இரகசியங்களின் சுரங்கம்

You are currently viewing இரகசியங்களின் சுரங்கம்

மனிதனின் ஆழ்மனம் செயல்படும் விதம் அற்புதமானது. அது அவனைக் குறித்தே அவனுக்கு எதுவும் தெரியாது என்பதைக் காட்டக்கூடியது. அவன் தன்னைத் தானே ஆழ்ந்து கவனிக்கும்போதுதான் அது கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு புலப்படத் தொடங்குகிறது. ஆனாலும் அவன் இரகசியங்களின் சுரங்கம்தான். தோண்டத் தோண்ட அவன் புலப்பட்டுக் கொண்டே வருவான். அவனுடைய ஆழ்மனதில் ஏதோ ஒரு விருப்போ வெறுப்போ ஒவ்வாமையோ பதிந்து விட்டால் அவனையும் மீறி அது அவனுடைய பேச்சிலோ செயல்பாட்டிலோ வெளிப்பட்டு விடும்.

நான் என்னைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு விதமான பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். ஆனால் அப்பட்டமாக நான் சறுக்கி விடும்போது நான் செய்த அத்தனை பயிற்சிகளும் வீண்தானா என்று எனக்குத் தோன்றுகிறது என்று நண்பர் ஒருவர் கூறியபோது எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது. அந்த பயிற்சிகள் ஏதோ ஒரு வகையில் உங்களுக்குப் பயனளிப்பையே. ஆனால் எல்லாவற்றையும் எளிய சூத்திரங்களால் வென்றுவிட முடியாது என்பதுதான் இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் எளிய படிப்பினை என்றேன்.

நாம் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட விதியை நோக்கிச் செல்கிறோம். ஆனால் நாம் இழுத்துச் செல்லப்படவில்லை. நமக்கு வழங்கப்பட்ட தெரிவுக்கும் நமக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிக்கும் மத்தியிலான தொடர்பைக் குறித்து அறிந்து கொள்வதற்கு நம்மிடம் எந்த அறிதல் முறையும் இல்லை. தவறு நிகழ்ந்தால் அதற்கு நாம்தாம் பொறுப்பு. திடீரென நாம் அடையக்கூடிய உச்சத்திற்கோ நாமே எதிர்பார்க்காத நம்முடைய மாற்றங்களுக்கோ நாம் பொறுப்பாக முடியாது. அது நமக்கான சோதனையே. எந்தச் சமயத்தில் என்ன நிகழும் என்று யாருக்கும் தெரியாது. நம் கணிப்புகள் அத்தனையையும் தாண்டி நாமே எதிர்பார்க்காத ஒன்றை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். எந்தவொன்றும் சட்டென நிகழ்ந்து விடுகிறது. நிகழ்ந்த பிறகே அதற்கான காரணங்களை நாம் கற்பித்துக் கொள்கிறோம். புதிய ஒரு சூத்திரத்தை உருவாக்கி அந்த நிகழ்வை புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். அது ஏற்கனவே இருக்கும் சூத்திரங்களோடு இணைந்து அறியப்பட்டதாக ஆகிவிடுகிறது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பெரும் சூன்யவெளிக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதாக நாம் உணர்வோம். இறைவனின் கரத்தைப் பற்றிக் கொள்ளவில்லையெனில் நம் வாழ்வு அர்த்தமற்றதாகி விடும். சட்டென ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளும் பேரிழப்புகளும் நம்மை முற்றிலுமாக நிலைகுலையச் செய்து விடும். நம்பிக்கைக்கும் அறிதலுக்குமான இடைவெளியை ஈமானிய அனுபவங்களே நிரப்ப முடியும். ஈமானிய அனுபவங்களைக் கொண்டே நம்முடைய நம்பிக்கை யாராலும் தகர்க்க முடியாத உறுதியான அறிதலாக மாற்றமடைகிறது. அதுதான் ஞானம்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply