எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று யாருக்கும் தெரியாது. நாம் நம் அனுபவங்களை, முந்தைய சம்பவங்களை முன்வைத்து கணிக்கிறோம். நம்முடைய கணிப்பு சரியாகவும் அமையலாம். அதற்கு மாறாகவும் அமையலாம். எந்தவொரு விசயத்தையும் குறித்து குறிப்பிட்ட அளவுவரை மட்டுமே நாம் யோசிக்க வேண்டும். அதற்கு மேல் யோசித்தால் நாம் எந்தவொரு செயலிலும் ஈடுபட முடியாத அளவு முடங்கி விடுவோம்.
அதீத பேணுதல் என்பது ஒரு நோய். ஒரு விசயத்தின் சாதக, பாதக அம்சங்களை அலசிவிட்டு ஒரு முடிவு எடுத்து விட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டியதுதான் நம்முடைய பொறுப்பு. அப்படிச் செயல்பட்டு நாம் விரும்பாத முடிவுகளை அடைந்து விட்டாலும் அதுதான் விதி என்று பொருந்திக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட வேண்டும். விதியிலிருந்து தப்பித்து விதியை நோக்கித்தான் செல்வோம். தடுப்பூசிகளும் மருந்துகளும்கூட மரணத்திற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. சில சமயங்களில் ஒன்றிலிருந்து தப்பிப்பதற்கு நாம் எடுக்கும் முன்னேற்பாடுகள், தற்காப்பு நடவடிக்கைகள்கூட அதில் நாம் சிக்கிக் கொள்வதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
நம் விசயத்தில் நம் உள்ளுணர்வுதான் முதன்மையான ஆதாரம். அதன் குரலுக்கே நாம் செவிசாய்க்கிறோம். அதற்கு இசைவான ஆலோசனைகளையே நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த உள்ளுணர்வின் மூலமான உள்ளம் எந்த வகையிலும் களங்கமடையாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. களங்கமடைந்த உள்ளத்திலிருந்து தெளிவான உள்ளுணர்வைப் பெற முடியாது.
