وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَابَنِيَّ إِنَّ اللهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَا كَسَبْتُمْ وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ
2:130-134. “தன்னை மூடனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்ராஹீமின் மார்க்கத்தை வேறு யார்தான் புறக்கணிப்பார்? நாம் இவ்வுலகில் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராக இருப்பார். அவரது இறைவன் அவரிடம், “கட்டுப்படு” என்று கூறியபோது, “படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனுக்கு நான் கட்டுப்பட்டு விட்டேன்” என்று அவர் கூறினார். இந்த மார்க்கத்தையே இப்ராஹீமும் யஅகூபும் தம் பிள்ளைகளுக்கு வஸியத்தாக முன்வைத்தார்கள். “என் பிள்ளைகளே! அல்லாஹ் உங்களுக்காக இந்த மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளான். ஆகவே நீங்கள் முஸ்லிம்களாக – அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களாக – அன்றி மரணித்துவிடாதீர்கள்” என்று அறிவுறுத்தினார்கள். யஅகூபுக்கு மரணம் நெருங்கிய சமயத்தில் நீங்கள் அங்கே இருந்தீர்களா? அப்போது அவர் தம் பிள்ளைகளிடம், “பிள்ளைகளே! எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்?” என்று கேட்டபோது அவர்கள், “உங்கள் இறைவனும் உங்களின் முன்னோர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள் “அவர்கள் கடந்துபோன சமூகத்தினர். அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கு. நீங்கள் சம்பாதிதவை உங்களுக்கு. அவர்களின் செயல்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.”
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இந்த மார்க்கம்தான் இப்ராஹீமின் மார்க்கம். இப்ராஹீம் செய்த பிரார்த்தனையின் வெளிப்பாடாகத்தான் நபியவர்கள் அனைவருக்கும் உரிய இறுதித் தூதராக அனுப்பப்பட்டார்கள். நபியவர்களை இறுதித் தூதராக ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிப்பவர்கள் ஆவர். நாங்கள் இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுகிறோம் என்று கூறிக் கொண்டு நபியவர்கள் கொண்டு வந்த இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் அல்ல. அவர்கள் தங்களின் மன விருப்பங்களையே பின்பற்றுகிறார்கள். உண்மையில் அவர்கள் மூடர்கள். வெறுப்பும் பொறாமையும் அவர்களின் அறிவை மழுங்கடித்து விட்டன. அவர்கள் தங்களின் கீழான உணர்வுகளுக்கு அடிமையாகி இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை இழந்து விட்டார்கள்.
இந்த வசனம் யூதர்களை, அவர்களைப் போன்றவர்களை விளித்து உரையாடுகிறது. அவர்கள் தாங்கள் என்ன கூறுகிறார்களோ அதற்கு எதிரான திசையில் இருப்பவர்கள். உண்மையில் இதைவிட மூடத்தனம் வேறு என்ன இருக்க முடியும்? இந்த வசனம் அவர்களிடம் காணப்படும் மூடத்தனத்தையும் அவர்களின் பரிதாபகரமான நிலையையும் ஒருசேர சுட்டுகிறது.
இந்த மார்க்கத்தைக் கொண்டுதான் அல்லாஹ் இப்ராஹீமை இந்த உலகில் தூதராக, இமாமாகத் தெரிவு செய்தான். அவரது சந்ததியில் இருந்து தூதர்களை அனுப்பி, அவர்களுக்கு வேதங்களை வழங்கி அவரைக் கண்ணியப்படுத்தினான். தமக்கு வழங்கப்பட்ட பணியை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றியதன்மூலம் அவர் மறுமையில் அவனுக்கு விருப்பமான, நெருக்கமான நல்லவர்களின், சுவனவாசிகளின் அணியில் இணைந்திருப்பார்.
இஸ்லாம் என்றால் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்படுதல், அவனிடம் முழுமையாக சரணடைந்து விடுதல் என்று பொருள். இந்த வார்த்தையிலிருந்துதான் முஸ்லிம் என்ற வார்த்தையும் உருவாகிறது. அதாவது அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு, அவனுடைய விருப்பங்களுக்கு தம்மை முழுமையாக ஒப்புக் கொடுத்தவர் என்று பொருள். இந்த இஸ்லாத்தைக் கொண்டுதான் அல்லாஹ் தூதர்களை அனுப்பினான். மனிதர்களிடம் வேண்டப்படுவது இந்த இஸ்லாம்தான். இதுதான் இறைவனை அடைவதற்கான ஒரே வழி.
அல்லாஹ் இப்ராஹீமை பல்வேறு சோதனைகளைக் கொண்டு சோதித்தான். அவர் ஒவ்வொரு சோதனையிலும் முழுமையாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். இந்த பண்புதான் இமாமத் என்னும் பெரும் பதவிக்குத் தகுதியானவராக அவரை ஆக்கியது. அல்லாஹ்விடத்தில் கண்ணியத்தைப் பெறுவதற்கான ஒரே வழி, அவனுடைய கட்டளைகளுக்கு, அவனுடைய விருப்பங்களுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதுதான். நாங்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள், அவர்களின் பரம்பரையினர் என்று கூறுவதைக் கொண்டோ இன்னபிற போலிப் பெருமிதங்களைக் கொண்டோ அந்த நிலையை அடைய முடியாது. செயல்பாடுகள் அற்ற வெற்றுப் பெருமிதங்கள் மனிதர்களை வழிகேடுகளின் பக்கம் தள்ளி விடுகின்றன.
வஸிய்யத் என்றால் ஒரு மனிதன் மரண வேளையிலோ இன்னபிற முக்கியமான சந்தர்ப்பத்திலோ செய்யும் உபதேசம். இதனை தமிழில் அவரது இறுதி உபதேசம் என்றோ அவர் வாழ்க்கையில் அளித்த முக்கியமான அறிவுரை என்றோ கூறலாம். இறைத்தூதர்களும் அவர்களின் வழிவந்தவர்களும் வஸிய்யத் செய்யும் வழக்கம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இப்ராஹீமும் அவரது பேரன் யஅகூபும் தங்களின் பிள்ளைகளுக்கு இந்த மார்க்கத்தை பற்றிக் கொள்வதையே வஸிய்யத்தாக, இறுதி உபதேசமாக அளித்திருக்கிறார்கள். யஅகூப் நபிதான் இஸ்ராயீல் என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறார். அவரது பெயரால்தான் திருக்குர்ஆன் யூதர்களை ‘இஸ்ராயீலின் மக்களே’ என்று அழைக்கிறது. சிலை வழிபாடும் இன்னபிற ஷைத்தானிய வழிபாடுகளும் பரவியிருந்த அக்காலகட்டத்தில் இப்ராஹீமும் அவரது வழிவந்தவர்களும் தங்களின் பிள்ளைகள் அல்லாஹ்வை மட்டுமே வழிபடக்கூடியவர்களாக, அவனுக்கு மட்டுமே கட்டுப்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும், அவன் அளித்த இந்த மார்க்கத்தை மட்டுமே அவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே கவலையாக இருந்தது. அவர்களில் ஒவ்வொருவரும் தங்களின் பிள்ளைகளுக்கு இந்த மார்க்கத்தைப் பற்றிக் கொள்வதையே இறுதி உபதேசமாக முன்வைத்திருக்கிறார்கள்.
உங்களுக்கு வழிகாட்டுவதற்காகவே அல்லாஹ் இந்த மார்க்கத்தை வழங்கியுள்ளான். இது அவன் உங்களுக்கு வழங்கிய பெரும் கொடை. எந்தச் சமயத்திலும் இந்த மார்க்கத்தை நீங்கள் விட்டு விடாதீர்கள். உங்கள் வாழ்வின் அனைத்து விவகாரங்களையும் இதனடிப்படையில் அமைத்துக் கொள்ளுங்கள். அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றிய நிலையில்தான், அவனுக்குக் கட்டுப்பட்ட நிலையில்தான் உங்களின் மரணமும் நிகழ வேண்டும். இதுதான் அவர்கள் மரணிக்கும் தருவாயில் தங்கள் பிள்ளைகளுக்கு இறுதியாக வழங்கிய அறிவுரை.
அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட நிலையில் வாழ்பவருக்குததான் அவனுக்கு கட்டுப்பட்ட நிலையில் மரணிக்கும் பாக்கியமும் கிடைக்கும். நாம் அவனுக்குக் கட்டுப்பட்ட நிலையில் இருக்கும்போது மரணம் நம்மை வந்தடைவது மிகப் பெரிய பாக்கியம்தான். இந்த அறிவுரை நம்பிக்கையாளர்கள் எந்தச் சமயத்திலும் மார்க்கத்தின் போதனைகளைவிட்டு விலகிவிடக்கூடாது என்பதையும் ஏதேனும் சந்தர்ப்பத்தில் பாவம் செய்து விட்டால், தீய உணர்வுகள் நம்மை மிகைத்து விட்டால் உடனடியாக அதிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
அடுத்து யஅகூப் நபி மரண வேளையில் தம் பிள்ளைகளுக்கு வழங்கிய அறிவுரை தனித்து இடம்பெறுகிறது. அவர் தம் பிள்ளைகளிடம் கேட்டார்: “நான் உங்களை விட்டுச் சென்ற பிறகு நீங்கள் எதை வணங்குவீர்கள்?” தம்முடைய பிள்ளைகள் தாம் இறந்த பிறகு வழிகெட்டுச் சென்று விடுவார்களோ என்ற பயத்தில் அவர் இந்தக் கேள்வியை கேட்கவில்லை. அவர்கள் இந்த மார்க்கத்தில், இந்த தவ்ஹீதில் நீடிக்க வேண்டும் என்ற அவரது விருப்பமே அவரை இந்தக் கேள்வி கேட்கத் தூண்டியதுபோலும். அவர்கள் கூறினார்கள்: உங்களின் முன்னோர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோர் வணங்கிய அந்த ஒரே இறைவனையே நாங்கள் வணங்குவோம். அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றோம்.”
திருக்குர்ஆனின் இந்த சாட்சியத்தின்மூலம் யூதர்கள் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. அவர்களின் முன்னோர் யகூபின் பிள்ளைகளிடம் எந்த இனப் பெருமையும் இருக்கவில்லை. இஸ்லாம் என்பதற்கான தெளிவான வரையறையை அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். தங்களின் உடன்பிறந்த சகோதரர் இஸ்மாயீலையும் இணைத்தே அவர்கள் தங்களின் முன்னோர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிதல்தான் இஸ்லாம். அதைத்தான் அவர்களின் பரம்பரையில் வந்த தூதர்கள் அனைவரும் முன்வைத்தார்கள். அதுதான் அல்லாஹ் அங்கீகரித்த ஒரே மார்க்கம். பிற்காலத்தில் வந்தவர்கள் உருவாக்கிக் கொண்ட யூதமோ கிருஸ்தவமோ இணைவைப்புக் கொள்கையோ அல்ல.
அவர்கள் உங்களுடைய முன்னோர்தாம். நீங்கள் அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்தாம். ஆனால் அவர்களின் செயல்கள் உங்களுக்குப் பயனளிக்காது. அவர்களின் செயல்கள் அவர்களுக்குத்தான் பயனளிக்கும். நீங்கள் அவர்களைக் கொண்டு பெருமிதம் கொள்ள முடியாது. அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் என்பதற்காக உங்களுக்கு எந்த விஷேச சலுகையும் தரப்பட மாட்டாது. அவர்கள் என்ன செய்தார்கள் என்று நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். மாறாக உங்களின் செயல்கள்தாம் உங்களுக்குப் பயனளிக்கும். நீங்கள் என்ன செய்தீர்கள் என்றுதான் நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
அவர்கள் எப்படிச் செயல்பட்டார்களோ அப்படி நீங்கள் செயல்படுவதன்மூலமே அவர்கள் அடைந்த கண்ணியத்தை நீங்கள் அடைய முடியும். யார் அவர்களைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தாம் அவர்களின் வாரிசுகள். நீங்கள் அவர்களின் பரம்பரையில் வந்தாலும் நீங்கள் அவர்களைப் பின்பற்றவில்லையெனில் நீங்கள் ஒருபோதும் அவர்களின் வாரிசுகளாகிவிட முடியாது.
وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَى تَهْتَدُوا قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ قُولُوا آمَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ صِبْغَةَ اللهِ وَمَنْ أَحْسَنُ مِنَ اللهِ صِبْغَةً وَنَحْنُ لَهُ عَابِدُونَ قُلْ أَتُحَاجُّونَنَا فِي اللهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ وَلَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ وَنَحْنُ لَهُ مُخْلِصُونَ أَمْ تَقُولُونَ إِنَّ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطَ كَانُوا هُودًا أَوْ نَصَارَى قُلْ أَأَنْتُمْ أَعْلَمُ أَمِ اللهُ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهُ مِنَ اللهِ وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَا كَسَبْتُمْ وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ
2:136-138 “யூதர்களாகவோ கிருஸ்தவர்களாகவோ ஆகிவிடுங்கள். நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். நீர் கூறும்: “அப்படியல்ல. எல்லாவற்றையும் விட்டு விலகி முழுமையாக அல்லாஹ்வின் பக்கம் சாய்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். அவர் இணைவைப்பவராக இருக்கவில்லை. நீங்கள் கூறுங்கள்: “நாங்கள் அல்லாஹ்வின்மீதும் எங்களுக்கு அருளப்பட்டதன்மீதும் இப்ராஹீம் இஸ்மாயீல் இஸ்ஹாக் யஅகூப் ஆகியோருக்கு அருளப்பட்டதன்மீதும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பட்டதன்மீதும் ஏனைய தூதர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதன்மீதும் நம்பிக்கைகொண்டோம். நாங்கள் அவர்களுக்கிடையே எந்த வேறுபாட்டையும் காட்ட மாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கே கீழ்ப்படிந்தவர்களாக இருக்கின்றோம்.” நீங்கள் நம்பிக்கைகொண்டது போன்று அவர்களும் நம்பிக்கைகொண்டால் அவர்கள் நேர்வழி பெற்றவர்களாவர். அவர்கள் புறக்கணித்தால் அவர்கள் பிடிவாதத்தில் இருப்பவர்களாவர். அவர்கள் விசயத்தில் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவன் செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்வின் வர்ணத்தைப் பூசிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் வர்ணத்தைவிட சிறந்த வர்ணம் எது? நாங்கள் அவனையே வணங்குபவர்களாக இருக்கின்றோம். அல்லாஹ்வைக் குறித்து நீங்கள் எங்களிடம் தர்க்கம் செய்கின்றீர்களா? அவனே எங்களின் இறைவனும் உங்களின் இறைவனுமாக இருக்கின்றான். எங்களின் செயல்கள் எங்களுக்கு. உங்களின் செயல்கள் உங்களுக்கு. நாங்கள் எங்களின் வழிபாட்டை அவனுக்கே உரித்தாக்குபவர்களாக இருக்கின்றோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் மற்றும் அவரது சந்ததிகள் அனைவருமே யூதர்களாக அல்லது கிருஸ்தவர்களாக இருந்தார்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்களா? நீர் கேளும்: “நீங்கள் நன்கறிவீர்களா? அல்லது அல்லாஹ் நன்கறிவானா?” அல்லாஹ்விடமிருந்து தன்னிடம் வந்துள்ள சாட்சியத்தை மறைப்பவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. அவர்கள் கடந்துபோன சமூகத்தினர். அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கு. நீங்கள் சம்பாதிதவை உங்களுக்கு. அவர்களின் செயல்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்”
இஸ்லாம் என்று வரும்போது எதிரிகள் ஒன்றிணைந்து விடுகிறார்கள். யூதர்கள், கிருஸ்தவர்கள் தங்களுக்கிடையே காணப்படும் அத்தனை கருத்து வேறுபாடுகளையும் மறந்து நீங்கள் இறைவனை நோக்கிச் செல்லும் நேரான வழியை அடைய வேண்டும் எனில் யூதர்களாக மாறுங்கள் அல்லது கிருஸ்தவர்களாக மாறுங்கள் என்று கூறுகிறார்கள். இஸ்லாத்தை எதிர்க்கவும் நிராகரிக்கவுமே அவர்கள் ஒன்றிணைகிறார்கள்.
அவர்களுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். தவறான கொள்கைகள் எல்லாவற்றையும் விட்டு விலகிய இப்ராஹீமின் மார்க்கத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். அவர் இணைவைப்பவராக இருக்கவில்லை என்று கூறுமாறு அவன் நமக்குக் கட்டளை இடுகிறான். யூதர்களும் கிருஸ்தவர்களும் மக்காவில் இருந்த இணைவைப்பாளர்களும் இப்ராஹீமையே தங்களின் வழிகாட்டியாக ஏற்றிருந்தனர். ஒவ்வொருவரும் தாங்கள்தாம் இப்ராஹீமைப் பின்பற்றுகிறோம் என்று பெருமையுடன் கூறிக் கொண்டிருந்தனர். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஹனீஃப்’ என்ற வார்த்தையைக் கொண்டும் அதற்குப் பிறகு வரக்கூடிய வாசகத்தைக் கொண்டும் இந்த மூன்று தரப்பினரும் இப்ராஹீமை சொந்தம் கொண்டாட முடியாது என்பதையும் முஸ்லிம்கள் மட்டுமே அவரைச் சொந்தம் கொண்டாட முடியும் என்பதையும் அல்லாஹ் தெளிவுபடுத்தி விடுகிறான்.
யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் இணைவைப்பு ஊடுருவி விட்டது. அவர்கள் அல்லாஹ்வுக்கு மகன்களை ஏற்படுத்தி விட்டனர். அல்லாஹ்வின் விசயத்தில் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் இணைவைப்போடு கலந்து விட்டன. மக்காவின் இணைவைப்பாளர்களோ சிலை வழிபாட்டில் மூழ்கிக் கிடந்தனர். இப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி இப்ராஹீமின் பக்கம் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்? தம் காலகட்டத்தில் மக்கள் சிலை வழிபாட்டிலும் இணைவைப்பிலும் மூழ்கியிருந்த சமயத்தில் அவர் அவர்களின் கொள்கைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் முழுமையாகச் சாய்ந்தவராக இருந்தார். முஸ்லிம்களாகிய நாங்கள் அவரின் மார்க்கத்தையே பின்பற்றுகிறோம். அதுதான் அல்லாஹ்வின் பக்கம் செல்லும் ஒரே நேரான வழி.
நாங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் எங்களுக்கு அருளிய குர்ஆனின் மீதும் அவன் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், அவரது வழித்தோன்றல்கள் ஆகியோருக்கு அருளிய வேதங்களின் மீதும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பட்ட வேதங்களின் மீதும் ஏனைய தூதர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நாங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர்களுக்கு மத்தியில் எந்த பாகுபாடும் காட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றோம்.
இதுதான் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு. முஸ்லிம் சமூகத்தினர் நடுநிலையான சமூகத்தினர். அவர்களின் நம்பிக்கை பரிபூரணமானது. இனவாதம், தேசியவாதம், மொழிவாதம் போன்ற எந்தவித குழுங்குழு வாதத்திற்கும் அது உட்படாதது. எங்கள் சமூகத்தில் வந்த தூதர்களை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று யூதர்கள் கூறியதுபோன்று அவர்கள் கூறுவதில்லை. அவ்வாறு கூறுவது அப்பட்டமான இனவெறியே அன்றி வேறில்லை. யூதர்கள் கூறுவதுபோன்றுதான் கிருஸ்தவர்களும் கூறுகிறார்கள். அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள நேர்வழியை தங்கள் இனத்தாருக்கு உரிய மட்டுமேயான சொத்தாகக் கருதுவது யூத மனநிலை. அவர்கள் தங்கள் இனத்திலிருந்து இறுதித் தூதர் வரவில்லை என்பதற்காகவே முஹம்மது நபியவர்களை – அவர்தாம் இறுதித் தூதர் என்பதை அறிந்து கொண்ட பின்னரும் – ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். தங்களின் இந்த நிராகரிப்பை பல்வேறு சாக்குப்போக்குகளைக் கொண்டு மூடி மறைக்க முயன்றார்கள்.
அல்லாஹ் அனுப்பிய தூதர்களில் யாரையேனும் ஒருவரை ஏற்றுக்கொள்ள மறுப்பது அவனை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகும். அவ்வாறு மறுப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைத்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
நாம் ஏனைய தூதர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களை ஏற்றுக்கொள்கிறோம் என்பது இப்போது அந்த வேதங்களில் உள்ளவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம் என்பது அல்ல. அந்த வேதங்கள் மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இடைச்செருகல்கள் புகுந்து விட்டன. இந்தக் குர்ஆனைக் கொண்டுதான் அவற்றில் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளவை எவை, மற்றவை எவை என்பதை பிரித்து அறிகிறோம். குர்ஆன்தான் அனைத்திற்குமான அளவுகோலாக இருக்கிறது. அந்த வகையில் குர்ஆன்தான் பின்பற்றத்தகுந்த ஒரே வேதம்.
நாம் தூதர்களுக்கு மத்தியில் எந்தப் பாகுபாடும் காட்ட மாட்டோம். அனைவரும் அல்லாஹ்விடமிருந்து அவனுடைய தூதை மனிதர்களுக்கு எடுத்துரைப்பதற்காக வந்தவர்கள். அவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை சிறந்த முறையில் நிறைவேற்றினார்கள். அவர்கள் பல்வேறு சமூகங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை விட சிலருக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை அளித்துள்ளான். அது அவனுடைய விருப்பம். அவனுடைய விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது.
மனிதர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரே வழி இஸ்லாம் மட்டுமே. அதுதான் உலகளாவியதும் காலம், இடம் என்ற வரையறைகளைத் தாண்டி மனிதர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியதும் ஆகும். மனிதர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கங்களைக் கொண்டு மனிதர்களை ஒருபோதும் ஒன்றிணைக்க முடியாது. ஏனெனில் அவை மனிதப் பலவீனங்களைக் கொண்டவையாக, கால, இட வரம்புகளால் பாதிக்கப்படக்கூடியவையாகவே இருக்கும். அனைத்தையும்விட முதன்மையான காரணி, மனிதர்களுக்கு தன் புறத்திலிருந்து வழிகாட்டும் உரிமை எந்த மனிதனுக்கும் இல்லை. அது மனிதர்கள் அனைவரையும் படைத்துப் பராமரிக்கின்ற அல்லாஹ்வின் உரிமை ஆகும்.
நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றோம். அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுதல்தான் இஸ்லாம். வேதக்காரர்களே! நீங்கள் மன இச்சைகளுக்கு, நீங்களே உருவாக்கிக் கொண்ட வழக்கங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றீர்கள்.
“நீங்கள் நம்பிக்கைகொண்டது போன்று அவர்களும் நம்பிக்கைகொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெற்றவர்களாவர்”
இதுதான் யூதர்களும் கிருஸ்தவர்களும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்கான, அவர்கள் முஸ்லிம்களாக ஓரணியில் இணைவதற்கான ஒரே வழி. முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டதுபோன்றே அவர்களும் நம்பிக்கை கொள்ள வேண்டும். எந்தவிதமான குறுங்குழு வாதங்களுக்கும் உட்படாமல் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுத்தால் அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஓரணியில் இணைவதை, ஒற்றுமையை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் அணிக்கு எதிராக வேறொரு அணியை உருவாக்க விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வாறு உருவாக்க விரும்பினால் உருவாக்கட்டும். அவர்களின் சூழ்ச்சிகளிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் பாதுகாக்க அல்லாஹ் உங்களுக்குப் போதுமானவன்.
அல்லாஹ்வின் இந்த வாக்குறுதி நபியவர்களுக்கும் அவர்களின் இந்த தூதை முன்னெடுத்துச் செல்லும் முஸ்லிம்களுக்கும் உரியதாகும். அவர்களுக்கு எதிராக தீட்டப்படும் சதித்திட்டங்கள், முன்வைக்கப்படும் தீங்குகள் என அனைத்தையும் விட்டு அவர்களைப் பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான். தன் மார்க்கத்திற்காகப் பாடுபடுவர்களைப் பாதுகாப்பது அவனுடைய கடமை.
“அல்லாஹ்வின் வர்ணத்தைப் பூசிக் கொள்ளுங்கள்”
நீங்களே உருவாக்கிக் கொண்ட யூதத்தை, கிருஸ்தவத்தை விட்டு விடுங்கள். அல்லாஹ்வின் வர்ணத்தைப் பூசிக் கொள்ளுங்கள். அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவனுடைய மார்க்கத்தைவிட சிறந்த மார்க்கம் வேறு எதுவும் இல்லை. உங்கள் தலைவர்கள், குருமார்கள் உருவாக்கிய வழிமுறைகளை விட்டு விடுங்கள். அவர்கள் உருவாக்கிய வண்ணங்களை நீங்கள் பூசிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் வழங்கிய இயல்பான வழியான இஸ்லாம் என்னும் வண்ணத்தைப் பூசிக் கொள்ளுங்கள். நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வழிபடுகின்றோம். நீங்களும் அவனை மட்டுமே வழிபடுங்கள்.
கிருஸ்தவத்திற்கு முன்னால் யூதர்களிடம் ஞானஸ்தானம் என்னும் வழக்கம் இருந்தது. யாராவது யூத மதத்தை ஏற்றுக் கொண்டால் அவர் ஞானஸ்தானம் செய்வதன்மூலமே யூதர்களில் ஒருவராக மாற முடியும். ஞானஸ்தானம் என்றால் தண்ணீரில் மூழ்கி பாவங்களைக் கழுவுதல் என்று பொருள். பின்னாட்களில் இதனை கிருஸ்தவர்கள் தங்களின் சடங்காக மாற்றிக் கொண்டனர். தற்சமயம் இது கிருஸ்தவர்களின் புனிதச் சடங்காகவே அறியப்படுகிறது. ஞானஸ்தானம் என்பது அறபு மொழியில் வர்ணம் பூசுதல் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. இந்த வசனத்தில் அல்லாஹ் அவர்களின் இந்த சடங்கையே குறிப்பிடுகிறான். அல்லாஹ்வின் வர்ணத்தைப் பூசிக் கொள்வதன்மூலமே நீங்கள் பாவங்களிலிருந்து விடுபட முடியும், அவனுடைய திருப்தியைப் பெற்று வெற்றி பெற முடியும். பொருளற்ற உங்களின் இந்த சடங்கின்மூலம் நீங்கள் எதனையும் பெற முடியாது.
“அல்லாஹ்வைக் குறித்து நீங்கள் எங்களிடம் தர்க்கம் செய்கின்றீர்களா?…”
அல்லாஹ்வைக் குறித்து நீங்கள் எங்களிடம் தர்க்கம் செய்கின்றீர்களா? அவனே உங்களின் ரப்பாகவும் எங்களின் ரப்பாகவும் இருக்கின்றான். உங்களையும் எங்களையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன் அவனே. அவனுக்கு நாங்கள் யாரையும் இணையாக்க மாட்டோம். அவனுடைய மார்க்கத்தை விட்டுவிட்டு எங்களின் மன விருப்பங்களை, எங்கள் முன்னோர் உருவாக்கிய சடங்குகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம். நாங்கள் எங்களின் செயல்களுக்குத்தான் பதிலளிக்க கடமைப்பட்டவர்கள். உங்களின் செயல்களுக்கு நீங்கள்தான் பதிலளிக்க வேண்டும். எங்களின் செயல்கள் உங்களைப் பாதிக்காது. உங்களின் செயல்கள் எங்களைப் பாதிக்காது. நாங்கள் உங்களை நிர்ப்பந்திக்க மாட்டோம். ஆனால் உங்களின் செயல்களினால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு நீங்கள்தாம் பொறுப்பு. ஆகவே உங்களுடன் தர்க்கம் செய்வதை நாங்கள் விட்டு விடுகின்றோம். நாங்கள் செய்ய வேண்டிய செயல்களின் பக்கம் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் எங்களின் வழிபாட்டை, கீழ்ப்படிதலை அவனுக்கு மட்டுமே உரியதாக ஆக்குவோம். எந்தச் சமயத்திலும் அவனுடன் யாரையும் எதையும் நாங்கள் இணையாக்க மாட்டோம்.
“இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூபு மற்றும் அவரது சந்ததிகள் அனைவருமே யூதர்களாக அல்லது கிருஸ்தவர்களாக இருந்தார்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்களா?…
இறுதியாக அவர்களிடம் கேட்கப்படுகிறது, இப்ராஹீமும் அவரது சந்ததியில் வந்த தூதர்கள் அனைவரும் யூதர்களாக அல்லது கிருஸ்தவர்களாக இருந்தார்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்களா? அவர்களால் பதிலளிக்க முடியாத கேள்வி இது. இந்தக் கேள்வி அவர்களுக்கு எதிரான ஆதாரத்தை வலுவாக நிறுவுகிறது. வெறும் பிடிவாதத்தினாலும் பொறாமையினாலும்தான் அவர்கள் இப்படி கூறிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் வாதத்திற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. இந்த தூதர்கள் காலகட்டத்தில் யூதமோ கிருஸ்தவமோ உருவாகியிருக்கவே இல்லை. பிறகு எப்படி யூதர்களாக அல்லது கிருஸ்தவர்களாக இருந்திருப்பார்கள்? அவர்கள் நன்கறிவார்களா? அல்லது அல்லாஹ் நன்கறிவானா? உண்மையில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசவில்லை. அல்லாஹ்வுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தூதரும் இஸ்லாம் என்ற மார்க்கத்தை மட்டுமே கொண்டு வந்தார்கள். தூதர்கள் கொண்டு வந்த மார்க்கம் ஒன்றுதான். இதுதான் அவர்களின் வேதங்களிலும் இருக்கிறது. இதற்கு சாட்சியம் கூற வேண்டிய அவர்கள் எதிர் சாட்சியம் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள சாட்சியத்தை மறைப்பவர்களைவிட பெரும் அநியாயக்காரர்கள் வேறு யாரும் இல்லை. அவர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் அல்லாஹ் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அநியாயக்காரர்கள் அவனுடைய பிடியிலிருந்து தப்ப முடியாது.
