ஆதாரம் எதற்குத் தேவைப்படுகிறது? ஒரு விசயத்தை மக்களின் முன்னால் நிரூபிப்பதற்கு, மற்றவர்களை வாயடைக்கச் செய்வதற்கு. நீங்கள் ஒரு விசயத்தை நம்ப வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் அவசியமில்லை. ஆதாரத்திற்கும் நம்பிக்கைக்கும் மத்தியில் அவ்வளவு நெருக்கமான தொடர்பு எல்லாம் இல்லை. அந்த நம்பிக்கை முதலில் உங்களுக்குள் இருந்து உருவாகி வர வேண்டும் அல்லது இயல்பாகவே உங்களின் மனம் அதனை உணர வேண்டும். இயல்பான எந்தவொன்றுக்கும் ஆதாரம் தேவையில்லை. அதற்குப் பிறகுதான் அதனை வெளிப்படுத்துவதற்கு, மக்களின் முன்னால் வைப்பதற்குத்தான் உங்களுக்கு ஆதாரம் தேவைப்படுகிறது.
உண்மைக்கு ஆதாரம் தேவையில்லை. உள்ளம் இயல்பாகவே அதனை அறிந்துகொள்ளும். பொய்களுக்கே அடுக்கடுக்கான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. உள்ளம் அவற்றை இயல்பாக நம்பாதல்லவா? இல்லாத ஒன்றை ஆதாரங்களைக் கொண்டுதானே நிலைநிறுத்த முடியும்.
ஆதாரம் எதுவுமின்றியே நம்முடைய உள்ளம் இறைவனின் இருப்பை, அவனுடைய வல்லமையை, அவன் நம்மை பராமரித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணரும். இறைவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கை இயல்பான நம்பிக்கை. நமக்குத் துன்பம் வரும்போது நாம் பெரும் துன்பத்தில் சிக்கிக்கொள்ளும்போது இயல்பாகவே நாம் இறைவனை அழைக்கிறோம். அதனால்தான் அது எல்லா காலகட்டத்திலும் எல்லா இடங்களிலும் காணப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. கோட்டைகள் இல்லாத நகரங்கள் இருக்கின்றன. ஆனால் வழிபாட்டுத்தலங்கள் இல்லாத நகரங்களே இல்லை என்கிறார் ஒரு வரலாற்றாசிரியர். மனிதர்கள் எல்லா காலகட்டத்திலும் இடங்களிலும் ஏதோ ஒரு வகையில் – சரியாகவோ பிழையாகவோ – இறைவனை நம்பிக்கொண்டும் வணங்கிக் கொண்டும்தான் இருந்து வருகிறார்கள். நாத்திகம் எல்லா காலகட்டத்திலும் ஒழுங்கை மீறல் மனப்பான்மை கொண்ட சிறு குழுவினரின் நம்பிக்கையாகத்தான் இருந்து வருகிறது.
இஸ்லாமிய போதனைகள் கிட்டத்தட்ட நினைவூட்டல்வகையைச் சார்ந்தவை. மனிதனுக்குள் இயல்பாகவே இருக்கும் போதனைகளையே இஸ்லாம் நினைவூட்டுகிறது. அவை அவனுக்கானவை. அவனுடைய இயல்புக்கு உகந்தவை. அவற்றுக்கான ஆதாரங்களை அவன் வெளியிலிருந்து பெற வேண்டிய அவசியமில்லை. அவனுடைய உள்ளமே அவற்றை உண்மைப்படுத்துவதற்குப் போதுமானது.
“தம்மை அறிந்துகொண்டவர் தம் இறைவனையும் அறிந்துகொண்டவர் ஆவார்” என்பது ஒரு சூஃபிமொழி. இங்கு தன்னை அறிதல் என்பது மனிதன் தன் பலவீனத்தை, இயலாமையை அறிவதுதான். அவனுடைய பலவீனத்திலிருந்து, இயலாமையிலிருந்து அவன் இறைவனின் வல்லமையை, இறைவனின் பக்கம் அவன் எந்த அளவு தேவை யுடையவனாக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்கிறான். துன்பங்களால் அவன் பாதிக்கப்படும்போது, தீவிர வெறுமையால் அவன் பீடிக்கப்படும்போது, ஆபத்துகளால் அவன் சூழ்ந்துகொள்ளப்படும்போது தன்னியல்பாக அவன் இறைவனின் பக்கம் திரும்புகிறான். அவனிடம் அடைக்கலம் தேடுகிறான். தன்னைக் காப்பாற்றுமாறு அவனிடமே மன்றாடுகிறான்.
ஒரு மனிதன் தன்னைக் கூர்ந்து கவனித்தாலே தன்னைப் படைத்தவனை, அவனுடைய பேராற்றலை, அவன் தனக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை, தன் மீது பொழிந்துள்ள பெரும் கிருபையை அறிந்துகொள்ள முடியும். அவனுடைய கட்டுப்பாடின்றி, விருப்பமின்றி அவன் வளர்வதும் அவனுடைய உறுப்புகள் செயல்படுவதும் அவை தமக்கு கட்டளைகள் இடப்பட்டதுபோன்று ஒழுங்கமைவுடன் செயல்படுவதும் என அவனுக்குள் நிகழும் ஒவ்வொன்றும் ஆச்சரியமான நிகழ்வுகள்தாம்.
மனிதன் தனக்கு ஏதேனும் துன்பம் நேரும்போதுதான் தன்னைக் கவனிக்கத் தொடங்குகிறான். அதுவரை எதையோ நோக்கி அவசரமாக ஓடிக் கொண்டே, இடைவிடாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறான். மனிதன் துன்பத்தில் இறைவனை அறிந்துகொள்வதற்கு இதுவும் ஒரு காரணம். தன் படைப்பின் நோக்கம் குறித்து, அதனை அறிந்துகொள்வதன் அவசியம் குறித்து சிந்திப்பவர்கள்தாம் இளமையிலேயே இறைவனை அறிந்துகொள்கிறார்கள். லௌகீகவாதிகள் தங்களுக்கு லௌகீக ஆதாயம் தரும் விசயங்களைத் தவிர வேறு எதைக் குறித்தும் யோசிப்பதில்லை. அப்படி யோசிப்பவர்களை மூடர்கள், பிழைக்கத் தெரியாதவர்கள், பைத்தியக்காரர்கள் என்று தூற்றவும் தயங்குவதில்லை. தாங்கள் செய்யாத ஒரு செயலை மற்றவர்கள் செய்கிறார்களே என்ற கோபமே அவர்களை தூற்றத் தூண்டுகிறது.
லௌகீகவாதிகளும் இறைவனைக் குறித்து சிந்திக்கிறார்கள், எல்லாம் ஓய்ந்த பிறகு; தம் இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்திய பிறகு; வெறுமை அவர்களை சூழ்ந்துகொண்ட பிறகு; முதுமையை அடைந்த பிறகு. அதனால்தான் அவர்கள் ஒருவித குருட்டு நம்பிக்கையோடு தங்களை போதுமாக்கிக் கொள்கிறார்கள். அப்படித்தான் அவர்களால் செய்ய முடியும். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? தங்களின் எல்லா ஆற்றல்களையும் லௌகீகத்திற்காக செலவு செய்த பிறகு செலவு செய்வதற்கு வேறு எதுவும் அவர்களிடம் எஞ்சியிராதபோது.
இறைவனைக் குறித்து அறிய அறிய நாம் அவனை நெருங்கிக் கொண்டே செல்வோம். இறைநெருக்கத்திற்கு அவனைக் குறித்த ஞானமே அடிப்படை. இறைவனின் இருப்பை, அவனுடைய வல்லமையை, கண்காணிப்பை, பராமரிப்பை உணர்வது அவனைக் குறித்த அறிதலின் ஆரம்ப நிலை. அவன் புரிந்துகொள்ள முடியாதவன் அல்ல. கிட்டத்தட்ட திருக்குர்ஆனிலுள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவனுடைய பண்புகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அவற்றின் வழியே நாம் அவனை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். நம் அனுபவங்களின் வழியாகவும் நாம் அவனைப் புரிந்துகொள்ள முடியும்.
மனிதன் தன்னை, தன் வாழ்க்கையை உற்றுப் பார்த்தாலே இறைவனை உணர்ந்துகொள்ள முடியும். ஒவ்வொரு தருணத்திலும் அவனால் இறைவனின் பேராற்றலை, அவனுடைய பரிபாலிக்கும் தன்மையை, கண்காணிப்பை கண்டுகொள்ள முடியும். இக்கட்டான சூழலில் அவனையும் அறியாமல் அவன் இறைவனையே அழைக்கிறான். அவனுடைய இயல்பின் குரலுக்கு அவன் செவிசாய்க்கிறான். அவனுடைய மனம் இயல்பாகவே இறைவனின் இருப்பை நம்புகிறது, அவனைத் தேடுகிறது, அவனிடம் சரணடைய விரும்புகிறது.
இறைவனைக் குறித்த ஞானம் மனித உள்ளத்திற்கு நிம்மதியை அளிக்கக்கூடியது. அதுவே உன்னதமான ஞானம். அதற்கு ஈடாக எந்தவொன்றையும் கூற முடியாது. அந்த ஞானத்தைப் பெற்றவர்கள் எதிர்காலத்தை எண்ணி பயப்படவோ இழந்தவற்றை எண்ணி கவலைப்படவோ மாட்டார்கள். தங்களுக்குக் கிடைத்த எந்தவொன்றைக் கொண்டும் அவர்கள் கர்வம்கொள்ளவும் மாட்டார்கள். எல்லாவற்றிலும் அவர்கள் காணும் இறைவனின் மறைகரம் அவர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு மனப்பக்குவத்தை அளித்துவிடும்.
அவர்கள் இயலாமையைக் கொண்ட பலவீனர்களாக இருந்தாலும் ‘அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்’ என்று அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களை பலம்மிக்கவர்களாக மாற்றிவிடுகிறது. அவர்களைப் பொறுத்தவரை சாத்தியமற்றது என்று எதுவும் இல்லை. இறைவன் நாடினால் எதுவும் சாத்தியமே என்பதே அவர்களை அவர்களின் ஆழமான நம்பிக்கை. அவர்களின் ஆழமான நம்பிக்கை இறைவனைக் குறித்த அவர்களின் அறிதல்களிலிருந்து ஊற்றெடுக்கக்கூடியது. அது உள்ளீடற்ற வெற்று நம்பிக்கை அல்ல.
உங்களுக்கும் இஸ்லாத்துக்குமான தொடர்பு என்ன என்று கேட்டேன் அந்த மனிதரிடம். நான் கம்யூனிசத்தையும் நாத்திகத்தையும் பின்பற்றுகிறேன். ஆனால் இஸ்லாத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதுகிறேன் என்றார். உங்களோடு ஒட்டியிருக்கின்ற முஸ்லிம் பெயரின் காரணமாக அல்லது நீங்கள் ஒரு முஸ்லிம் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதனால் அது இருக்கலாம் என்றேன். இல்லை, இந்தப் பிரபஞ்ச ஒழுங்கமைவு எனக்குக் கடவுளை நினைவூட்டுகிறது என்றார்.
எனக்கு ஓரான் பாமுக்கின் ‘பனி’ நாவலின் கதாநாயகன் ‘கா’ கூறிய வசனம் நினைவுக்கு வந்தது. “இந்தப் பனி எனக்குக் கடவுளை நினைவூட்டுகிறது” என்றான் அவன். வெயில், மழை, காற்று, கடல் என இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் மனிதனுக்கு இறைவனை நினைவூட்டவே செய்கிறது. மாபெரும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒழுங்கமைவு நிச்சயம் அறிவுடையோருக்கு இறைவனை, அவனுடைய வல்லமையை நினைவூட்டவே செய்யும். திருக்குர்ஆன் மீண்டும் மீண்டும் இந்த ஒழுங்கமைவை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது.
சத்தியத்தைக் கண்டடைவது என்பது இறைவனைக் கண்டடைவதே. உங்கள் மனதின் வெறுமையை அவனைக் கொண்டு மாத்திரமே உங்களால் போக்க முடியும். அவனுடைய நினைவு உங்கள் ஆன்மாவுக்கான உணவு. அவனை நினைவுகூராமல், அவனை வணங்காமல் உங்களால் நிம்மதியாக இருக்க முடியாது. அவனை மறப்பதனால், நிராகரிப்பதனால் உங்களுக்கு ஏற்படும் வெறுமையை வேறு எதனைக் கொண்டும் உங்களால் போக்க முடியாது. உங்களுக்கு வரக்கூடிய ஒவ்வொரு துன்பமும் அவனைத் தவிர உங்களுக்கு வேறு அடைக்கலம் இல்லை என்பதை உணர்த்திக் கொண்டேயிருக்கும். மனிதனுக்கு இறைவன் அவசியம். அவன் இன்றி இந்தப் பூமியில் மனிதனுடைய வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை.
இறைவனைக் கண்டடைவது முதலில் உங்கள் உள்ளத்தில்தான் நிகழ வேண்டும். அதனை நீங்கள்தான் சுயமாகக் கண்டடைய வேண்டும். அது ஓர் உணர்வு நிலை. அது ஒரு திறப்பு. அது நீங்கள் அடைந்துவிட்டால் அல்லது அது உங்களுக்கு நிகழ்ந்துவிட்டால் வெளிப்படையான ஆதாரங்கள் எதுவுமேயின்றி நீங்கள் முழுக்க முழுக்க அவன் பக்கம் திரும்பி விடுவீர்கள். நீங்கள் அதனை அடையவில்லையெனில் அல்லது அது உங்களுக்கு நிகழவில்லையெனில் நீங்கள் அங்கும் இங்கும் தடுமாறிக் கொண்டேயிருப்பீர்கள்.
எந்தக் குழந்தையும் முஸ்லிமாகவோ இந்துவாகவோ கிருஸ்துவனாகவோ பிறப்பதில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதம் சரியான வாதம்தான். இஸ்லாமும் இப்படித்தான் கூறுகிறது. தாய்தந்தையரே குழந்தைகளை தாங்கள் விரும்பியவாறு மாற்றுகிறார்கள். இங்கு நாத்திகர்கள் கவனிக்க மறுப்பது குழந்தை இயற்கை நிலையில் பிறக்கிறது என்பதைத்தான். யாரும் சொல்லிக் கொடுக்காமல் அது கடவுளை அறிந்துகொள்ளும் அல்லது ஒரு சிறிய நினைவூட்டல் போதும் அது கடவுளின் பக்கம் திரும்புவதற்கு. உலகுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழக்கூடிய பழங்குடி சமூகங்களிடம் கடவுள் நம்பிக்கை காணப்படுகிறது. கடவுள் நம்பிக்கையில்லாத எந்த பழங்குடி சமூகமும் இல்லை என்று கூறும் அளவுக்கு ஏதேனும் ஒரு வகையில் அவர்களிடம் கடவுள் நம்பிக்கை காணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு திணிக்கப்படுவது நாத்திகம்தான். அதுவும் நாத்திகம் நகர வாழ்க்கையில்தான் அதிகம் காணப்படுகிறது. இயற்கைசூழ் வாழ்க்கை வாழும் நாட்டுப்புற மக்களிடம் நாத்திகம் பெரும்பாலும் காணப்படுவதில்லை. குறைவான அளவில் காணப்பட்டாலும் அது நகரத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகத்தான் இருக்கும்.
இறைவனின் பக்கம் திரும்புதல் என்பது ஒருவன் தன் இயல்பின் பக்கம் திரும்புதலேயாகும். அதனால்தான் அது அவனுக்கு இலகுவான ஒன்றாக இருக்கிறது. ஒரு குழந்தை தன் தாயின் பக்கம் திரும்புவதுபோல அவன் இறைவனின் பக்கம் திரும்புகிறான். கடவுள் இல்லை என்று ஒருவனை நம்ப வைப்பதற்கு ஆயிரம் ஆதாரங்களை, வாதங்களை அடுக்க வேண்டியிருக்கும். அவையும் திடீரென அவனை ஏதேனும் ஒரு ஆபத்து சூழ்ந்து கொண்டால் அத்தனை ஆதாரங்களும் வாதங்களும் கானல்நீர்போல ஒன்றுமேயில்லாமல் ஆகிவிடும். அவை வெறுமனே புனையப்பட்டவை என்பதை மிக எளிதாக புரிந்துகொள்கிறான். எவ்வித ஆதாரமும் இன்றி அவன் இறைவனின் பக்கம் இலகுவாகத் திரும்பி விடுகிறான்.
அவன் அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அனைவரையும் அடக்கியாள்பவன்; இணையோ துணையோ இல்லாதவன். அவனுக்குத் தாய்தந்தையோ பிள்ளைகளோ இல்லை. அவன் தேவையற்றவன். அவனைப் போன்று யாரும் எதுவும் இல்லை. அவனே படைப்புகள் அனைத்தையும் படைத்தவன்; அவற்றுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன்; அவற்றைப் பராமரித்துக் கொண்டிருப்பவன். அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அவனுடைய அனுமதியின்றி, அவனுக்குத் தெரியாமல் இந்த உலகில் எதுவும் நிகழ்ந்துவிட முடியாது. அவனுடைய கண்காணிப்பிலிருந்து யாரும் எதுவும் தப்பிவிட முடியாது. அவனே முதலும் முடிவுமானவன். அவனே வெளிப்படையானவனும் மறைவானவனும் ஆவான்.
அவன் தான் நாடியதைச் செய்யக்கூடிய பேராற்றல்மிக்க பேரரசன். அவனுடைய நாட்டத்திற்குக் குறுக்காக எந்தவொன்றும் வந்துவிட முடியாது. தான் நாடியவற்றைப் படைக்கிறான்; தான் நாடியவற்றை அழிக்கிறான். அவனுடைய நாட்டத்தில்தான் நன்மை உள்ளது. அவனுடைய நாட்டத்தில்தான் நீதி உள்ளது. எந்தவொன்றையும் அவன் வீணாகப் படைப்பதில்லை. யாரையும் அவன் காரணமின்றி தண்டிப்பதில்லை. எதையும் அவன் காரணமின்றி படைப்பதுமில்லை.
வாழ்வும் மரணமும் அவன் கரத்தில்தான் உள்ளன. தான் நாடியோருக்கு மரணத்தை அளிக்கிறான். தான் நாடியோரை குறிப்பிட்ட அவகாசம் வரை விட்டு வைக்கிறான். தவறிழைப்பவர்களுககு தக்க தண்டனையளிக்கிறான். அவனுடைய பிடியிலிருந்தும் யாரும் எங்கும் தப்பிவிட முடியாது.
அவன் சத்தியவாதிகளுக்கு உதவி செய்கிறான். அவர்களின் பாதங்களை உறுதிப்படுத்துகிறான். அவர்களைப் பாதுகாக்கிறான். அவன் அசத்தியவாதிகளை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களே அறியாத விதத்தில் பிடிக்கிறான். ஒரேயடியாக அவர்களை தண்டிக்கவும் செய்கிறான். அவன் அளவிலாக் கருணையாளன்; இணையிலாக் கிருபையாளன்.
