“அவர்கள் நமக்கு அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள்” இது இங்கு செயல்படக்கூடிய பொதுவான நியதி. அல்லாஹ் யார் மீதும் அநீதி இழைப்பதில்லை. அவர்களுக்கு எது நன்மையோ அதைத்தான் அவன் செய்யும்படி கட்டளையிட்டுள்ளான். அவர்களுக்கு எது தீங்கிழைக்குமோ அதைவிட்டுத்தான் விலகி இருக்கும்படி அவன் கட்டளையிட்டுள்ளான். அவன் அவர்களுக்கு வழங்கிய இந்த மார்க்கம் அவர்களின் நன்மையையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அவர்கள் இந்த மார்க்கத்தை எந்த அளவு பின்பற்றுவார்களோ அந்த அளவு தங்களுக்கான நன்மையை தேடிக் கொள்வார்கள். அவர்கள் இந்த மார்க்கத்தை விட்டு எந்த அளவு விலகிச் செல்வார்களோ அந்த அளவு தங்களுக்கான துன்பத்தை தேடிக் கொள்வார்கள்.
وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنْزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ
2:58,59. “இந்த நகருக்குள் நுழைந்து நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். அதன் வாசலில் நுழையும்போது அல்லாஹ்வுக்குப் பணிந்தவாறு, ‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக’ என்று கூறியவாறு நுழையுங்கள். நாம் உங்களின் பாவங்களை மன்னித்து விடுவோம். சிறந்த முறையில் செயல்படுவோருக்கு மேலதிகமாகவும் வழங்குவோம்” என்று நாம் கூறியதையும் நினைவு கூருங்கள். அநியாயக்காரர்கள் தங்களிடம் கூறப்பட்டதை வேறொரு சொல்லாக மாற்றிவிட்டார்கள். ஆகவே அநியாயம் செய்தவர்கள்மீது அவர்கள் வரம்பு மீறிக் கொண்டிருந்ததனால் வானத்திலிருந்து வேதனையை நாம் இறக்கினோம்.”
அது எந்த நகரம் என்பதை குர்ஆன் குறிப்பிடவில்லை. ஆகவே அந்த நகரத்தின் பெயரை அறிந்து கொள்வது நமக்கு அவசியமானது அல்ல. வசனத்திலிருந்து அது செழிப்பான ஒரு நகரம் என்பதும் அது அவர்கள் இருந்த ஸினாய் பாலைவனத்திற்கு அருகில் இருந்தது என்றும் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் மூசா அவர்களுடன் இருக்கும் காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம்.
அவர்கள் பாலைவனத்தில் நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்த பிறகு வெற்றிகொள்ளப்பட்ட அந்த நகரத்தில் நுழையுமாறு அல்லாஹ் அவர்களுக்குக் கட்டளையிட்டான். அங்கு அவர்கள் விரும்பிய இடத்திலிருந்து தாராளமாக உண்ணலாம் என்று அனுமதியளித்து இறுமாப்போடு அல்லாமல் பணிவோடும் நன்றி செலுத்தியவாறும் அல்லாஹ்வே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக என்று பிரார்த்தனை செய்தவாறும் அதன் வாசலில் நுழையுமாறு அவன் அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவ்வாறு பணிவோடும் பிரார்த்தனை செய்தவாறும் அவர்கள் நுழைந்தால் அவர்களின் பாவங்களை மன்னிப்பதாகவும் அவனுடைய கட்டளையை சிறந்த முறையில் நிறைவேற்றுபவர்களுக்கு இன்னும் அதிகமதிகம் வழங்குவதாகவும் அவன் வாக்களித்தான்.
அவர்களில் ஒரு தரப்பினர் அல்லாஹ் கட்டளையிட்டவாறு பணிவோடும் பாவமன்னிப்புக் கோரியவாறும் அந்த நகரத்தில் நுழைந்தார்கள். அவர்களில் அநியாயக்காரர்கள் தங்களிடம் கூறப்பட்ட சொல்லை வேறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள். அவர்கள் அந்த சொல்லை அதற்கு முரணான ஒரு பொருளைத் தரும் சொல்லாக மாற்றினார்கள். அவர்கள் எல்லாவற்றையும் பொறுப்பின்மையுடனும் பரிகாசத்துடனும் அணுகினார்கள். விளைவாக, அந்த அநியாயக்காரர்களின் மீது அல்லாஹ்வின் தண்டனை இறங்கியது. அவர்கள் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து வேதனை அவர்களை வந்தடைந்தது. அவர்கள் தண்டிக்கப்பட்டதற்கான காரணம், அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறுபவர்களாக, சத்தியத்தைவிட்டு வெளியேறி அசத்தியத்தின் பக்கம் செல்பவர்களாக, பாவங்களில் ஈடுபட்டு அவற்றில் தொடர்ந்து நிலைத்திருப்பவர்களாக இருந்தார்கள் என்பதுதான்.
وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ وَإِذْ قُلْتُمْ يَامُوسَى لَنْ نَصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُمْ مَا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ
2:60,61. “மூசா தம் சமூகத்தாருக்காக தண்ணீர் வேண்டி பிரார்த்தனை செய்ததையும் நினைவுகூருங்கள். அப்போது, “உம் கைத்தடியால் பாறையில் அடிப்பீராக” என்று நாம் கூறினோம். அவர் அடித்தபோது அதிலிருந்து பன்னிரண்டு நீருற்றுகள் பொங்கி எழுந்தன. ஒவ்வொரு பிரிவினரும் தாம் அருந்த வேண்டிய பகுதியை அறிந்துகொண்டனர். “அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள். பூமியில் குழப்பம் செய்துகொண்டு திரியாதீர்கள்.” “மூசாவே! நாங்கள் ஒரேவகையான உணவை உட்கொண்டு சகித்திருக்க முடியாது. ஆகவே எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும். அவன் பூமி விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை எங்களுக்கு வெளிப்படுத்தித் தரட்டும்” என்று நீங்கள் கூறியதை நினைவுகூருங்கள். அதற்கு மூசா கூறினார்: “சிறந்த பொருளுக்குப் பகரமாக அற்ப பொருளையா விரும்புகிறீர்கள்? அப்படியானால் நீங்கள் ஏதேனும் ஒரு நகரத்திற்குச் சென்று விடுங்கள். அங்கு நீங்கள் கேட்பவையெல்லாம் கிடைக்கும்”. அவர்கள்மீது இழிவும் இயலாமையும் சாட்டப்பட்டன. அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்துக் கொண்டும் தூதர்களை அநியாயமாகக் கொலை செய்துகொண்டும் இருந்தார்கள். இவையனைத்தும் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்து அவன் விதித்த வரம்புகளை மீறியதனால் ஏற்பட்ட விளைவுகளேயாகும்.”
மூசா தம் சமூகத்தாரை எகிப்தில் ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து விடுவித்து ஸினாய் பாலைவனத்திற்கு அழைத்து வந்தார். அது கொதிக்கும் பாலைவனமாக இருந்தது. அங்கு அவர்களுக்குப் போதுமான தண்ணீரும் உணவும் கிடைக்கவில்லை. பசுமையான, செழிப்பான பூமியான எகிப்தை விட்டு புலம்பெயர்ந்து வந்ததற்காக அவர்கள் வருத்தப்பட்டார்கள். மூசாவிடம் வந்து புலம்பினார்கள். மூசா அவர்களுக்காக அல்லாஹ்விடம் தண்ணீர் வேண்டி பிரார்த்தனை செய்தார். அவர் கையில் இருந்த கைத்தடியைக் கொண்டு ஒரு பாறையில் அடிக்கும்படி அவன் அவருக்குக் கட்டளையிட்டான். ஆச்சரியமான முறையில் அதிலிருந்து பன்னிரண்டு நீருற்றுகள் பொங்கி வழிந்தன. அவர்கள் பன்னிரண்டு குலங்களாக இருந்தார்கள். ஒவ்வொரு குலத்தாரும் தாங்கள் அருந்த வேண்டிய ஊற்றினை அறிந்து கொண்டார்கள். அந்தப் பாலைவனத்தில் தண்ணீர் கிடைக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அழிந்திருப்பார்கள். அல்லாஹ் அவர்களின் பன்னிரண்டு குலத்தாருக்காக பன்னிரண்டு நீருற்றுகளை பொங்கி வரச் செய்தது அவர்கள் மீது பொழிந்த பெரும் அருட்கொடையாக இருந்தது. அந்த நீருற்றுகளைக் கொண்டு அவன் அந்த சமூகத்தினரை அழிவிலிருந்து பாதுகாத்தான்.
அல்லாஹ் அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்த்தான்? உண்ணுங்கள், பருகுங்கள், அவன் அளித்த அருட்கொடைகளை அனுபவியுங்கள். ஆனால் அவன் விதித்த கட்டளைகளுக்கு மாறாகச் செயல்பட்டு பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள், தீமைக்கு முன்மாதிரியாக அமைந்து விடாதீர்கள். அருட்கொடைகள் வழங்கப்பட்டவர்களிடம் அவன் இதைத்தான் எதிர்பார்க்கிறான். ஆனால் அவர்களின் கோணலான, கீழான மனம் அருட்கொடையாளனின் அருட்கொடைகளை உணர மறுத்தது. அவர்கள் அடிமைப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களுக்குக் கிடைத்த அற்பமான பொருள்களையே விரும்பியது. எவ்வித முயற்சியும் செய்யாமல் அற்புதமான முறையில் அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த மன்னு, சல்வா என்ற உணவுகள் அவர்களுக்கு சலிக்கத் தொடங்கின. அவர்கள் மூசாவிடம் சென்று “ஒரே வகையான உணவை உட்கொண்டு எங்களால் சகித்திருக்க முடியாது. நீர் உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக. அவன் பூமி விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை எங்களுக்காக வெளிப்படுத்தித் தரட்டும்” என்று கூறினார்கள். தொடர்ந்து பல அற்புதங்களைப் பார்த்த பின்னரும் அவர்களின் உள்ளங்கள் ஈமானிய ஒளியால் பிரகாசமடையவில்லை. அவர்கள் தங்கள் தூதரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவில்லை. இங்கிதமின்றி அவரிடம் பேசினார்கள். தங்களுக்கும் இறைவனுக்கும் சம்பந்தம் இல்லாததுபோன்று ‘உம் இறைவன்’ என்று கூறினார்கள். இது அவர்களின் உள்ளங்கள் சந்தேகத்திலேயே இருந்தன என்பதையே காட்டுகிறது.
அற்புதமான முறையில் கண்ணியமான உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் அவர்களோ தாங்கள் எகிப்தில் அடிமைப்பட்டுக் கொண்டிருந்தபோது தங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த வகை வகையான உணவுகளின் மீது ஆசை கொண்டிருந்தார்கள். சுதந்திரத்தையும் கண்ணியத்தையும்விட வகை வகையான அந்த உணவுகள்தாம் அவர்களுக்கு முக்கியமானவையாகத் தெரிந்தன. அல்லாஹ்வின் புறத்திலிருந்து அற்புதமான முறையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த உணவுகளுக்குப் பதிலாக அவர்கள் அற்பமானவற்றை வேண்டி நின்றார்கள்.
மூசா மனம்நொந்தவராக அவர்களிடம் கூறினார், “அப்படியானால் நீங்கள் ஏதேனும் ஒரு நகரத்திற்குச் சென்று விடுங்கள். அங்கு நீங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும்.” நீண்ட கால அடிமை வாழ்க்கை உன்னதமான பண்புகளை இல்லாமலாக்கி விடுகிறது. அவர்களைப் பண்படுத்தும்பொருட்டு அடிமைத்தளையின் எச்சங்களிலிருந்து விடுவிக்கும்பொருட்டு அவன் அவர்களுக்காக அந்த பூமியைத் தேர்ந்தெடுத்தான். ஆனால் அவர்கள் தங்களின் அன்றாட உணவுகளை, பழக்கவழக்கங்களைக்கூட மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
யூதர்களின் இந்த நடத்தையில் மேற்குலகின் நாகரீக வளர்ச்சியிலும் உலகியல் முன்னேற்றத்திலும் மயங்கி தங்களின் சுதந்திரத்தைப் பறிகொடுத்து விட்ட முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய படிப்பினை இருக்கிறது என்கிறார் மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி. இவ்வாறு அவர்கள் பெற்றுக் கொண்ட உலகியல் வசதிகள் எவ்வளவு தீங்குகளையும் இழிவையும் உள்ளடக்கி இருக்கின்றன என்பதை அவர்கள் கவனிக்க மறுக்கிறார்கள். சுதந்திரமும் கண்ணியமும் மிக எளிதாகக் கிடைத்து விடக்கூடியவை அல்ல. அவை மனக்கட்டுப்பாட்டையும் பொறுமையையும் வேண்டி நிற்கின்றன.
அவர்களின் இந்த நடத்தைகள் எந்த வகையான விளைவுகளை ஏற்படுத்தின? அவர்கள் இழிவடைந்தார்கள். சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பெறுவதற்கு எந்த மாற்றத்திற்கும் உட்பட, எந்த விலையையும் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை. அவர்களின் மனவுறுதி குன்றியது. இயலாமையும் செயலின்மையும் அவர்களைச் சூழ்ந்து கொண்டன. அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்துக் கொண்டு இருந்ததனாலும் அவனுடைய தூதர்களைக் கொலை செய்ததனாலும் தொடர்ந்து அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டுக் கொண்டும் அவன் விதித்த வரம்புகளை மீறிக் கொண்டும் இருந்ததனாலும் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்கள் அவனுடைய அருளை விட்டு தூரமாக்கப்பட்டார்கள். இவை வெறுமனே அவர்களுடைய வரலாற்றின் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்தவை அல்ல. அவர்களின் வரலாறு முழுவதும் இப்படிப்பட்ட வரம்புமீறல்களினாலும் நன்றிகெட்டத்தனத்தினாலும்தான் நிரம்பிக் காணப்படுகிறது.
إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَى وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
2:62. “நம்பிக்கையாளர்கள், யூதர்கள், கிருஸ்தவர்கள், சாபியீன்கள் ஆகியோரில் யார் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களுக்கு தங்கள் இறைவனிடத்தில் கூலி இருக்கின்றது. அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.”
இங்கு நம்பிக்கையாளர்கள் என்ற வார்த்தை நபியவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களைக் குறிக்கிறது. யூதர்கள், கிருஸ்தவர்கள், சாபியீன்கள் ஆகியோர் அந்தந்த காலகட்டத்தில் தங்களின் தூதர்களைப் பின்பற்றிய முஸ்லிம்கள் ஆவர்.
தாங்கள் மட்டுமே நேர்வழி பெற்றவர்கள் என்றும் தாங்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத்தினர் என்றும் சுவனம் தங்களுக்கு மட்டுமே உரியது என்றும் யூதர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் அவர்களின் செயல்பாடுகளும் அமைந்திருந்தன. இந்த இடத்தில் அல்லாஹ் மனிதர்களின் விசயத்தில் அவன் அமைத்த நிரந்தரமான, நீதியான நியதியைத் தெளிவுபடுத்துகிறான். அந்த நியதி யூதர்களின் தப்பெண்ணத்திற்கும் பதிலாக அமைந்து விடுகிறது. எந்தவொரு சமூகத்தினரும் வெறுமனே அவர்களின் சமூகப் பெருமையைக் கொண்டோ குறிப்பிட்ட அந்த சமூகத்தில் அவர்கள் பிறந்தார்கள் என்பதைக் கொண்டோ வெற்றி பெற முடியாது. உண்மையான வெற்றி அவர்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. சரியான ஈமானும் அதன் அடிப்படையிலான நற்செயல்களுமே மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியையும் சுவனத்தையும் கொண்டு வந்து சேர்க்கின்றன. நம்பிக்கையாளர்கள், யூதர்கள், கிருஸ்தவர்கள், சாபியீன்கள் ஆகிய வார்த்தைகள் சமூகங்களின் பெயர்கள் என்ற அளவில்தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. நபியவர்களின் தூதுத்துவத்திற்கு முன்னர் தங்கள் தூதர்களின் போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்த யூதர்கள், கிருஸ்தவர்கள், சாபியீன்கள் ஆகியோரைத்தான் இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. முஹம்மது நபியவர்களின் தூதுத்துவத்திற்குப் பிறகு அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் மீது நம்பிக்கைகொள்ளாத யாரும் முஸ்லிம்களாக இருக்க முடியாது. அவர்கள் இந்த வசனத்தில் குறிப்பிடப்படவில்லை. ஹதீஸ் மறுப்பாளர்கள், சில வழிகேடர்கள் பொருள்கொள்வது போன்று இந்த வசனத்தை தனியாகப் பிரித்து நாம் பொருள்கொள்ள முடியாது. அவ்வாறு பொருள்கொள்வது பிழையான புரிதலையே உருவாக்கும். இந்த வசனத்திற்கு முன்னாலுள்ள வசனங்களும் பின்னாலுள்ள வசனங்களும் யூதர்களையே விளித்து உரையாடுகின்றன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
