திருக்குர்ஆன் நயவஞ்சகர்களைக் குறித்து அதிகம் பேசியிருக்கிறது. அவர்களின் அடையாளங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது. சிரமங்களை அவர்கள் எதிர்கொள்ளும்முறை, சமூகத்தின் உறுதியைக் குலைப்பதற்காக அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் முன்வைக்கக்கூடிய சாக்குப்போக்குகள், அவர்களின் செயல்பாடுகள், வழிபாடுகளை அவர்கள் நிறைவேற்றும் முறை இப்படி அடையாளங்களின் வழியாக அவர்கள் யார் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டி விடுகிறது.
திருக்குர்ஆன் அந்தக் காலகட்டத்தின் நயவஞ்சகர்களைக் குறித்துப் பேசினாலும் அவர்களின் பெயர்களை எங்கும் குறிப்பிடவில்லை. அது அவர்களின் பண்புகளைக் கொண்டே அவர்களை அடையாளப்படுத்தியது. அந்த அடையாளங்களைக் கொண்டே ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் உள்ள நயவஞ்சகர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.
நயவஞ்சர்கள் தங்களை நம்பிக்கையாளர்கள் என்று கூறிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கையாளர்கள் இல்லை. தங்களை சிறந்த முஸ்லிம்களாக அவர்கள் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை.
ஆட்சியாளர்களுக்கு, செல்வந்தர்களுக்கு சேவகம் செய்யும் பொருட்டு அவர்களை அண்டி வாழும், அவர்களுக்காக மார்க்கத்தின் சட்டங்களை, போதனைகளை திரிக்கும் அறிஞர்கள் இந்த சமூகத்தின் மோசமான நயவஞ்சகர்கள்.
நயவஞ்சகம் உள்ளத்தின் நோய். அது ஈமானுக்கு எதிர்மறையானது. ஈமான் இருக்கும் உள்ளத்தில் நயவஞ்சகம் இருக்காது. நயவஞ்சகம் குடிகொண்டிருக்கும் உள்ளத்தில் ஈமான் இருக்காது. ஈமானில் பலவீனம் என்பது வேறு. நயவஞ்சகம் வேறு. நயவஞ்சர்கள் முஸ்லிம் ஆடையில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டாலும், தங்களை சிறந்த முஸ்லிம்களாக காட்டிக் கொண்டாலும் எதிரிகளுக்கே சேவகம் செய்பவர்களாக, அவர்களையே மெச்சுபவர்களாக இருப்பார்கள்.
