நோன்பு, புனித மாதங்கள், போர், புனித மாதங்களில் போர், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல் ஆகிய விவகாரங்களுக்குப் பிறகு இப்போது ஹஜ் தொடர்பான விவகாரம் இடம்பெறுகிறது. ஏற்கனவே புனித மாதங்கள் தொடர்பான விவகாரத்தில் ஹஜ்ஜைக் குறித்த குறிப்பும் இடம்பெற்றிருந்தது. இந்த வசனங்கள் முந்தைய வசனங்களோடு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றன. ரமலான மாத நோன்புக்குப் பிறகுதான் ஹஜ் செய்வதற்கான மாதங்கள் இடம்பெறுகின்றன. ஆகவே நோன்பு தொடர்பான விவகாரங்களுக்குப் பிறகு ஹஜ் தொடர்பான விவகாரங்கள் இடம்பெறுவது இயல்பானதுதான்.
وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ
فَإِذَا أَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ وَاتَّقُوا اللهَ وَاعْلَمُوا أَنَّ اللهَ شَدِيدُ الْعِقَابِ
2:196. “அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுங்கள். ஆனால் நீங்கள் முற்றுகையிடப்பட்டால் உங்களுக்குச் சாத்தியமான பலிப்பிராணியை அறுங்கள். பலிப்பிராணி தனக்குரிய இடத்தை அடையும்வரை உங்கள் தலைமுடிகளை மழிக்காதீர்கள். உங்களில் யாரேனும் நோயாளியாக அல்லது தம் தலையில் பிணி உள்ளவராக இருந்தால் அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்கவோ தானதர்மம் செய்யவோ பலிகொடுக்கவோ வேண்டும். அமைதி நிலை ஏற்பட்டு யாரேனும் ஹஜ்காலத்தில் உம்ராவின் பலனையும் அடைய விரும்பினால் அவர் தமக்குச் சாத்தியமானதைப் பலியிட வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாதவர் ஹஜ்ஜின் காலத்தில் மூன்று நாட்களும் வீடு திரும்பிய பின்னர் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இது முழுமையான பத்து நாட்களாகும். இது யார் மஸ்ஜிதுல் ஹராம் என்னும் புனித ஆலயத்திற்கு அருகில் வசிக்கவில்லையோ அவருக்குரியதாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவன் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.”
ஹஜ்ஜும் உம்ராவும் இப்ராஹீம் நபியின் காலத்திலிருந்தே அறபுக்களுக்கு மத்தியில் வழக்கத்தில் இருந்து வருகின்ற வழிபாடுகள்தாம். ஆனால் அந்த வழிபாடுகள் களங்கப்படுத்தப்பட்டிருந்தன. அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டிய அந்த வழிபாடுகள் கஅபாவில் வைக்கப்பட்டிருந்த சிலைகளுக்காகவும் செய்யப்பட்டன. ஆகவே இந்த வசனத்தில் அவை அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும் என்ற கட்டளை இடம்பெறுகிறது. இந்த வசனங்கள் அந்த வழிபாடுகளில் புகுந்துவிட்ட தேவையற்ற விசயங்களை நீக்கிவிட்டு அவை எப்படி முறையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கான ஒழுங்குமுறைகளை முன்வைக்கின்றன.
ஹஜ் என்பது மக்காவில் அமைந்துள்ள கஅபா என்னும் ஆலயத்திற்குச் சென்று இஸ்லாம் அங்கீகரித்த வழிபாடுகளை நிறைவேற்றுவதாகும். உம்ரா என்பதும் அதுதான். அரஃபா மைதானத்தில் தங்கியிருத்தல் என்னும் செயல்பாடே ஹஜ்ஜையும் உம்ராவும் வேறுபடுத்தும் அம்சமாக இருக்கிறது. ஹஜ் என்பது குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும். உம்ரா என்பது எப்போது வேண்டுமானாலும் செய்யப்படலாம்.
இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘அல்லாஹ்வுக்காக’ என்ற வார்த்தை கவனிக்கத்தக்கது. இன்றும் மனிதர்கள் ஹஜ், உம்ரா என்ற பெயரில் வேறு வேறு நோக்கங்களை சுமந்து கொண்டு கஅபாவை நோக்கிச் செல்கிறார்கள். ஹஜ்ஜும் உம்ராவும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யப்பட வேண்டும். தாங்கள் ஹாஜி என்று அழைக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ தங்களின் பெருமையை பறைசாற்ற வேண்டும் என்பதற்காகவோ வேறு நோக்கங்களுக்காகவோ அவை செய்யப்படக்கூடாது. வழிபாடுகள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுதல் என்ற நோக்கத்திற்காகவே முன்வைக்கப்பட வேண்டும். வேறு நோக்கங்களுக்காக முன்வைக்கப்படும் வழிபாடுகள் உயிரோட்டமற்ற வெறும் சடங்குகள்தாம்.
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து புறப்பட்டுச் செல்லும்போது வழியில் நீங்கள் எதிரிகளால் தடுக்கப்பட்டால், வேறு ஏதேனும் ஆபத்தினால் பயணத்தை தொடர முடியாமல் ஆகிவிட்டால் அந்த இடத்தில் உங்களுக்குச் சாத்தியமான பலிப்பிராணியை அறுத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள்.
“பலிப்பிராணி தனக்குரிய இடத்தை அடையும்வரை உங்கள் தலைமுடிகளை மழிக்காதீர்கள்”
இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘மஹில்ல’ என்ற வார்த்தை இடம், நேரம் என்ற இரண்டையும் குறிக்கக்கூடியதாகும். ஆகவே இந்த வாசகத்திற்கு பலிப்பிராணி தனக்குரிய இடத்தை அடையும்வரை அல்லது பலிப்பிராணி தனக்குரிய நேரத்தை அடையும்வரை (அதாவது துல்ஹஜ் பத்து அறுக்கப்படும் நாள்) இந்த வாசகம் போர்ச்சூழல், அமைதியான சூழல் இரண்டுக்கும் பொருந்தக்கூடிய வகையில் வாசக அமைப்பைக் கொண்டிருப்பதாக மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி கூறுகிறார். போர்ச்சூழலில் தடுக்கப்பட்ட இடத்தில் பலிப்பிராணியை அறுத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளலாம். நபியவர்களின் செயல்பாடு இதற்கு ஆதாரமாக இருக்கிறது. அவர்கள் ஹுதைபிய்யா என்ற இடத்தில் தடுக்கப்பட்டபோது இப்படித்தான் செய்தார்கள். அமைதி நிலை ஏற்பட்டு விட்டால் பலிப்பிராணி அதற்குரிய இடத்தில்தான் அறுக்கப்பட வேண்டும்.
நோயின் காரணமாக அல்லது ஏதேனும் சிரமத்தின் காரணமாக பலிப்பிராணியை அறுக்கும் முன்னரே தலைமுடியை மழிக்கும் நிர்ப்பந்த நிலைக்கு ஒருவர் ஆளானால் அவர் தலைமுடியை மழித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்குப் பரிகாரமாக அவர் நோன்பு வைக்க வேண்டும் அல்லது தர்மம் செய்ய வேண்டும் அல்லது ஒரு ஆட்டினை அறுத்துப் பலியிட வேண்டும். சுருக்கமான இந்த வாசகத்திற்கு விளக்கமாக நபியவர்கள் அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டினை அறுத்துப் பலியிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
அன்றைய அறபுக்களுக்கு மத்தியில் ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்துச் செய்வது தவறான ஒன்றாகக் கருதப்பட்டது. ஹஜ் செய்யும் எண்ணத்துடன் வருபவர் ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும். உம்ரா செய்யும் எண்ணத்துடன் வருபவர் உம்ரா மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதி வந்தார்கள். மக்காவில் வசிப்பவர்களுக்கு இது சிரமமான ஒன்றல்ல. ஆனால் தூரமான இடங்களிலிருந்து வருபவர்களுக்கு இது சிரமமான ஒன்று. ஹரம் எல்லைக்குள் வசிப்பவர்கள் அன்றி மற்றவர்கள் அவ்வாறு செய்யலாம் என்று அல்லாஹ் அனுமதி அளிக்கிறான். அவ்வாறு செய்பவர்கள் முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதற்கான வழிபாடுகளை முடித்து விட்டு பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து அதற்கான வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் பலிப்பிராணியை அறுக்க வேண்டும். அவ்வாறு அறுக்க இயலாதவர்கள் அதற்குப் பரிகாரமாக மூன்று நாட்கள் ஹஜ்ஜின் காலத்திலும் அங்கிருந்து திரும்பி வீட்டிச் சென்று ஏழு நாட்களும் மொத்தம் பத்து நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.
இந்த சட்டங்களின் நோக்கம் தக்வாதான். அதுதான் முதன்மையானது. அதுதான் வழிபாடுகளுக்கு அர்த்தம் அளிப்பது. அதுவன்றி வழிபாடுகள் வெறும் சடங்குகளாகத்தான் எஞ்சி நிற்கும். அல்லாஹ் விதித்த வரம்புகளை பேணிக் கொள்ளுங்கள். அவன் அளித்த சட்டங்களைக் கடைப்பிடியுங்கள். அவன் கட்டளைகைளுக்கு மாறாகச் செயல்படுவர்களை தண்டிப்பதில் அவன் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَاأُولِي الْأَلْبَابِ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ فَإِذَا أَفَضْتُمْ مِنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِنْ كُنْتُمْ مِنْ قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللهَ إِنَّ اللهَ غَفُورٌ رَحِيمٌ فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ
مِنْ خَلَاقٍ وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ أُولَئِكَ لَهُمْ نَصِيبٌ مِمَّا كَسَبُوا وَاللهُ سَرِيعُ الْحِسَابِ وَاذْكُرُوا اللهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ فَمَنْ تَعَجَّلَ فِي يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ لِمَنِ اتَّقَى وَاتَّقُوا اللهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ
2:197-203. “ஹஜ் அறியப்பட்ட மாதங்களில்தான் செய்யப்பட வேண்டும். யாரேனும் அந்த மாதங்களில் ஹஜ் செய்ய தீர்மானித்துவிட்டால் அவர் ஹஜ்ஜின்போது ஆபாசமான பேச்சு, பாவமான காரியம், சண்டை சச்சரவு ஆகிய காரியங்களில் ஈடுபடக்கூடாது. நீங்கள் செய்யும் நற்செயல்களை அல்லாஹ் அறிந்துகொள்வான். நீங்கள் வழித்துணைச் சாதனங்களை எடுத்துச் செல்லுங்கள். மிகச் சிறந்த வழித்துணைச் சாதனம் தக்வாதான். அறிவுடையவர்களே! என்னையே அஞ்சுங்கள். அந்தப் பயணத்தில் உங்கள் இறைவனின் அருளையும் தேடிக்கொள்வது உங்கள்மீது குற்றமாகாது. நீங்கள் ‘அரபா’விலிருந்து திரும்பும்போது ‘மஷ்அருல் ஹராமில்’ தங்கி அல்லாஹ்வை நினைவுகூருங்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்தவாறே அவனை நினைவுகூருங்கள். இதற்கு முன்னர் நீங்கள் வழிதவறியவர்களாக இருந்தீர்கள். பின்னர் எல்லோரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள். அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றான். உங்கள் ஹஜ்ஜின் கடமைகளை நீங்கள் நிறைவேற்றிவிட்டால் உங்கள் மூதாதையர்களை நினைவுகூர்வதுபோன்று, ஏன் அதைவிடவும் அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலேயே தந்துவிடு” என்று பிரார்த்திக்கின்றனர். அவர்களுக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் சிலர், “எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையை அருள்வாயாக. எங்களை நரகநெருப்பின் வேதனையை விட்டும் காப்பாற்றுவாயாக” என்று பிரார்த்திக்கின்றனர். இத்தகையவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்தற்கான பங்கு உண்டு. அல்லாஹ் கணக்கு தீர்ப்பதில் விரைவானவன். குறிப்பிட்ட சில நாட்களில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். யாரேனும் அவசரப்பட்டு இரண்டு நாட்களில் மக்காவுக்குத் திரும்பிவிட்டால் அவர்மீது குற்றமாகாது. யாராவது தங்கி தாமதமாகப் புறப்பட்டால் அவர்மீதும் குற்றமாகாது. இது அல்லாஹ்வை அஞ்சுவோருக்கான அறிவுரையாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடமே நீங்கள் ஒன்றுதிரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.”
அறியப்பட்ட மாதங்கள் என்றால் இப்ராஹீம் நபியின் காலகட்டத்திலிருந்து தலைமுறை தலைமுறையாக அறியப்பட்ட மாதங்கள். அவை ஷவ்வால், துல்காயிதா, துல்ஹஜ் ஆகியவையாகும். இந்த மாதங்களில் ஹஜ் செய்ய தீர்மானித்து விட்டவர் ஹஜ் முடியும்வரை காமம் சார்ந்த பேச்சுகள், செயல்பாடுகள், அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறான செயல்பாடுகள், தர்க்கங்கள் ஆகியவற்றைவிட்டு விலகியிருக்க வேண்டும். ஹஜ் மனதைத் தூய்மைப்படுத்துவற்கான, ஆன்மீக உயர்வை அடைவதற்கான ஒரு வழிபாடு. தடுக்கப்பட்ட அந்த செயல்பாடுகளிலிருந்து முழுமையாக விலகியிருப்பதன் வழியாக அந்த நோக்கத்தை அடைய முடியும். தடுக்கப்பட்ட அந்த செயல்பாடுகள் ஹஜ்ஜின் நோக்கத்தை சிதைத்து விடும். பயணம் மனிதனின் காமத்தை, கோபத்தை, தீய இச்சைகளை தூண்டக்கூடியது. அவன் கவனமாக இருக்கவில்லை எனில் அவை அவனுடைய நோக்கத்தைக் கெடுத்து அவனை பெரிய அளவில் களங்கப்படுத்தி விடும். மற்ற காலங்களைவிட இந்த காலத்தில் அவன் கூடுதலாக கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆகவேதான் அவன் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த இடத்தில் அவை நினைவூட்டப்படுகின்றன.
இந்த மாதங்களில் அவர்கள் கூடுதலாக நற்செயல்களில் ஈடுபட வேண்டும். அவர்கள் செய்யும் எந்தவொரு நற்செயலையும் அல்லாஹ் வீணாக்கி விட மாட்டான். அவன் அவற்றுக்கு கூலி வழங்குபவனாக இருக்கின்றான். பயணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். பயணத்திற்கான மிகச் சிறந்த முன்னேற்பாடு தக்வாதான். ஊரில் இருக்கும்போது அவனுக்கு தக்வா அவசியம்தான். அதுதான் அவனைப் பாதுகாக்கும். பயணத்தில் அது அவனுக்கு இன்னும் கூடுதலாக தேவைப்படுகிறது. பயணம் மனிதனை மாற்றிவிடும் தன்மை கொண்டது. அவனுடைய அகம் கூர்மையாக இருக்கும் தருணம் அது. எந்தவொன்றையும் அது எளிதாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கும். தக்வா என்னும் வழித்துணைச் சாதனத்தைக் கொண்டே அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதைத்தான் நபியவர்கள் தங்களின் தோழருக்கு அறிவுரையாக வழங்கினார்கள், “நீங்கள் எங்கிருந்தாலும் தக்வாவைக் கடைப்பிடியுங்கள்” பயணத் துணையாக நாம் கொள்ள வேண்டியது தக்வாவையும் நற்செயல்களையும்தான். இந்த வசனம் அதைத்தான் நமக்குக் கற்றுத் தருகிறது.
அறிவுடையவர்களே! தக்வாவைக் கடைப்பிடியுங்கள். எந்நிலையிலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அதுதான் ஒளியாக அமைந்து உங்களைப் பாதுகாக்கும்.
தக்வாதான் ஹஜ்ஜின் நோக்கம். ஆனாலும் அந்தப் பயணத்தில் நீங்கள் வியாபாரத்தின்மூலம் அல்லாஹ்வின் அருளை தேடிக் கொள்ளலாம். ஆன்மீகப் பயணத்தில் உலகியல் நன்மை உபரியான ஒன்றாக இருக்கலாம். அது அடிப்படையான நோக்கமாக மாறிவிடக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழியில் பெறப்படும் வருமானம் அல்லாஹ்வின் அருளேயாகும்.
அரஃபாவிலிருந்து நீங்கள் திரும்பும்போது முஸ்தலிஃபாவில் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூருங்கள். அல்லாஹ் உங்களுக்கு எப்படி கற்றுக் கொடுத்துள்ளானோ அப்படி அவனை நினைவு கூருங்கள். அவனுடைய துதி பாடுங்கள், அவனைப் புகழுங்கள், அவனுடைய பெருமையை பறைசாற்றுங்கள்.
அன்றைய அறபுக்கள் அரஃபாலிருந்து முஸ்தலிஃபா சென்றடையும் தருணத்தை கொண்டாட்டத்திற்கான தருணமாக ஆக்கி வைத்திருந்தார்கள். கவியரங்கு, ஆடல், பாடல், நடனம் போன்றவற்றுக்கான தருணமாக அதனை அவர்கள் ஆக்கி வைத்திருந்தார்கள். அதற்குப் பகரமாக அந்த தருணைத்தை அவனை நினைவுகூருவதற்கான தருணமாக ஆக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதற்கு முன்னர் நீங்கள் வழிதவறி இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியைக் காட்டி உங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஆகவே அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவன் உங்களுக்கு இட்ட கட்டளைகளை நிறைவேற்றுங்கள். அறியாமைக் காலத்து செயல்பாடுகளிலிருந்து விலகியிருங்கள்.
“பின்னர் எல்லோரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்”
அன்றைய குறைஷிகள் தங்களை உயர் குலத்தினராக, இறையில்லத்தின் புரோகிதர்களாக கருதி வந்தார்கள். ஆகவே அவர்கள் மற்ற மக்களைப் போன்று அரஃபாவில் தங்குவது தங்களுக்கு அவசியமற்றது என்று கருதி முஸ்தலிஃபாவுக்கு மட்டும் சென்று வந்தார்கள். இந்த வசனத்தின்மூலம் அவர்களுக்கு எந்த தனித்துவமும் இல்லை என்பதையும் எல்லா மக்களுக்கும் எப்படி அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா திரும்புகிறார்களோ அப்படியே அவர்களும் திரும்ப வேண்டும் என்பதையும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். ஹஜ்ஜின் வழிபாடுகளில் யாருக்கும் எந்த தனித்துவமும் இல்லை.
நீங்கள் செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பவனாகவும் உங்கள் மீது தடையில்லாமல் தொடர்ந்து அருள்புரிவனாகவும் இருக்கின்றான். உங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டு தூய மனிதர்களாக மாறுங்கள்.
அன்றைய அறபுக்கள் ஹஜ்ஜின் வழிபாடுகளிலிருந்து விடுபட்டு விட்டால் கேளிக்கையின் பக்கம் திரும்புவர்களாக இருந்தார்கள். ஒரு பெரும் செயலை நிறைவேற்றிய பிறகு மனம் கேளிக்கையின் பக்கம் சாய்கிறது. கவியரங்கு ஏற்படுத்துதல், தங்கள் முன்னோர்களின் புகழ்பாடி ஒருவருக்கொருவர் பெருமையடித்தல் போன்ற செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். அவர்களின் இந்த செயல்பாடுகளுக்குப் பதிலாக நிறைவேற்ற வேண்டிய வேறு செயல்பாடுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அது அவனை அதிகமதிகம் நினைவுகூருவதுதான். ஹஜ்ஜின் வழிபாடுகளிலிருந்து நீங்கள் விடுபட்டு விட்டால் அல்லாஹ் அதிகமதிகம் நினைவு கூருங்கள், உங்கள் முன்னோர்களை நினைவுகூருவதைப் போல அல்லது அதைவிடவும் அதிகமாக.
அந்த இடம், அந்த நேரம் பிரார்த்தனைக்கும் உரியது. ஆனால் மனிதர்கள் தங்களின் உலகியல் தேவைகளை மட்டுமே அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். அவர்களின் ஆன்மீக வழிபாடுகள்கூட உலகியல் நன்மைகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே இருக்கின்றன. அல்லாஹ்வே! எங்களுக்கு இவ்வுலகின் தேவைகளைக் கொடு என்று மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் உலகியல் இன்பங்கள் மட்டும்தான் நோக்கமாக இருக்கிறது. அவை அவர்களுக்கு நன்மையளிப்பவையா அல்லது தீமையளிப்பவையா என்றுகூட அவர்கள் யோசிப்பதில்லை. அவர்களுக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை.
நம்பிக்கையாளர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையை அல்லாஹ்விடம் வேண்டுகிறார்கள். எது தங்களுக்கு நன்மையளிக்குமோ அதையே அவர்கள் வேண்டுகிறார்கள். வெறுமனே இச்சைகளை நிறைவேற்ற வேண்டும், அது தீமையானதாக இருந்தாலும் சரியே என்று அவர்கள் கருதுவதில்லை. அவர்கள் நரகத்தின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவார்கள். அதாவது நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லும் செயல்பாடுகளிலிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுவார்கள். இது ஒரு செறிவான பிரார்த்தனை. நபியவர்கள் அதிகம் கேட்ட பிரார்த்தனை. நம்பிக்கையாளர்களையும் உலகியல்வாதிகளையும் வேறுபடுத்தும் அடிப்படையான புள்ளி இது. உலகியல்வாதிகளும் ஆன்மீகச் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் உலகியல் இன்பங்களைப் பெற வேண்டும் என்பதாகவே இருக்கும். ஆனால் நம்பிக்கையாளர்கள் இவ்வுலகையும் மறுவுலகையும் ஒருசேர கவனத்தில் கொண்டே செயல்படுவார்கள். அவர்கள் இவ்வுலகில் அனுபவிக்கும் இன்பங்கள்கூட மறுமையில் நன்மையைப் பெற்றுத்தரக்கூடியவையாகவே இருக்கும். அவர்கள் மறுமையில் தாங்கள் செய்த நற்செயல்களுக்கான கூலியை முழுமையாகப் பெறுவார்கள். தங்களின் இவ்வுலகையும் மறுவுலகையும் ஒருசேர அழகுபடுத்திக் கொண்ட அவர்கள்தாம் உண்மையில் ஈருலகிலும் இலாபமடையக்கூடியவர்கள் ஆவர். அல்லாஹ் அவகாசம் அளிக்கிறான். யாரையும் அவன் விசாரணை செய்யாமல், அவர்கள் செய்த செயல்களுக்கு கூலி வழங்காமல் விட்டு விடுவதில்லை. அவனுடைய அவகாசத்தை உலகியல்வாதிகள் புரிந்து கொள்வதில்லை. அவன் கணக்கு தீர்ப்பதில் விரைவானவன். யாரும் அவனுடைய பிடியிலிருந்து தப்ப முடியாது.
“குறிப்பிட்ட சில நாட்களில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்…”
இங்கு குறிப்பிட்ட சில நாட்கள் என்பது அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் மினாவில் தங்கியிருக்கும் நாட்கள். இவை சில நாட்கள்தான். இந்த நாட்களில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். யாரேனும் தேவையின் காரணமாக இரண்டு நாட்களில் முடித்து விட்டாலும் அவர் மீது குற்றமாகாது. மூன்று நாட்களும் தங்கியிருந்து முழுமைப்படுத்தினாலும் சரிதான். இரண்டு வடிவங்களிலும் தவறேதும் இல்லை. தக்வாதான் முதன்மையானது. அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அவன் விதித்த வரம்புகளைப் பேணிக் கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் அவன் பக்கமே ஒன்றுதிரட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
