பேராசையும் நுகர்வு வெறியும்

You are currently viewing பேராசையும் நுகர்வு வெறியும்

மற்றவர்களிடம் காட்டி பெருமிதம் கொள்ள வேண்டும், அவர்களோடு போட்டி போட்டு தனக்கென ஒரு கௌரவத்தை உருவாக்க வேண்டும், பெரும் புகழும் அங்கீகாரமும் பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் இல்லையெனில் மனிதன் தனக்குத் தேவையானவற்றைத் தவிர வேறு எதையும் சம்பாதிக்க மாட்டான். அவனுடைய பேராசையும் நுகர்வு வெறியும் பெருமளவு குறைந்து விடும்.

நவீன வாழ்வு இந்த உணர்வுகளை இன்னும் இந்த கூர்தீட்டுகிறது. அவற்றுக்குத் தீனியிடுகிறது. அது மனிதர்களை பேராசை கொண்டவர்களாக, நுகர்வு வெறி கொண்டவர்களாக, திருப்தியற்றவர்களாக ஆக்குகிறது. ஆகவே அவர்கள் உலகியலில் பெரும் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதற்குப் பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கு மாறானவர்களை மூடர்களாக, விவரம் அறியாதவர்களாக, நடைமுறைச் சூழல் அறியாதவர்களாக கருதுமாறு அவர்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த உலகின் எதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது. புரியும் சமயத்தில் எளிதில் மீள முடியாத ஒரு வலைப்பின்னலில் அகப்பட்டவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவர்களே விரும்பினாலும் அதிலிருந்து அவ்வளவு எளிதாக விடுபட முடியாது. சிறு சிறு நற்பணிகளில் ஈடுபடுவதன்மூலம் அவர்கள் தங்களைத் தாங்களே திருப்திபடுத்திக் கொள்கிறார்கள்.

மட்டுமீறிய உலகியல் வாதம் படைத்த இறைவனை, அவனுடைய வழிகாட்டலை மறக்கடிக்கிறது. அது மனிதனை ஆன்மா அற்ற வெற்று உடலாக, ஒரு இயந்திரமாக மாற்றுகிறது. உடலின் தேவைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு ஆன்மாவின் தேவைகளை அவன் புறக்கணிப்பதால் பிறழ்வுக்கு உள்ளாகிறான். இயல்பின் வழி அவனுக்குக் கிடைத்த பிரித்தறியும் அளவுகோலை இழக்கினான். விளைவாக நல்லவை, கெட்டவை அனைத்தும் அவனுடைய பார்வையில் சமமானவையாகத் தெரிகின்றன

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply