இறுகிய உள்ளங்கள்

You are currently viewing இறுகிய உள்ளங்கள்

இதற்குப் பிறகு வரக்கூடிய வசனங்கள் யூதர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டதையும் அவர்கள் செய்த வரம்புமீறல்களையும் பட்டியலிட்டுக் கொண்டு செல்கின்றன.  

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ

2:63,64. “நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை, உங்களுக்கு மேலே தூர் மலையை உயர்த்தியதை நினைவுகூருங்கள். “நாம் உங்களுக்கு வழங்கியவற்றை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் தக்வா உடையவர்களாக ஆகும்பொருட்டு அதிலுள்ளவற்றை பேணிக்கொள்ளுங்கள்” அதற்குப் பின்னரும் நீங்கள் புறக்கணித்தீர்கள். அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்கள்மீது இல்லாதிருந்தால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி இருப்பீர்கள்.”

அல்லாஹ் அவர்களிடம் வாக்குறுதி வாங்கியபோது அவர்களின் தலைக்கு மேலே தூர் மலையை உயர்த்தினான். அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில்தான் அவன் அவர்களிடம் வாக்குறுதி வாங்கினான். அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதமான தவ்ராத்தின் போதனைகளை முழு மனதுடனும் ஈடுபாட்டுடனும் கடைப்பிடிக்க வேண்டும், அதனடிப்படையில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களிடம் வாங்கப்பட்ட வாக்குறுதி.

அல்லாஹ் மனிதர்களுக்கு வேதம் வழங்கியதன் நோக்கம், அதிலுள்ள வழிகாட்டல்களின், போதனைகளின் அடிப்படையில் அவர்கள் தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். அந்த வேதத்தை இனிமையான உச்சரிப்போடு ஓதிவிட்டு அதன் வழிகாட்டல்களை புரிந்து கொள்ளாமலும் அவற்றை வாழ்க்கையில் செயல்படுத்தாமலும் இருப்பது மிகப் பெரிய அநீதியும் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுவதும் ஆகும். இதுவும் வேதத்தைப் புறக்கணிப்பதுதான். அதன் வழிகாட்டல்கள் அலட்சியாக அணுகப்படக்கூடாது. அவை முழு ஈடுபாட்டோடு, பொறுப்போடு அணுகப்பட வேண்டும். வேதத்தின் போதனைகளை செயல்படுத்துவதன்மூலமே மனிதர்கள்  தக்வா என்னும் உயர்நிலையை அடைய முடியும். அதன்மூலமே அவர்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும்.

தங்கள் தலைக்கு மேலே மலை இருக்க, அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்த யூதர்கள் தவ்ராத்தின் போதனைகளை முழு ஈடுபாட்டுடனும் பொறுப்புடனும் தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோம் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால் இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பிய பிறகு கொடுத்த வாக்குறுதியை மறந்தார்கள். அதற்கு மாறாகச் செயல்பட்டு அல்லாஹ்வின் தண்டனைக்கு உரியவர்களாக ஆனார்கள். ஆனாலும் அவனுடைய அருளும் கருணையும் அவர்களைத் தழுவிக் கொண்டன. அவன் அவர்களை நஷ்டத்திலிருந்தும், அழிவிலிருந்தும் காப்பாற்றி அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்தான். அல்லாஹ் மனிதர்களை அவர்கள் செய்யும் பாவங்களுக்காக உடனுக்குடன் அவர்களை தண்டிப்பதில்லை. மாறாக குறிப்பிட்ட காலம்வரை அவன் அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறான். 

وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ

 2:65,66. சனிக்கிழமை விசயத்தில் வரம்புமீறியவர்களைப்பற்றி நீங்கள் நன்கறிந்துள்ளீர்கள். அவர்களிடம், “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்” என்று நாம் கூறினோம். அந்த ஊரை அன்று வாழ்ந்த மக்களுக்கும் அதற்குப்பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்  தக்வா உடையவர்களுக்கு அறிவுரையாகவும் ஆக்கினோம்.”

யூதர்களுக்கு சனிக்கிழமை ஓய்வுநாளாக, வணக்க வழிபாட்டிற்குரிய  புனித நாளாக ஆக்கப்பட்டிருந்தது.  அந்த நாளில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும் என்றும் எந்தவிதமான உலகியல் செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் அவர்களுக்குக் கட்டளை இடப்பட்டிருந்தது. அவர்களில் ஒரு பிரிவினர் இந்தக் கட்டளையை வெளிப்படையாக அல்லாமல் தந்திரமாக மீறினர். இந்தச் சம்பவத்தை அல்அஃராஃப் அத்தியாயத்தின் 163,164 ஆகிய வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அவர்கள் கடற்கரையோரம் அமைந்திருந்த ஓர் ஊரில் வசித்தார்கள். மீன்பிடித்தல் அவர்களின் தொழிலாக இருந்தது. சனிக்கிழமை புனித நாளாக இருப்பதால் அந்த நாளில் அவர்கள் மீன்பிடிக்கச் செல்வதில்லை. அல்லாஹ் அவர்களைச் சோதிக்க நாடினான். சனிக்கிழமையில்தான் மீன்கள் நீரின் மேல்மட்டத்திற்கு வந்தன. மற்ற நாட்களில் அவ்வாறு வருவதில்லை. இது அவர்களின் ஆசையைத் தூண்டியது. சனிக்கிழமை மீன்பிடிப்பதற்குத் தடை இருக்கிறது ஆனாலும் அந்த நாளில்தான் மீன்கள் நீரின் மேல்மட்டத்திற்கு வருவதால் ஏதேனும் தந்திரம் செய்து அவற்றை பிடிக்க வேண்டும் என்று அவர்கள் நாடினார்கள். வெள்ளிக்கிழமை மாலையில் சென்று வலைவீசி ஞாயிற்றுகிழமை காலையில் சென்று அந்த வலையில் அகப்பட்ட மீன்களை பிடித்துக் கொண்டார்கள். இதன்வழியாக அவர்கள் சனிக்கிழமை தடையையும் மதித்தாயிற்று, சனிக்கிழமையில் வரக்கூடிய மீன்களையும் பிடித்தாயிற்று என்று எண்ணிக் கொண்டார்கள். இங்கு கவனிக்க வேண்டியது, மனிதர்களை ஏமாற்றுவதுபோல அல்லாஹ்வையும் ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டதுதான். தந்திரம் செய்து மனிதர்களை ஏமாற்றி விடலாம் அல்லாஹ்வை ஏமாற்ற முடியுமா என்ன?

இதன் விளைவாக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். இந்த வரம்புமீறலில் ஈடுபட்டவர்கள் குரங்களாகவும் பன்றிகளாகவும் மாற்றப்பட்டார்கள். அவர்கள் குரங்குகளாவும் பன்றிகளாகவும் மாற்றப்பட்டது தொடர்பாக குர்ஆன் விரிவுரையாளர்களிடையே இரண்டு கருத்துகள் இருக்கின்றன. முதல் கருத்து, அவர்கள் உண்மையிலேயே பன்றிகளாகவும் குரங்குகளாகவும் உருமாற்றப்பட்டார்கள் என்பதாகும். பெரும்பாலான அறிஞர்கள் இந்தக் கருத்திற்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள். இரண்டாவது கருத்து, அவர்கள் குரங்குகளைப் போல, பன்றிகளைப் போல ஆக்கப்பட்டார்கள் என்பதாகும். அதாவது குரங்கைப் போல பேராசை கொண்டவர்களாக, பன்றிகளைப் போல இச்சைகளுக்கு அடிமையானவர்களாக அவர்கள் ஆக்கப்பட்டார்கள். இப்னு அப்பாஸின் மாணவர் முஜாஹிதும் அவரிடமிருந்து இப்னு ஜரீர் தபரீயும் இந்தக் கருத்தை முன்வைக்கிறார்கள். தற்கால விரிவுரையாளர்களான ஷைய்க் ரஷீத் ரிளா, மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி ஆகியோர் இந்தக் கருத்தையே முன்மொழிகிறார்கள். என்னுடைய கருத்தும் இதுதான்.

இந்த தண்டனை அன்று வாழ்ந்த மக்களுக்கும் அதற்குப் பிறகு வரக்கூடிய மக்களுக்கும் படிப்பினையாக ஆக்கப்பட்டது. அதாவது இந்த தண்டனையில் பாடமும் படிப்பினையும் இருக்கின்றன. இது தந்திரம் செய்து அல்லாஹ்வை ஏமாற்ற எண்ணுபவர்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கையேயாகும். நமக்கு மத்தியிலும் இப்படிப்பட்ட மனிதர்களை நாம் காண முடியும். அல்லாஹ்வின் சட்டங்களை வெறுமனே பெயரளவில் பின்பற்றக்கூடிய, அவற்றின் நோக்கத்தை விட்டுவிடக்கூடிய எத்தனையோ மனிதர்கள் நமக்கும் மத்தியிலும் இருக்கிறார்கள். தந்திரங்கள் செய்து மனிதர்களை ஏமாற்றுவதுபோல அல்லாஹ்வையும் ஏமாற்றி விடலாம் என்று எண்ணக்கூடியவர்களும் இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையேயாகும்.

பாவம் செய்து விட்டு அதற்காக வருத்தப்படுபவர்கள், அதை நினைத்து வெட்கப்படுபவர்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். ஆனால் தந்திரம் செய்து அல்லாஹ்வை ஏமாற்றி விடலாம் என்று எண்ணுபவர்கள் மீள முடியாத சுழலில் சிக்கி விடுவார்கள். ஆகவே இந்த மனநிலை எச்சரிக்கை செய்யப்பட வேண்டிய மிக ஆபத்தான மனநிலைதான்.

وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذَلِكَ فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا لَوْنُهَا قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَوْنُهَا تَسُرُّ النَّاظِرِينَ قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِنْ شَاءَ اللهُ لَمُهْتَدُونَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا ذَلُولٌ تُثِيرُ الْأَرْضَ وَلَا تَسْقِي الْحَرْثَ مُسَلَّمَةٌ لَا شِيَةَ فِيهَا قَالُوا الْآنَ جِئْتَ بِالْحَقِّ فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ  وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

2:67-73. “(பின்வரும் சம்பவத்தையும்) நினைவுகூருங்கள்: “ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான் என்று மூசா தன் சமூகத்தாரிடம் கூறியபோது, “நீர் எங்களைக் கேலி செய்கிறீரா” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “நான் மூடனாக ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்றார். “அந்தப் பசு எப்படிப்பட்டது? என்று கேட்டு உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக” என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர், “அது கிழடாகவோ, கன்றாகவோ அல்லாமல் நடுத்தரமானதாக இருக்க வேண்டும். உங்கள் இறைவனின் கட்டளையை செயல்படுத்துங்கள்” என்றார். மீண்டும் அவர்கள்  அவரிடம், “அதன் நிறத்தை எங்களுக்குத் தெளிவுபடுத்துமாறு உம் இறைவனிடம் வேண்டுவீராக” என்றார்கள். அதற்கு அவர், “அது பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய கெட்டியான மஞ்சள்நிற பசுவாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்” என்று கூறினார். அவர்கள் மீண்டும் கேட்டார்கள், “அது என்ன என்பதை இன்னும் தெளிவாக விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக. ஏனெனில் பசுக்கள் எங்களுக்கு ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன. அல்லாஹ் நாடினால் அறுக்கத் தகுதியான பசுவை நாங்கள் பெறுவோம்.” அவர் கூறினார், “அது விவசாய வேலைகளுக்கோ, நீர் இறைப்பதற்கோ பயன்படுத்தப்படாத, எவ்வித குறைகளுமற்ற ஆரோக்கியமான பசுவாக இருக்க வேண்டும்.” அதற்கு அவர்கள், “இப்போதுதான் நீர் சரியான விவரத்தைக் கூறியுள்ளீர்” என்று கூறி அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள். உங்களில் ஒருவரைக் கொன்றுவிட்டு நீங்கள் ஒருவருக்கொருவர் பழிசுமத்தியதை நினைத்துப் பாருங்கள். ஆனால் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்தினான். “அறுத்த பசுவின் ஒரு பகுதியைக் கொண்டு அந்த சடலத்தை அடியுங்கள்” என்று நாம் கூறினோம். அந்த சடலத்திற்கு அல்லாஹ் உயிரளித்ததுபோன்றே மறுமைநாளில் இறந்தவர்களுக்கும் உயிரளிப்பான். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தன் சான்றுகளை அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.”

இது மூசா (அலை) யூதர்களுக்கு மத்தியில் இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவம். இது அவர்களுடைய மன இயல்பினை துல்லியமாக படம்பிடித்துக் காட்டக்கூடிய ஆச்சரியமான சம்பவமாக இருக்கிறது. இந்த சம்பவத்தை குர்ஆன் எடுத்துரைக்கும் பாணியும் ஆச்சரியமானது. ஒரு சம்பவம் எப்படி ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வரிசைப்படி எடுத்துரைக்கப்பட வேண்டுமோ அப்படி எடுத்துரைக்கப்படாமல் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வேறு ஒரு வழிமுறையில் எடுத்துரைக்கப்படுகிறது. முதல் பகுதியில் மூசாவும் அவரது சமூகத்தாருக்கும் மத்தியில் நிகழ்ந்த உரையாடல் இடம்பெறுகிறது. அந்த உரையாடலுக்கான காரணம் சம்பவத்தின் இறுதியில் வருகிறது. அந்த உரையாடலைப் படிக்கும்போது அந்தக் காட்சி அப்படியே நம் கண்முன்னால் தோன்றி விடுகிறது.

இறைத்தூதர் மூசா ஒரு பசுமாட்டினை அறுக்குமாறு தம் சமூகத்தாருக்கு எடுத்துரைக்கிறார். அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான் என்றுதான் அவர் கூறுகிறார். அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தங்கள் தூதர் வழியாக அல்லாஹ் இட்ட கட்டளையை உடனே செயல்படுத்தியிருக்க வேண்டும். எவ்வித தயக்கமும் மறுப்பும் இன்றி தங்கள் தூதர் கூறியதை நம்பியிருக்க வேண்டும். அவர்மூலமாகத்தானே அல்லாஹ் அவர்களை கொடிய வேதனையிலிருந்து காப்பாற்றினான். அவர் அவனுடைய தூதர் என்பதற்கான தெளிவான சான்றுகளையும் அவர்கள் அறிந்தே இருந்தனர். ஆனாலும் அவர்கள் எவ்வித மரியாதையும் இன்றி தங்கள் தூதரிடம் நாங்கள் என்ன கேட்கிறோம், நீர் என்ன சொல்கிறீர் என்ற தொனியில் “எங்களைக் கேலி செய்கிறீரா” என்றார்கள். மூசா பொறுமையுடன் அவர்களுக்குப் பதிலளித்தார். மூடர்கள்தான் இப்படி பொறுப்பற்ற முறையில் பரிகாசமாக பதிலளிப்பார்கள். நான் அந்த வகையான மூடன் அல்ல. அவர்களில் ஒருவனாக ஆவதைவிட்டு நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.  

அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்த ஏதேனும் ஒரு பசுமாட்டை அறுத்திருக்கலாம். அனைவருக்கும் புரியும்படியான எவ்வித சிக்கலும் அற்ற தெளிவான கட்டளைதான் இது. ஆனாலும் சிக்கலான அவர்களின் மனம் விசயத்தை எளிதாகப் புரிந்துகொள்ள மறுத்தது. அவர்கள் அந்தக் கட்டளையை செயல்படுத்தாமல் தட்டிக் கழிக்கும்பொருட்டு தொடர்ந்து கேள்விகளை முன்வைத்தார்கள். பசுமாட்டை புனிதமாகக் கருதிக் கொண்டிருந்த எகிப்தியர்களுக்கு மத்தியில் நீண்ட காலம் அவர்கள் வாழ்ந்ததனால் அவர்களின் உள்ளத்திலும் பசுமாட்டின் மீதான பிரியம் ஊடுருவிவிட்டது போலும். பசுமாட்டை புனிதமாகக் கருதுபவர்கள் நமக்கு மத்தியிலும் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

அவர்கள் மூசாவிடம், அதன் பண்புகள் என்ன, அதன் வயது என்ன என்பதை கேட்டுச் சொல்லுமாறு வேண்டினார்கள். உம் இறைவனிடம் கேட்பீராக என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களின் உள்ளத்தில் இன்னும் இறைவன் மீதான நம்பிக்கை சரியான முறையில் ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. அவர் அல்லாஹ் கூறுவதாகவே அவர்களிடம் கூறுகிறார். அது கிழடும் அல்ல, கன்றும் அல்ல. நடுத்தர வயது கொண்ட பசுமாடு என்பதைத் தெளிவுபடுத்தி மீண்டும் தேவையற்ற கேள்வி கேட்டு தாமதப்படுத்தாமல் உடனடியாக கட்டளையைச் செயல்படுத்துமாறு அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.  ஆனாலும் அவர்கள் மீண்டும் கேள்வி கேட்கிறார்கள். எவ்வித தேவையும் இன்றி அதன் நிறம் என்ன என்று கேட்கிறார்கள். கட்டளையைச் செயல்படுத்தவும் மனமில்லை, ஒரேயடியாக முடியாது என்று மறுக்கவும் மனமில்லை. அவர்களின் அடுத்தடுத்த கேள்விகள் அவர்கள் கொண்டிருந்த தடுமாற்றத்தையும் சிக்கலான மனநிலையையுமே பிரதிபலிக்கின்றன.

அது பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தக்கூடிய கெட்டியான மஞ்சள்நிறப்பசு என்று அல்லாஹ் கூறுவதாக மூசா அவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவர்கள் மீண்டும் கேள்வி எழுப்புகிறார்கள். எங்களுக்குப் பசுக்கள் ஒன்றுபோலவே தெரிகின்றன என்ற சாக்குப்போக்கையும் முன்வைக்கிறார்கள். இன்னும் தெளிவுபடுத்தும்படி உம் இறைவனிடம் வேண்டுவீராக என்கிறார்கள். இந்த முறை அவர்கள் தங்களின் தவறை உணர்ந்திருப்பார்கள்போலும். ஆகவே அல்லாஹ் நாடினால் என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்கிறார்கள். அது விவசாய வேலைகளுக்கோ நீர் இறைப்பதற்கோ பயன்படுத்தப்படாத, எவ்வித குறைகளும் அற்ற பசுவாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுவதாக மூசா அவர்களிடம் கூறினார்.   

தேவையற்ற அவர்களின் தொடர் கேள்விகள் அவர்களுக்கு மேலும் மேலும் சிக்கலையே கொண்டு வந்து சேர்த்தன. அந்த அடையாளங்கள் கொண்ட பசு கிடைப்பதற்கு அரிய ஒன்றாக ஆகிவிட்டது. கடைசியாக ஒரு வழியாக அப்படிப்பட்ட ஒரு பசுவைக் கண்டடைந்து அதனை அறுக்க மனமின்றி அவர்கள் அறுத்தார்கள்.

தேவையற்ற கேள்விகள் மனிதர்களை சிக்கலில் ஆழ்த்துகின்றன. மார்க்க விவகாரத்திலும் அப்படித்தான். செயல்படுவதற்கு என்ன தேவையோ அவையே கேள்விகளாக வெளிப்பட வேண்டும். மனச்சிக்கல் கொண்டவர்களும் கடும்போக்கர்களும் தேவையற்ற விவகாரங்களில் ஈடுபட்டு தெளிவான மார்க்கத்தை சிக்கலான, சிரமமான ஒன்றாக ஆக்கி விடுகிறார்கள். அல்லாஹ் யாரையும் சிரமத்தில் ஆழ்த்துவதில்லை. மனிதர்கள் தங்களைத் தாங்களே சிரமத்தில் ஆழ்த்திக் கொள்கிறார்கள்.

பசுமாட்டை அறுக்குமாறு அவர்களுக்கு ஏன் கட்டளை இடப்பட்டது? அவர்களுக்கு மத்தியில் ஒரு கொலை நிகழ்ந்தது. கொலை செய்தவர் யார் எனத் தெரியவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தலானார்கள். இது அவர்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனையாக வந்து நின்றது. அவர்கள் தங்களின் தூதர் மூசாவிடம் வந்து பிரச்சனைக்கான தீர்வை வேண்டி நின்றார்கள். அதனால்தான் பசுமாட்டை அறுக்குமாறு அல்லாஹ் அவர்களுக்குக் கட்டளையிட்டான். ஆனால் அவர்களின் சிக்கலான, கோணலான மனம் அதன் நோக்கத்தை புரிந்துகொள்ள மறுத்து ஆட்சேபனைகளையும் அடுத்தடுத்து கேள்விகளையும் எழுப்பியது.

பசுமாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியைக் கொண்டு கொல்லப்பட்டவரை அடிக்குமாறு அல்லாஹ் அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவ்வாறு அவர்கள் அடித்தபோது கொல்லப்பட்டவர் உயிர் பெற்றெழுந்து தம்மைக் கொலை செய்தவரை அறிவித்தார். இப்படியாக அவர்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனையாக உருமாறிக் கொண்டிருந்த ஒரு விவகாரம் தீர்க்கப்பட்டது. கூடவே அவர்கள் அல்லாஹ் எப்படி இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான் என்பதையும் கண்கூடாகக் கண்டார்கள்.

இத்தனை அற்புதங்களைக் கண்ட பிறகும் அவர்கள் உள்ளம் உருகினார்களா?

ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذلِكَ فَهِيَ كَالْحِجارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجارَةِ لَما يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهارُ وَإِنَّ مِنْها لَما يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْماءُ وَإِنَّ مِنْها لَما يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغافِلٍ عَمَّا تَعْمَلُونَ

2:74. “இத்தனைக்குப் பிறகும் உங்களின் உள்ளங்கள் கடினமாகிவிட்டன. அவை கற்பாறைகளைபோன்று, மாறாக அவற்றைவிடவும் கடினமாகிவிட்டன. சில கற்பாறைகளிலிருந்து ஆறுகள் பொங்கி ஓடுகின்றன. அவற்றுள் சில பிளந்து அவற்றிலிருந்து நீர் வெளிப்பட்டுவிடுகிறது. அவற்றுள் சில அல்லாஹ்வின் அச்சத்தால் உருண்டுவிடுகின்றன. நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.”

சான்றுகள், அற்புதங்கள் அவர்களின் உள்ளங்களை உருக்கியிருக்க வேண்டும்; அவர்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைத்திருக்க வேண்டும்; அவர்களின் சந்தேகங்களைப் போக்கி உறுதியான ஈமானை அவர்களுக்கு அளித்திருக்க வேண்டும். ஆனாலும் அவையனைத்தையும் கண்ட பிறகும் அவர்களின் உள்ளங்கள் உருகிவிடவில்லை. அவை கற்களைப் போன்று மாறாக அவற்றைவிடவும் கடினமானவையாக ஆகிவிட்டன. கற்கள் அவற்றுக்கே உரிய இயல்பில் நீடிக்கின்றன. அவை கடினமானவையாக இருந்தாலும் மென்மையான நீரைக் கொண்டு தாக்கமடைகின்றன.

தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள், எச்சரிக்கைகள் எதையும் கொண்டு அவர்கள் பயனடையவில்லை. அவை தங்களின் உள்ளங்களில் ஊடுருவ அவர்கள் அனுமதிக்கவேயில்லை. அவர்களின் செயல்பாடுகளை அவன் கவனிக்காமல் இல்லை. அற்புதங்களை, அருட்கொடைகளைக் கொண்டு பண்படாத உள்ளங்கள் தண்டனைகளைக் கொண்டுதான் பண்படும். சட்டென அவர்கள் எதிர்பாராத விதத்தில் அவனுடைய தண்டனை அவர்களை வந்தடையும்.

தொடர் பாவங்களால் உள்ளங்கள் இருளடைகின்றன. இருளடைந்த உள்ளங்கள் கடினமானவையாகி விடுகின்றன. கடினமாகி விட்ட உள்ளங்களில் எந்த அறிவுரையும் ஊடுருவ முடியாது. அவற்றுக்கு நன்மைகள் கசப்பானவையாகவும் தீமைகள் இனிப்பானவையாகவும் தெரிகின்றன.   

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply