தன்மானமா? செருக்கா?

You are currently viewing தன்மானமா? செருக்கா?

தன்மானத்திற்கும் செருக்கிற்கும் மத்தியில் சிறிய இடைவெளிதான் உள்ளது. செருக்கை தன்மானம் என எண்ணுவோரும் இருக்கிறார்கள். ஒருவனிடம் இருக்கும் ஏதேனும் ஒரு தனித்தன்மை அவனிடம் செருக்கை உருவாக்கலாம். செல்வம், அதிகாரம், அறிவு, அழகு போன்றவை. செல்வச் செருக்கு, அதிகாரச் செருக்கு எப்படி தவறான பண்புகளோ அதேபோன்று அறிவுச் செருக்கும் தவறான பண்புதான். ஒரு செல்வந்தன் எவ்வாறு செருக்குடன் நடந்து கொள்ளக்கூடாதோ அப்படித்தான் ஒரு அறிஞனும். அதுவும் மார்க்க அறிஞர்கள் இந்த விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் செருக்குடனும் நடந்து கொள்ளக்கூடாது.

முஸ்லிமல்லாத அறிஞர்கள் செருக்குடன் நடந்துகொள்வதை நல்லதொரு பண்பாகக் கருதுகிறார்கள். அறிஞன் அறிவுச் செருக்குடன் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய அறிஞர்களுக்கு அது உகந்த பண்பு அல்ல. இஸ்லாம் செருக்கை தீய பண்பாக வரையறுக்கிறது. அது எந்த மூலத்திலிருந்து வெளிப்பட்டாலும் சரியே. எந்த அளவுக்கெனில் அவர்கள் தாங்கள் மட்டுமே நேரான வழியில் இருக்கிறோம் என்றுகூட செருக்கு கொள்ளக்கூடாது.

பணிவு இஸ்லாமிய அறிஞர்களிடம் இருக்க வேண்டிய அவசியமான பண்பு. அதனால் அவர்கள் ஒருபோதும் இழிவடைய மாட்டார்கள். நீங்கள் பணிவை வெளிப்படுத்தினால் நிச்சயம் உயர்வடைவீர்கள். அல்லாஹ்வுக்காக, அவனுடைய மார்க்கத்திற்காக நீங்கள் உங்களை தாழ்த்திக் கொண்டால் நிச்சயம் நீங்கள் உயர்வடைவீர்கள். இங்கு இஸ்லாம் பரவுவதற்கு உங்களின் அறிவும் செல்வந்தர்களின் செல்வமும் களச்செயல்பாட்டாளர்களின் உழைப்பும் முதன்மையான காரணங்கள். ஒவ்வொருவரிடமும் ஒன்று இருக்கிறது. எல்லாம் இணைந்துதான் பயன்களைத் தருகிறது. அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்குவதற்கு நாங்களும் சிறிய அளவில் பங்களிப்புச் செய்துள்ளோம் என்று நீங்கள் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அதைக் கொண்டு நீங்கள் பெருமையடிக்கக்கூடாது. உங்களால்தான் இத்தனை பணிகளும் நிகழ்கின்றன என்றவொரு தோற்றத்தை நீங்கள் ஏற்படுத்தக்கூடாது.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply