நபியவர்களை, இந்தக் குர்ஆனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு யூதர்கள் பல்வேறு சாக்குப்போக்குகளை, விசித்திரமான வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சமயம், நாங்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சுவனம் எங்களுக்கு மட்டுமே உரியது என்றார்கள். இதன்மூலம் உங்களை நாங்கள் பின்பற்றத் தேவையில்லை என்பதையே மறைமுகமாகச் சுட்டினார்கள். இன்னொரு சமயம், முஹம்மது நபிக்கு ஜிப்ரீல்தான் வஹியைக் கொண்டு வருகிறார். அவர் தீய செய்திகளை, தண்டனைகளைக் கொண்டு வரும் வானவர். அவருக்குப் பதிலாக மீகாயில் கொண்டு வந்திருந்தால் நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போம் என்றார்கள். அடுத்து வரும் வசனங்கள் அவர்களுடைய வாதங்களின் ஓட்டாண்டித்தனங்களை அம்பலப்படுத்துவதோடு அவற்றுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணங்களைத் தெளிவுபடுத்துகின்றன.
قُلْ إِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْآخِرَةُ عِنْدَ اللهِ خَالِصَةً مِنْ دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ وَلَنْ يَتَمَنَّوْهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَنْ يُعَمَّرَ وَاللهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ
2:94-96. “நீர் கூறும்: “அல்லாஹ்விடம் உள்ள மறுமையின் வீடு மற்ற மக்களுக்கு அன்றி உங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள். அவர்கள் சேர்த்துவைத்த பாவங்களினால் அவர்கள் ஒருபோதும் மரணத்தை விரும்ப மாட்டார்கள். அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். எல்லா மக்களைவிடவும், இணைவைப்பாளர்களை விடவும் வாழ்வின்மீது அதிக பேராசையுடையவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆயினும் அவர்களின் நீண்ட ஆயுள் அவர்களை வேதனையிலிருந்து காப்பாற்றிவிடாது. அவர்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்.”
நாங்கள் இறைவனின் செல்லப் பிள்ளைகள்; அவனால் தெரிவு செய்யப்பட்டவர்கள். எங்களுக்காகவே அவன் சுவனத்தைப் படைத்திருக்கிறான். எங்கள் சமூகத்தினர் மட்டுமே அதில் நுழைய முடியும் என்று யூதர்கள் கூறி வந்தார்கள். இந்த உலகிலும் சரி, மறுவுலகிலும் சரி அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று அவர்கள் வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியெனில் உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களுக்காகவே தயார்படுத்தப்பட்டிருக்கும் அந்த சுவனத்தை அடைவதற்காக நீங்கள் மரணத்தை விரும்புங்கள் என்று அவர்களிடம் கூறுமாறு அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிடுகிறான்.
யூதர்கள் மரணத்தை விரும்ப மாட்டார்கள். சுவனத்தை அடைவதற்காக அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு மரணமடைய அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வடிகட்டிய உலகியல்வாதிகள். வாழ்வு கண்ணியமானதாக இருந்தாலும் இழிவானதாக இருந்தாலும் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற பேராசை கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் பாவங்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள். அத்தனை பாவங்களோடு எப்படி அவர்கள் அல்லாஹ்வை சந்திக்க முடியும்?
இங்கு மரணத்தை விரும்புவது என்பது உளச்சோர்வு கொண்டவர்களுக்கு ஏற்படக்கூடிய தற்கொலை எண்ணம் அல்ல. அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில், அவனுடைய பாதையில் போரிட்டு மரணமடைய வேண்டும் என்று விரும்புவது, அவனுக்காகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்று விரும்புவது. தம் முதுகில் பாவப் பொதிமூட்டைகளைச் சுமந்திருப்பவர் எப்படி அல்லாஹ்வின் சந்திப்பை விரும்ப முடியும்? அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பாவங்களினால் அவர்கள் ஒருபோதும் மரணத்தை விரும்ப மாட்டார்கள் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
நம்பிக்கையாளர்கள் மரணத்தை கண்டு அஞ்சுவதும் இல்லை; அதனை வெறுப்பதும் இல்லை. மரண வேளை நெருங்கி விட்டால் எங்கே செல்லப் போகிறோம் என்ற குழப்பமோ பீதியோ அவர்களிடம் காணப்படாது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதுபோல மிக இலகுவாக இவ்வுலகிலிருந்து மறுவுலகை நோக்கி அவர்கள் இடம்பெயர்கிறார்கள். இவ்வுலகம் நிரந்தரமானது அல்ல, எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கான அழைப்பு வரலாம் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
உலகியல்வாதிகளால் அப்படி எண்ண முடியாது. அவர்களுக்கு மரணம் என்பது பேரிடி. மறுவுலகிற்கான எந்த முன்னேற்பாட்டிலும் அவர்கள் ஈடுபடாததனாலும் தொடர்ந்து பாவங்களில் ஈடுபடுவதனாலும் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்பாததனாலும் மரணத்தை எதிர்கொள்வதற்கான எந்த வலிமையையும் அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள். யூதர்கள் அப்படித்தான் இருந்தார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட போதனைகளை மறந்தார்கள். போலியான கண்ணோட்டங்களை, விசித்திரமான வாதங்களை உருவாக்கி தங்களைத் தாங்களே திருப்திபடுத்திக் கொண்டார்கள்.
மற்ற மனிதர்களுக்கு அன்றி எங்களுக்காக மட்டுமேதான் சுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறும் அவர்கள் மற்ற மனிதர்கள் அனைவரையும்விட, ஏன் இணைவைப்பாளர்களைவிட வாழ்வின் மீது அதிகம் பேராசை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது எந்த அளவு நகைமுரணாக இருக்கிறது. நீண்ட காலம் அவர்கள் இங்கு வாழ்வது அவர்களுக்கு நன்மையை அளிக்குமா? நன்மை செய்ய வேண்டும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற வேண்டும் என்பதற்காக நீண்ட காலம் வாழ்வது நன்மையளிக்கும். ஆனால் அவர்களுக்கு இந்த வகையான நோக்கம் எதுவும் இல்லையே!. ஆகவே அவர்கள் எத்தனை வருடங்கள் இங்கு வாழ்ந்தாலும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அவர்களால் தப்பவே முடியாது. அவர்களின் செயல்பாடுகளை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அவனுக்குத் தெரியாமல் அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது.
قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللهِ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ مَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ فَإِنَّ اللهَ عَدُوٌّ لِلْكَافِرِينَ وَلَقَدْ أَنْزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ وَمَا يَكْفُرُ بِهَا إِلَّا الْفَاسِقُونَ أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ
2:97-100. நீர் கூறும்: “ஜிப்ரீலுக்கு எதிரியாக இருப்பவர் அறிந்துகொள்ளட்டும், அவர்தான் உமது உள்ளத்தில் அல்லாஹ்வின் கட்டளைப்படி இந்தக் குர்ஆனை அருளினார். அது தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்துகிறது; நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் நற்செய்தியாகவும் இருக்கின்றது. யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய வானவர்களுக்கும், தூதர்களுக்கும் ஜீப்ரீலுக்கும் மீக்காயிலுக்கும் எதிரிகளாக இருக்கின்றார்களோ அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கின்றான். நாம் உமக்கு தெளிவான சான்றுகளை வழங்கியுள்ளோம். பாவிகளைத்தவிர வேறு எவரும் அவற்றை மறுக்க மாட்டார். அவர்கள் ஏதேனும் ஒப்பந்தம் செய்யும்போதேல்லாம் அவர்களில் ஒருபிரிவினர் அதனை முறித்துவிடவில்லையா? மாறாக அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.”
பொறாமை எப்படி விசித்திரமான வாதங்களைக் கொண்டு வரும் என்பதற்கான ஓர் உதாரணம்தான் யூதர்கள் வானவர் ஜிப்ரீல் குறித்து முன்வைத்த இந்த வாதம். அவர்களில் ஒருவர் நபியவர்களிடம் வந்து, “உங்களுக்கு வஹியைக் கொண்டு வரும் வானவர் யார்?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “ஜிப்ரீல்தான் வஹியைக் கொண்டு வருகிறார்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், “அவர் எங்களின் எதிரியாயிற்றே! அவர் எப்போதும் வேதனையின், தோல்வியின் செய்தியைக் கொண்டு வரும் வானவராயிற்றே! மீகாயில்தான் அருளின், மழையின், செழிப்பின் செய்திகளைக் கொண்டு வரும் வானவர். அவர் உங்களுக்கு வஹியைக் கொண்டு வந்திருந்தால் நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போம்” என்று கூறினார். இது அவர்கள் முன்வைத்த ஒரு சாக்குப்போக்கு. எந்தக் காரணமும் இன்றி நபியவர்களை நிராகரிக்க முடியாது என்பதால் இதுபோன்ற சாக்குப்போக்குகளை அவர்கள் முன்வைத்தார்கள்.
என்ன ஆனாலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற முன்முடிவுகளுடன் இருப்பவர்களை நாம் ஒருபோதும் திருப்திபடுத்த முடியாது. அவர்கள் தங்களின் நிராகரிப்பை வெளிப்படையாக அறிவிக்க முடியாமல் பொய்யான சாக்குப்போக்குகளை முன்வைத்து நிராகரிக்கிறார்கள். அநியாயக்காரன்கூட தான் செய்வதை அநியாயம் என்று ஒத்துக் கொள்வதில்லை. அவன் அதற்கும் நியாயவாதத்தை முன்வைக்கிறான்.
ஜிப்ரீலை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வானவர் என்பதை அவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். அவருக்கு சுய அதிகாரம் இருக்கிறதா, அல்லாஹ்வின் அனுமதி இன்றி அவரால் தாமாக வர முடியுமா என்பதையெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. பொறாமை அவர்களின் அறிவை மழுங்கடித்து விட்டது. பொறாமை மனிதர்களின் அறிவை மழுங்கடித்து விடும்.
அவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து குர்ஆனை நபியவர்களின் உள்ளத்தில் இறக்கிய தூதர். அந்தக் குர்ஆன் அவர்களிடம் உள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் நற்செய்தியாகவும் இருக்கின்றது. அவர்கள் தங்களிடம் உள்ள தவ்ராத்தைப் பின்பற்றியிருந்தால் இந்தக் குர்ஆன் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் நற்செய்தியாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர்களோ தங்களை நம்பிக்கையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாக இருக்கிறார்கள்.
யார் அல்லாஹ் அனுப்பிய வானவர்களில் ஒருவரையோ தூதர்களில் ஒருவரையோ நிராகரிக்கிறார்களோ அவர்கள் வானவர்கள் அனைவரையும் தூதர்கள் அனைவரையும் நிராகரித்தவர்கள் ஆவர். உண்மையில் அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் ஆவர். அல்லாஹ் அனுப்பிய வானவரையோ தூதரையோ நிராகரிப்பது அல்லாஹ்வை நிராகரிப்பதாகும். அவன் அனுப்பிய வானவரையோ தூதரையோ பகைப்பது அவனைப் பகைப்பதாகும்.
நபியவர்களுக்கு அருளப்பட்ட இந்த வேதம் தெளிவான சான்றுகளைக் கொண்டிருக்கிறது. இந்த வேதமே தெளிவான சான்றாகத்தான் இருக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட மறுக்கும் பாவிகளைத் தவிர வேறு யாரும் இந்த சான்றுகளை நிராகரிக்க மாட்டார்கள். பிரச்சனை அவர்களிடம் காணப்படும் மீறல் மனப்பான்மைதான். அதுதான் அவர்களை நிராகரிக்கத் தூண்டுகிறது. அதனால்தான் அவர்கள் எந்த ஒப்பந்தத்தையும் மதிப்பதில்லை, எந்த வாக்குறுதியையும் பேணுவதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களிடமிருந்து மீறல் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
