இலாபகரமான வாழ்க்கை

You are currently viewing இலாபகரமான வாழ்க்கை

இந்தக் காலகட்டம் இடையூறுகளால், நம்மை மூழ்கடிக்கும் விசயங்களால் ஆனது. கொஞ்சம் அசந்தால் நாம் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகி அதுவே நம் வாழ்க்கை என எண்ண ஆரம்பித்து விடுவோம். நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாளை வீணடித்து விடுவோம்.

இந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை மனிதனை வெறும் இயந்திரமாக ஆக்கி விடுகிறது. சம்பாதிப்பதும் செலவு செய்வதுமே அவன் செய்ய வேண்டிய பணிகள் என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தி விடுகிறது. விளைவாக மனிதர்கள் வாழ்வின் நோக்கத்தை மறந்து ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

வாழ்வின் நோக்கம் மறந்த வாழ்வு வீணான வாழ்வு. அது ஒருபோதும் நிறைவைத் தராது. ஒரு கட்டத்திற்குப் பிறகு அது கடும் இழப்புணர்வை, வெறுமையை, சலிப்பை ஏற்படுத்தும்.

திருக்குர்ஆனில் இடம்பெறும் வல்அஸ்ர் என்ற அத்தியாயம் நோக்கமுள்ள, இலாபகரமான, நிறைவைத் தரக்கூடிய ஒரு வாழ்க்கை முறையை முன்வைக்கிறது. அது கூறும் வாழ்க்கையை வாழ்பவர்கள் இழப்படைய மாட்டார்கள். அவர்களே நிறைவும் வெற்றியும் அடைவார்கள். அதுதான் இலாபகரமான வாழ்க்கை.

காலத்தின் மீது சத்தியமாக

மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.

ஆயினும் யார் ஈமான் கொண்டு, நற்செயல்கள் புரிந்து சத்தியத்தைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறிக் கொண்டார்களோ அவர்களைத் தவிர.

இது மக்காவில் அருளப்பட்ட அத்தியாயமாகும்.

நபித்தோழர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டால் இந்த அத்தியாயத்தை ஓதாமல் பிரிய மாட்டார்கள்.

இது ஒரு வகையான நினைவூட்டல். இந்த அத்தியாயத்தை ஓதி அவர்கள் ஒருவர் மற்றவருக்கு நினைவூட்டுபவர்களாக இருந்தார்கள்.

மூன்று வசனங்களைக் கொண்ட இந்த சிறிய அத்தியாயம் மனித வாழ்வுக்கான முழுமையான ஒரு வழிகாட்டலை முன்வைக்கிறது. குறைவான வார்த்தைகளில் இஸ்லாமிய வாழ்க்கை முறை முன்வைக்கப்படுகிறது. இந்தச் செறிவு திருக்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்று.

இமாம் ஷாஃபிஈ கூறுகிறார், “ஒருவர் இந்த அத்தியாயத்தில் மட்டுமே கவனம் செலுத்தினால்கூட அதுவே அவருக்குப் போதுமானதாக இருக்கும்.” இன்னொரு அறிவிப்பில், “அல்லாஹ் இந்த அத்தியாயத்தைத் தவிர வேறு எதையும் அருளாமல் இருந்திருந்தாலும் இதுவே போதுமானதாக இருந்திருக்கும்.”

ஒருவர் இந்த அத்தியாயத்தை தம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் அதுவே அவர் வெற்றியடைவதற்குப் போதுமானதாகும்.

அல்லாஹ் காலத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகிறான்.

ஏன் அல்லாஹ் காலத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகிறான்?

  • காலம்தான் ஒரு மனிதனிடம் இருக்கும் ஒரே முதலீடு. அதை எப்படி பயன்படுத்துகிறான் என்பதைப் பொறுத்தே அவன் வெற்றியடைய முடியும். கரைந்து கொண்டிருக்கும் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்திருக்கலாம்.
  • மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்பதற்கு காலம்தான் சாட்சியாக இருக்கிறது என்பதானால் அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்திருக்கலாம்.

மனிதனுக்கு இங்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாள் வீணானது அல்ல. அதைக் கொண்டே மறுமை நாளில் அவன் தனக்கான நிலையான தங்குமிடத்தை அமைத்துக் கொள்ள முடியும். இந்த காலத்தை வீணாக்கியவன் தன் வாழ்க்கைகையை வீணாக்கியவன் ஆவான். காலம்தான் வாழ்க்கை.

யாரிடம் இந்த அத்தியாயம் முன்வைக்கும் நான்கு பண்புகள் இல்லையோ அவர்கள் தங்களின் வாழ்க்கையை வீணாக்கி விட்டார்கள். அவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள். தங்களின் முதலீட்டை அவர்கள் நாசம் செய்து விட்டார்கள். 

அந்த நான்கு பண்புகள்

  • ஈமான்
  • நற்செயல்கள்
  • சத்தியத்தைக் கொண்டு ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுதல்
  • பொறுமையைக் கொண்டு ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுதல்

ஈமான் என்றால் என்ன?

அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பதையும் அவனுக்கு எவ்வித இணையும் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்வது. அவனுக்கே உரிய பண்புகளுடன் அவனை நம்புவது. அவனுடைய மார்க்கத்தை, அவனுடைய வேதத்தை நம்புவது. அவன் அனுப்பிய தூதர்களை நம்புவது, அவனுடைய வானவர்களை நம்புவது. அவன் தந்த கண்ணோட்டங்களை, வழிகாட்டுதல்களை, சட்டங்களை ஏற்றுக் கொள்வது, அவனுடைய தூதரைப் பின்பற்றுவது. அவனுடைய விதியை ஏற்றுக் கொள்வது.  

ஈமான் என்பது உள்ளத்தில் இருக்கும் நம்பிக்கை மட்டுமல்ல. அதுவே செயல்பாடுகளாக வெளிப்படுகிறது. ஈமான் என்பது நம்பிக்கையும் அதன் அடிப்படையிலான செயல்பாடுகளும் ஆகும்.

2. நற்செயல்கள்

இந்த மார்க்கம் முன்வைக்கக்கூடிய நற்செயல்கள் அனைத்திலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.

அடிப்படையான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் உட்பட இஸ்லாம் வலியுறுத்தும், ஆர்வமூட்டும் நற்செயல்கள் அனைத்திலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.

நற்செயலையும் தீய செயலையும் எப்படி அடையாளம் காண்பது?

இஸ்லாம் நற்செயல்களையும் தீய செயல்களையும் அடையாளப்படுத்தி இருக்கிறது. அதன் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.

இன்னொரு வழிமுறை நபியவர்களின் ஒரு ஹதீஸிலிருந்து பெறப்படுவது, ஒரு தோழர் நபியவர்களிடம் கேட்டார், அல்லாஹ்வின் தூதரே! பாவம் என்றால் என்ன? அதற்கு நபியவர்கள் கூறினார்கள், “எது உம்முடைய உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துகிறதோ அதுவே பாவம்.”

நற்செயல்கள் உள்ளத்திற்கு திருப்தியை ஏற்படுத்தும். தீய செயல்கள் நெருடலை குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும்.

நற்செயல்கள் இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும். நற்செயல்களில் ஈடுபடுபவர்கள் அற்புதமான மன அமைதியை உணர்வார்கள்.

நற்செயல்கள் ஈமானிலிருந்து வெளிப்படக்கூடியவையாக இருக்க வேண்டும்.

அவை அல்லாஹ்வுக்காகவே முன்வைக்கப்பட வேண்டும். அல்லாஹ்வுக்காக முன்வைக்கப்படும் நற்செயல்கள்தாம் அவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஈமான் இன்றி, அல்லாஹ்வுக்காக அல்லாமல் முன்வைக்கப்படும் நற்செயல்களின் நிலை என்ன?

அவை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது. ஆனால் இந்த உலகில் பலன்களைக் கொண்டு வரலாம். இந்த உலகில் நல்ல செயல்கள் பலன்களைக் கொண்டு வரும் என்பது இறைவன் அமைத்த நியதிகளில் ஒன்றுதான். ஆனால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் இல்லை. அவர்களும் நஷ்டமடைந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

3. சத்தியத்தைக் கொண்டு ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுவது

முதல் இரண்டு பண்புகள் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையோடு தொடர்புடையவை. அவர்கள் தனியர்களாக இருந்து கொண்டு அந்த பண்புகளைக் கொண்டிருக்க முடியும். அடுத்த இரு பண்புகளும் அவர்களின் பொது வாழ்க்கையோடு தொடர்புடையவை. அவர்கள் ஒரு சமூகமாக, கூட்டமைப்பாக இருந்தால் மட்டுமே செய்ய முடியுமானவை.

இங்கு ஹக் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது இந்த மார்க்கத்தின் போதனைகள் அனைத்தையும் உள்ளடக்கியது என்று பேரறிஞர் இப்னு ஆஷுர் கூறுகிறார். அதாவது நன்மை செய்வதைக் கொண்டும் தீமையிலிருந்து தவிர்ந்திருப்பதைக் கொண்டும் ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுவார்கள். அவர்கள் அழைப்பாளர்களாக இருப்பார்கள். அவர்கள் இஸ்லாத்தின்படி செயல்படுவதுடன் மற்றவர்களையும் செயல்படுமாறு தூண்டுவார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுபவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிவதோடு தங்களை நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். மாறாக ஒருவர் மற்றவருடன் இணைந்து நன்மையான செயல்களைப் பரப்புவார்கள், தீமையான செயல்களைத் தடுப்பார்கள்.

மனிதர்கள் தங்களுக்கு ஒத்திசைவானவர்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் இணைவதற்கு ஒத்திசைவும் ஒரு காரணம். நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையாளர்களுடன் இணைந்திருக்கும்போதுதான் அவர்களின் ஈமான் முழுமையடைகிறது, வலுவடைகிறது. அவர்கள் இலாபகரமான வாழ்க்கையை வாழக்கூடியவர்களாக இருப்பார்கள்.

4. பொறுமையைக் கொண்டு ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுவது

இந்த அழைப்பின் பாதையில் அவர்கள் சிரமங்களை, துன்பங்களை, இக்கட்டான சூழல்களை, நோய்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறியவர்களாக உறுதியாக நிற்பார்கள். நிலைகுலைந்துவிட மாட்டார்கள்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஸப்ர் என்ற வார்த்தை நற்பண்புகளைக் கொண்டு தன்னை அலங்கரிப்பதற்கும் தீய பண்புகளை விட்டுவிடுவதற்கும் ஒரு மனிதன் செய்யும் போராட்டத்தையும் குறிக்கும்.

இங்கு பொறுமை மூன்று விசயங்களுக்கு அவசியமாக இருக்கிறது.

நன்மையான செயல்களுக்கு எதிராக, நற்பண்புகளைக் கொண்டு நம்மை அலங்கரித்துக் கொள்வதற்கு எதிராக மனம் முன்வைக்கும் சாக்குப்போக்குகளை, சோம்பலை எதிர்கொண்டு முன்னேற வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த இடத்தில் பொறுமையுடன், மனக்கட்டுப்பாட்டுடன் நன்மையின் பாதையில் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

தீய செயல்களை செய்யாமல் இருப்பதற்கும் தீய பழக்கங்களை விட்டு விடுவதற்கும் மனம் முன்வைக்கும் இழப்புணர்வை, வெறுமையை தாண்டி பொறுமையாக, மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த இடத்திலும் பொறுமை அவசியமாகிறது.

மூன்றாவது, நாம் விரும்பாத நிகழ்வுகள் நிகழும்போது, துன்பங்களை எதிர்கொள்ளும்போது அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவர்களாக, நிராசையடையாமல் பொறுமையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

பொறுமையின் பாதையில் நம்பிக்கையாளர்கள் ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுபவர்களாக, ஆற்றுப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.  

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply