“எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னிக்கவில்லையென்றால், எங்கள் மீது கருணை காட்டவில்லையென்றால் நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்.” (7:23)
இது ஆதம் (அலை) பாவம் செய்த பிறகு இறைவனிடம் மன்னிப்புக்கோரி செய்த பிரார்த்தனை. இதுதான் முதல் பிரார்த்தனையும்கூட. இறைவனின் கட்டளையை மீறுவது பாவம் என்பதை அறிந்திருந்தார். ஆனாலும் அவர் அவனுடைய கட்டளையை மீறினார்.
மனிதன் அறிந்துகொண்டே பாவத்தில் ஈடுபட முடியுமா? முடியும் என்பதே ஆதமின் சம்பவம் நமக்கு அளிக்கும் பதில். அவனுடைய உணர்வுகள் மிகைக்கும்போது அவனது அறிவு மழுங்கடிக்கப்படுகிறது. ஆகவே அவன் பாவத்தில் ஈடுபட்டு விடுகிறான். சட்டென விழிப்படைந்து அவன் அதனை உணர்ந்தும் விடுகிறான். இங்குதான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள். ஆதம் திரும்பியது போன்று சட்டென விழிப்படைந்து தம் பாவத்தை உணர்ந்து திரும்பும் இறைவனின் பக்கம் மன்னிப்புக் கோரியவர்களாக திரும்பும் மனிதர்கள் ஆதம் மன்னிக்கப்பட்டதுபோன்று மன்னிக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்யும் இயல்புடையவர்கள். அவர்கள் செய்யும் பாவங்கள் தங்களுக்குத் தாங்களே அவர்கள் செய்து கொள்ளும் தீங்குகள். பாவத்தை உணராமல் அதிலேயே மூழ்கிப்போவது மனிதனுக்கு மாபெரும் இழப்பு. அது இழப்புகளைக் கொண்டு வரக்கூடியது; அருள்வளங்களை அழிக்கக்கூடியது.
தங்களின் தவறுகளை, பாவங்களை நியாயப்படுத்தும் மனிதர்கள் அவற்றிலிருந்து மீண்டுவர முடியாது. தவறுகளை ஒத்துக்கொள்ளும் மனிதர்கள் இயல்பு நிலையில் நீடிக்கும் மனிதர்கள். பாவங்கள் தீங்குகளைக் கொண்டு வரும் என்பதை அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் அறிந்திருக்கிறார்கள். யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே அவர்கள் தாங்கள் செய்த பாவங்களையும் தங்களுக்கு வரக்கூடிய துன்பங்களையும் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். பாவங்களுக்கும் நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கும் மத்தியில் இருக்கும் தொடர்புகளை நம் உள்ளம் அறிந்து கொள்கிறது.
