“நித்திய ஜீவனே! நிலையானவனே! உன் அருளை நான் வேண்டுகிறேன். என் விவகாரங்கள் அனைத்தையும் நீ சீர்படுத்துவாயாக. கண்சிமிட்டும் நேரம் அளவுக்குக்கூட என்னை என் மனதின் கட்டுப்பாட்டில் விட்டுவிடாதே” (நஸயீ, ஹாகிம்)
காலையும் மாலையும் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளில் ஒன்றாக நபியவர்கள் இந்த பிரார்த்தனையை முன்வைக்கிறார்கள். இறைவனின் வல்லமையை, நம் இயலாமையை வெளிப்படுத்தியவாறு அவனிடம் நம் கோரிக்கையை முன்வைக்கிறோம். நம் விவகாரங்கள் அனைத்திலும் ஆரோக்கியத்தை தந்தருளுமாறு அவனிடம் வேண்டுகிறோம். ஒரு நொடிகூட மனதின் கட்டுப்பாட்டில் நம்மைவிட்டுவிட வேண்டாம் என்றும் அவனிடம் கோரிக்கை வைக்கிறோம். நம் மனதின் கட்டுப்பாட்டில் நாம் விட்டுவிடப்பட்டால் நாம் சீரழிந்துவிடுவோம். மனம் எல்லாவற்றையும் அலங்கரித்துக் காட்டும். நாம் செய்யக்கூடிய கீழ்மைகளுக்கும் நியாய வாதங்களை உருவாக்கிக் கொடுக்கும். எந்தவொன்றுக்கும் எளிதாக அடிமையாகி சிறுகுழந்தைபோன்று அடம்பிடிக்கத் தொடங்கிவிடும். நமக்குத் தெரியும், பல சந்தர்ப்பங்களில் நாம் தவறுகளிலிருந்து காப்பாற்றப்படுகிறாம் என்பதும் வாய்ப்பு வழங்கப்பட்டால் நிச்சயம் தவறு செய்துவிடுவோம் என்பதும். வாய்ப்பு வழங்கப்பட்டும் பாவம் செய்யாமல் இருப்பவர்கள் மிகவும் அரிது. அல்லாஹ் தான் நாடியவர்களை காப்பாற்றுகிறான். தான் நாடியவர்களை விட்டுவிடுகிறான்.
பாவங்கள் மிகுந்த ஈர்ப்பைக் கொண்டவை. மனித மனம் அவற்றை விரும்பவே செய்கிறது. அதனால்தான் அது அவற்றுக்கு மிக எளிதில் அடிமையாகிவிடவும் செய்கிறது. மனிதன் அறிந்துகொண்டே தன்னை அழிவில், சிரமத்தில் ஆழ்த்திக் கொள்வதற்கு அந்த ஈர்ப்புதான் காரணம். நாம் வழிநடத்தப்படுகிறோம். நாம் காப்பாற்றப்படுகிறோம். நாம் கைவிடப்படுகிறோம். நம் வாழ்பனுபவங்கள் இவையனைத்தையும் உண்மைப்படுத்துகின்றன. நம் வாழ்பனுபவங்கள் மீண்டும் மீண்டும் நம் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அவனுடைய அருளும் வழிகாட்டலும் நம்மைத் தழுவவில்லையெனில் நாம் பேரிழப்பிற்குள்ளாகிவிடுவோம்.
