோம். ஒன்று, அவன் ஆதமுக்கு எல்லாப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். இங்கு மனிதன் ஒவ்வொன்றையும் பெயர்களைக் கொண்டே அறிந்து கொள்கிறான். பெயர்கள் மட்டும் இல்லையெனில் மனிதர்களை, சக உயிரினங்களை, படைப்பினங்களை அறிந்து கொள்வது மனிதனுக்குக் கடினமான ஒன்றாகி விடும்.
இரண்டு, இது ஆதமுடைய சந்ததியினரின் பெயர்கள், அவற்றிலும் குறிப்பாக அவர்களில் தோன்றக்கூடிய நபிமார்கள், சீர்திருத்தவாதிகள், மறுமலர்ச்சியாளர்கள், நல்லோர்கள் ஆகியோரின் பெயர்கள். மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி இரண்டாவது கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கிறார். அவர் கூறும் காரணங்களை வைத்துப் பார்க்கும்போது எனக்கும் அந்தக் கருத்தே சரியெனத் தெரிகிறது. அறபு வாசக அமைப்பும் உள்ளடக்கமும் இரண்டாவது கருத்தையே வலுப்படுத்துகின்றன. மனிதர்கள் இந்த பூமியில் குழப்பம் செய்வார்கள், இரத்தம் சிந்துவார்கள் என்று வானவர்கள் தங்களின் அச்சத்தை, சந்தேகத்தை வெளிப்படுத்தியபோது தான் கற்றுக்கொடுத்த பெயர்களை அவர்களின் முன்வைக்குமாறு அல்லாஹ் ஆதமுக்குக் கட்டளையிட்டான். அவர் அவர்களிடம் அந்தப் பெயர்களை முன்வைத்தபோது தங்களின் அச்சமும், சந்தேகமும் அறியாமையின் விளைவு என்பதைக் கண்டு கொண்டார்கள்.
“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்களின் பெயர்களை எனக்குக் கூறுங்கள்” அதாவது உங்களின் சந்தேகத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தும் அந்த மனிதர்களின் பெயர்களைக் கூறுங்கள். உடனே அவர்கள் தங்களின் அச்சமும் சந்தேகமும் தேவையற்றவை என்பதையும் அவை தங்களுடைய அறியாமையின் விளைவே என்பதையும் உணர்ந்து கொண்டார்கள். அவன் எந்த விதமான குறையுடைய பண்புகளும் அற்ற தூயவன் என்பதையும் அந்த சந்தேகம் தங்களுடைய அறியாமையின் வெளிப்பாடே என்பதையும் அவனுடைய அறிவு எல்லாவற்றையும் தழுவியது, முழுமையானது என்பதையும் நோக்கம் அற்ற, வீணான எந்தவொன்றும் அவனிடமிருந்து வெளிப்பட வாய்ப்பே இல்லை என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
“வானங்களிலும் பூமியிலும் மறைவாக உள்ளவற்றை நான் நன்கறிவேன் என்றும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைத்துக் கொண்டிருப்பதையும் நன்கறிவேன் என்றும் நான் உங்களிடம் கூறவில்லையா?” வானங்களிலும் பூமியிலும் எனக்குத் தெரியாமல் எதுவும் இல்லை. ஆதமைக் குறித்த முழுமையான அறிவு உங்களிடம் இல்லை. நீங்கள் வெளிப்படுத்தும் கேள்வியையும் அந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கும் நோக்கத்தையும் நான் அறிவேன்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
2:34. “ஆதமுக்கு சிரம்பணியுங்கள்“ என்று நாம் வானவர்களிடம் கூறியபோது இப்லீஸைத்தவிர அவர்கள் அனைவரும் சிரம்பணிந்தார்கள். அவன் கர்வம்கொண்டு சிரம்பணிய மறுத்து நிராகரிப்பாளர்களில் ஒருவனாகி விட்டான்.”
இப்லீஸ் என்ற வார்த்தைக்கு கவலையடைந்தவன், நிராகரிப்பவன், விரக்தியடைந்தவன் என்று பொருள். இப்லீஸ் என்பது அவனது பட்டப்பெயராகும். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் ஆவான். ஜின்கள் நெருப்பினால் படைக்கப்பட்டவர்கள். இவர்களுக்கும் மனிதர்களுக்கு வழங்கப்பட்டதுபோன்று குறிப்பிட்ட அளவு அதிகாரமும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. ஜின் இனத்திலும் மனித இனத்திலும் இப்லீஸைப் பின்பற்றுபவர்கள் ஷைத்தான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இப்லீஸ் அந்தச் சமயத்தில் வானவர்களுடன் இருந்தான். ஆகவே வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளை அவனையும் உள்ளடக்கியதாகவே இருந்தது.
இங்கு ஸஜ்தா (சிரம்பணிதல்) என்பது தொழுகையில் ஸஜ்தா செய்வதுபோன்ற ஸஜ்தா அல்ல. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய சிரம்பணிதல். அத்தகைய சிரம்பணிதலை வேறு யாருக்கும் முன்வைக்கக்கூடாது. அறபு மொழியில் ஸஜ்தா என்ற வார்த்தைக்கு பணிதல் என்ற பொருளும் உண்டு. இது தலையை இலேசாகக் குனிதல் போன்ற ஒரு பணிதலாக இருக்கலாம். முந்தைய சமூகங்களில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது.
மனிதனைக் கண்ணியப்படுத்தும்பொருட்டும், வானவர்களைச் சோதிக்கும்பொருட்டும் ஆதமுக்குச் சிரம்பணியுமாறு அவன் வானவர்களுக்குக் கட்டளை இட்டான். அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் சிரம்பணிந்தார்கள். ஆனால் அவர்களுடன் இருந்த இப்லீஸ் கர்வம்கொண்டு சிரம்பணியவில்லை. அவனுடைய கர்வம் சிரம்பணிய விடாமல் அவனைத் தடுத்தது. அது அவனுடைய அறிவை மழுங்கடித்தது. நெருப்பால் படைக்கப்பட்ட நான் மண்ணால் படைக்கப்பட்ட ஆதமுக்கு எப்படி சிரம்பணிய முடியும்? என்று நியாயவாதம் பேசினான். அது ஆதமுக்குச் சிரம்பணிதல் அல்ல, அது அல்லாஹ்வுடைய கட்டளைக்குக் கட்டுப்படுதல்தான் என்பதை அவன் உணரவில்லை. அதன் காரணமாக அவன் அல்லாஹ்வின் அருளை விட்டு விரட்டப்பட்டு இழிவடைந்தான்.
மனிதனுக்கும் இப்லீஸுக்குமான பகைமை இங்கிருந்துதான் தொடங்குகிறது. இங்கிருந்துதான் அவன் தன்னுடைய நோக்கத்தை உருவாக்கிக் கொண்டான். தன் நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டு அவன் அல்லாஹ்விடம் அவகாசம் வேண்டினான். அவனுக்குரிய அவகாசமும் அளிக்கப்பட்டது. நான் எப்படி அல்லாஹ்வின் அருளிலிருந்து விரட்டப்பட்டு நரகத்திற்குரியவனாக ஆக்கப்பட்டேனோ அதேபோன்று ஆதமையும் அவருடைய சந்ததியினரையும் வழிகெடுத்து நரகத்திற்குரியவர்களாக மாற்றுவேன் என்று அவன் சூளுரைத்துக் கொண்டபோது அல்லாஹ்வுடைய அடியார்களிடத்தில் அவனுடைய அதிகாரம் செல்லுபடியாகாது, அவர்களை அவன் வழிகெடுக்க முடியாது என்பதையும் அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான்.
ஷைத்தான் என்ன செய்வான்? ஊசலாட்டங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தி மனிதர்களை வழிகெடுக்க முயற்சிப்பான். மனிதர்களின் தீய இச்சைகளின் வழியாக ஊடுருவி அவர்களை வழிகெடுக்க முயற்சிப்பான். பாவங்களை அலங்கரித்துக் காட்டி அவற்றில் அவர்களை சிக்க வைப்பான். முதல் மனிதர் ஆதமுடனும் அவன் அப்படித்தான் நடந்து கொண்டான். அவரது சந்ததியில் வரக்கூடிய அனைவருடனும் அவன் அப்படித்தான் நடந்து கொள்வான்.
وَقُلْنَا يَاآدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
2:35-39. நாம் கூறினோம்: “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கே நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். இந்த மரத்தை மட்டும் நெருங்காதீர்கள். நெருங்கினால் அநியாயக்காரர்களாகி விடுவீர்கள்.” ஷைத்தான் அவ்விருவரையும் சறுகச் செய்தான். அவர்கள் இருந்த சொர்க்கத்திலிருந்து அவ்விருவரையும் அவன் வெளியெறச் செய்தான். நாம் கூறினோம்: “இங்கிருந்து இறங்கிவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பீர்கள். பூமியில் குறிப்பிட்ட நாள்வரை தங்குமிடமும் வாழ்க்கை வசதிகளும் உங்களுக்கு உண்டு.” ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார். அவன் அவரை மன்னித்துவிட்டான். அவன் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்பவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். நாம் அவர்களிடம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். யார் அந்த வழிகாட்டுதலை நிராகரித்து நம் சான்றுகளை மறுக்கிறார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.”
அல்லாஹ்வுடைய கட்டளையின்படி ஆதமும் அவரது மனைவியும் சொர்க்கத்தில் வசித்தார்கள். அங்கே அவர்கள் விரும்பியதை உண்ணலாம் என்று அல்லாஹ் கூறியிருந்தான். ஆனால் ஒரேயொரு மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம் என்று அவன் அவர்களுக்குத் தடை செய்திருந்தான். அது என்ன மரம் என்று குர்ஆன் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த சம்பவத்தைப் படிக்கும்போது இது மனித வாழ்வில் மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய அனுபவம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆதமுக்கும் அவரது மனைவிக்கும் சொர்க்கத்தில் அனைத்தும் அனுமதிக்கப்பட்டிருந்தது, அந்த ஒரு மரத்தைத் தவிர. இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் அல்லாஹ் மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். இங்கு குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே அவன் தடை செய்திருக்கிறான். அனுமதிக்கப்பட்டவற்றோடு ஒப்பிடும்போது தடைசெய்யப்பட்டவை மிகவும் சொற்பம்தான். ஆனாலும் மனித மனம் தடைசெய்யப்பட்டவற்றை விரும்புகிறதே! ஏன்? ஷைத்தான் அவற்றை அழகுபடுத்திக் காட்டுகிறான். அவை இன்றி வாழ முடியாது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறான். அவை வாழ்வின் அடிப்படையான இன்பங்கள் என்ற மாயையை ஏற்படுத்துகிறான். இதுதான் அவன் விரிக்கும் வலை. முதல் மனிதர் ஆதமுக்கும் அவன் இப்படித்தான் வலை விரித்தான். அவன் அவர்களிடம் சென்று தடைசெய்யப்பட்டவற்றை அந்த மரத்தைப் பற்றி சிலாகித்துக் கூறி அதன் மீது ஆசையூட்டினான். அந்த மரத்தின் கனியை பறித்து உண்டால் நீங்கள் வானவர்களாக, என்றும் இருப்பவர்களாக ஆகி விடுவீர்கள் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களைத் தூண்டினான். இப்படித்தான் ஆசையூட்டி அல்லது அச்சமூட்டி ஷைத்தான் மனிதர்களை வழிகெடுக்கிறான்.
அவர்கள் இருவரும் அவன் விரித்த வலையில் விழுந்தார்கள். அல்லாஹ்வின் கட்டளையை மீறினார்கள். அதன்மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள். பாவம் செய்த பிறகுதான் அவர்கள் சுயநினைவை அடைகிறார்கள். ஆசை வார்த்தைகள் கூறி தாங்கள் மயக்கப்பட்டதை, மறக்கடிக்கப்பட்டதை உணர்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையை மீறியதற்காக வருத்தப்படுகிறார்கள், வெட்கப்படுகிறார்கள். அவனிடமே மன்னிப்புக் கோரி தஞ்சமடைகிறார்கள். அவனிடம் எப்படி மன்னிப்புக் கோர வேண்டும் என்பதையும் அவனே அவருக்குக் கற்றுக் கொடுத்தான். அந்த வார்த்தைகளைக் கொண்டு இருவரும் அவனிடம் மன்னிப்புக் கோருகிறார்கள்:
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்கள் மீது கருணை காட்டவில்லை என்றால் நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்.”
ஆதம் பாவம் செய்தார். ஆனால் செய்த பாவத்திற்காக வெட்கப்பட்டார், வருத்தப்பட்டார், அவனிடம் மன்னிப்புக் கோர விரும்பினார். ஆகவே அல்லாஹ் அவர் மீது கருணை காட்டி அவருக்காக பாவ மன்னிப்பின் வாசலைத் திறந்தான். எப்படி பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்பதையும் அவன் கற்றுக் கொடுத்தான். அந்த வாசகங்கள் பாவத்தின் இயல்பைத் தெளிவுபடுத்துகின்றன. பாவம் என்பது நமக்கு நாமே செய்யும் தீங்கு.
ஆதமைப் போல அவரது சந்ததியினரும் பாவம் செய்யக்கூடியவர்கள்தாம். அவர்களும் சறுக்கி விழலாம். சறுக்கி விழுவது அவர்களின் இயல்புதான். ஆனால் பாவத்தின் மீது நீடிப்பதும் செய்த பாவத்தை நியாயப்படுத்துவதும் ஆதமின் இயல்பு அல்ல. அது இப்லீஸின் இயல்பு. அல்லாஹ்வின் கட்டளையை மீறி ஆதமும் பாவம் செய்தார், இப்லீஸும் பாவம் செய்தான். ஆனால் இருவருக்கும் மத்தியில் எவ்வளவு வேறுபாடு! ஆதம் செய்த பாவத்தை உணர்ந்து வருத்தப்பட்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோர விரும்பினார். அவனுடைய அருள் அவரைத் தழுவிக் கொண்டது. ஷைத்தான் செய்த பாவத்தை நியாயப்படுத்தி தன் பாவத்தில் நிலைத்திருந்தான். அதனால் அவன் அல்லாஹ்வின் அருளைவிட்டு விரட்டப்பட்டான். ஆதமைப் பின்பற்றுபவர்கள் அவரைப் போல மன்னிக்கப்பட்டு அருள்பாலிக்கப்படுவார்கள். ஷைத்தானைப் பின்பற்றுபவர்கள் அவனைப்போல விரட்டப்பட்டு ஷைத்தான்களாக மாறுவார்கள்.
அவர்கள் அந்த சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இந்த பூமிக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த பூமியில் வாழ்வதற்காகத்தானே அவர்கள் படைக்கப்பட்டார்கள். சுவனத்திலிருந்து அவர்கள் அந்த அனுபவத்தைக் கொண்டுதான் பூமிக்கு வந்திருக்கிறார்கள். மனித சமூகத்தின் எதிரி ஷைத்தான் ஆதமை எப்படி வழிகெடுக்க முயன்றானோ அப்படித்தான் அவரது சந்ததியினரையும் வழிகெடுக்க முயற்சிப்பான். ஆதமுக்கு ஷைத்தானை எதிர்கொண்ட அனுபவம் இருக்கிறது. இந்த சம்பவத்தின் வழியாக ஆதமுடைய பிள்ளைகளுக்கும் அந்த அனுபவம் கடத்தப்படுகிறது.
இங்கிருந்து இறங்கி விடுங்கள் என்ற வாசகம் யாரையெல்லாம் குறிக்கிறது? இப்னு அப்பாஸின் கருத்துப்படி, அது ஆதமையும் அவரது மனைவியையும் இப்லீஸையும் குறிக்கிறது. அதற்கு அடுத்து வரக்கூடிய வசனத்தில் இடம்பெறும் ‘நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள்’ என்ற வாசகம் இந்தக் கருத்தையே வலுப்படுத்துகிறது. நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பீர்கள் என்ற வாசகம் மனிதர்களும் ஷைத்தான்களும் பகைவர்களாக இருப்பார்கள் என்பதையே குறிக்கிறது. ஆதமுக்கும் அவரது சந்ததியினருக்கும் இப்லீஸும் அவனைப் பின்பற்றுபவர்களும் பகைவர்களாக இருப்பார்கள். இந்தப் பகைமை மறுமைநாள்வரை நீடிக்கக்கூடியதாகும்.
“பூமியில் குறிப்பிட்ட நாள்வரை தங்குமிடமும் வாழ்க்கை வசதிகளும் உங்களுக்கு உண்டு” இந்த உலக வாழ்வின் இயல்பு தெளிவுபடுத்தப்படுகிறது. இங்குள்ள எதுவும் நிரந்தரமானது அல்ல. இங்கு ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவு இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தவணை இருக்கிறது. எந்தவொன்றும் அதனுடைய அளவைத் தாண்டுவதும் இல்லை; அதனுடைய தவணையை மீறுவதும் இல்லை. இங்கு மனிதர்கள் தங்கியிருப்பதும் வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பதும் குறிப்பிட்ட நாள்வரை மட்டுமே.
“நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு வழிகாட்டுதல் வரும்போது யாரெல்லாம் என் வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.” மனிதனின் இயல்பில் பலவீனம் இருக்கிறது. இறைவன் அளிக்கும் வழிகாட்டலைக் கொண்டே அந்தப் பலவீனத்தைப் போக்க முடியும். அவனுடைய கருணை ஆதமின் மக்களைத் தழுவிக் கொள்கிறது. அவன் தூதர்கள் வழியாக தொடர்ந்து அந்த வழிகாட்டலை வழங்கிக் கொண்டே இருக்கிறான். அந்த வழிகாட்டலில் இறுதியானதுதான் முஹம்மது நபியவர்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்னும் வழிகாட்டல். அதுதான் வெற்றிக்கான வழி. அதனைக் கொண்டே அச்சமற்ற, கவலைகள் அற்ற நிம்மதியான ஒரு வாழ்வை வாழ முடியும். அதனைப் பின்பற்றுபவர்கள் கடந்த காலத்தை எண்ணி கவலைப்படவும் மாட்டார்கள், எதிர்காலத்தை எண்ணி பயப்படவும் மாட்டார்கள். அதனைக் கொண்டே அல்லாஹ்வின் திருப்தியையும் சுவனத்தையும் பெற முடியும். அதுதான் அவன் மனித சமூகத்திற்கு அளித்துள்ள மாபெரும் அருட்கொடை. அந்த அருட்கொடையை பொய்யெனக் கூறி நிராகரிப்பவர்கள் இந்த உலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைவார்கள். அவர்கள்தாம் நரகத்திற்கு உரியவர்கள்.
ஆதமின் இந்த சம்பவம் ஏராளமான பாடங்களை, படிப்பினைகளை உள்ளடக்கி இருக்கிறது. சிந்திக்கக்கூடியவர்கள் அவற்றை எளிதாகக் கண்டுகொள்ள முடியும். வாழ்வின் ஆதாரமான கேள்விகள் பலவற்றுக்கு இந்தச் சம்பவத்திலிருந்து பதில்கள் அறிந்து கொள்ளப்படுகின்றன.
மனிதன் இந்த பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதியாக இருக்கிறான். அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதுதான் அவன் செய்ய வேண்டிய பணி. அவ்வாறு நடைமுறைப்படுத்துவதன்மூலமே தனி மனித வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதியை, நிம்மதியைக் கொண்டு வர முடியும். அவ்வாறு செய்யாமல் தன் மன இச்சைப்படி செயல்படத் தொடங்கினால் அவன் அநியாயக்காரனாக, குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடியவனாக ஆகிவிடுவான். அவனுக்கு வழங்கப்பட்ட இந்த அதிகாரமும் சுதந்திரமும் அவனுக்கான சோதனைகள். யூதர்கள் நபியவர்களின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாததற்கான காரணம் பொறாமையும் கர்வமும்தான். அவர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும் அறபுக்களை தாழ்ந்தவர்களாகவும் கருதிக் கொண்டிருந்தார்கள். இறுதித் தூதர் தாங்கள் தாழ்ந்தவர்களாகக் கருதும் அறபுக்களிலிருந்து வந்ததை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்களில் ஒரு தரப்பினர் மூர்க்கமான நிராகரிப்பாளர்களாக ஆனார்கள். இன்னொரு தரப்பினர், ஏற்றுக்கொள்ளவும் முடியாத, வெளிப்படையாக நிராகரிக்கவும் முடியாத நயவஞ்சகத்தனம் கொண்ட நிராகரிப்பாளர்களாக மாறினார்கள். ஆதமுக்குக் கட்டுப்பட மறுத்த ஷைத்தான் என்ன காரணத்தை முன்வைத்தானோ அதே காரணத்தைத்தான் யூதர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாததற்கு முன்வைத்தார்கள். உண்மையில் அது ஆதமுக்குக் கட்டுப்படுதல் அல்ல, அது அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல் என்பதை ஷைத்தான் உணரவில்லை. அப்படித்தான் யூதர்களும் இருந்தார்கள். இந்தச் சம்பவம் யூதர்களுக்கும் அவர்களைப் போன்ற மனநிலை கொண்டவர்களுக்கும் போதுமான படிப்பினைகளைக் கொண்டதாக இருக்கிறது. ஷைத்தானின் மனநிலையைக் கொண்டவர்கள் ஷைத்தான்களாக மாறி அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையான இந்த மார்க்கத்தைவிட்டு தூரமாகி விடுவார்கள்.

மாஷாஅல்லாஹ் இப்லிஸின் குனங்கள் பற்றிய தெளிவான பதிவு, என்னுடைய வாழ்வில் நிகழ்ந்த சில மனிதர்களின் தன்மைகளை ஒப்பிட்டு தற்போது உணர்ந்து கொள்ள முடிந்தது