என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்க்கும்போது என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. நான் தேடிச் சென்ற பல விசயங்களை என்னால் அடைய முடியாமல் போயிருக்கிறது. அதே சமயம் எந்த முயற்சியும் செய்யாமல் பல விசயங்கள் என்னைத் தேடி வந்திருக்கின்றன. எனக்கானதைத் தேடி நான் எங்கோ சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத புறமாக வேறு ஒன்று என்னைத் தேடிவந்து எனக்கானதாக மாறியிருப்பதை உணர்ந்திருக்கிறேன். என் முயற்சி என்பது என்ன? அதன் பெறுமதி என்ன என்று பல சமயங்களில் குழம்பியிருக்கிறேன். ஒன்றல்ல, இரண்டல்ல. இப்படி ஏராளமான உதாரணங்கள் என் கண் முன்னால் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
எந்தவொன்றைக் குறித்தும் இது என்னால்தான் நிகழ்ந்தது என்றோ இவை என் திறமையின் விளைவு என்றோ சொல்ல நான் வெட்கப்படுகிறேன். மனதளவில்கூட அப்படி நினைப்பதில்லை. சில சமயங்களில் பெருமையடிக்கும்பொருட்டு வார்த்தையளவில் அப்படி சில வார்த்தைகள் வெளிப்பட்டிருக்கலாம். பகலின் வெளிச்சம்போல என் மனம் இந்த விசயத்தைத் தெள்ளத் தெளிவாக அறிந்திருக்கிறது. இது எனக்கு செயலின்மையைத் தூண்டுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறுவேன். என்னால் இயன்ற முயற்சிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன். அப்படித்தான் நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். நாம் யாரும் செயல்படாமல் இருப்பதில்லை. நம்மால் இயன்றவரை செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நம் தோல்விக்குக் காரணம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே விதியின் மீது பழியைப் போடுகிறோம். இந்த விசயத்தை தர்க்கத்தை கொண்டு அணுக முடியாது. தர்க்கத்தைக் கொண்டு அணுகுபவர்கள் ஒன்று இந்தப் பக்கம் சாய்வார்கள் இல்லையெனில் அந்தப் பக்கம் சாய்வார்கள். இரண்டுமே ஆபத்தானவைதாம். ஆனாலும் நம்மால் இந்த விசயத்தை உணர்ந்துகொள்ள முடியும்.
நமக்குத் தெரிவு செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னொரு புறம் நாம் நமக்கானதை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறோம். இந்த இரண்டுக்கும் மத்தியில் நம்மால் விதியைப் புரிந்துகொள்ள முடியும். நமக்கு வழங்கப்பட்டுள்ள தெரிவு செய்யும் சுதந்திரத்தையும் நாம் இழுத்துச் செல்லப்படுகிறோம் என்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் இவை ஒவ்வொன்றின் உண்மை நிலையைக் குறித்து நாம் அறிய மாட்டோம். செயல்படும்படி, முயற்சி செய்யும்படி நாம் பணிக்கப்பட்டிருக்கிறோம். இந்த இடத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள தெரிவு செய்யும் சுதந்திரம் நமக்கு நினைவுக்கு வர வேண்டும். அந்த செயல்பாட்டின், முயற்சியின் விளைவாக எது கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில் நாம் நமக்கானதை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறோம் என்பது நினைவுக்கு வர வேண்டும். செயல்படும்போது விதியை எண்ண வேண்டிய அவசியமில்லை. முடிவில் நாம் எதிர்பார்த்த ஒன்று கிடைக்காதபோது விதியை எண்ண வேண்டிய அவசியமிருக்கிறது. ஏனெனில் அந்தச் சமயத்தில் அது ஒன்றுதான் நமக்கு ஆறுதல் அளிக்க முடியும். அது ஒன்றுதான் நம்முடைய கேள்விக்குப் பதிலளிக்க முடியும்.
