மொழிபெயர்ப்பு – சில வார்த்தைகள்

You are currently viewing மொழிபெயர்ப்பு – சில வார்த்தைகள்

ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பதற்கு அந்த புத்தகத்தின் ஆன்மாவோடு ஒன்ற வேண்டியது மிக அவசியம். இல்லையெனில் அது உயிரோட்டமற்ற வெற்று உடலாகிவிடும். புத்தகத்தின் ஆன்மாவோடு ஒன்றும் மொழிபெயர்ப்பாளர் இலக்கு மொழியில் நல்ல மொழிவளத்தையும் பெற்றிருப்பார் எனில் அது மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக வெளிப்படும். சில சமயங்களில் மூல மொழியில் உள்ள புத்தகத்தைக் காட்டிலும் அது மிகச்சிறந்த ஒன்றாகவும் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. இலக்கு மொழியில் போதிய மொழிவளத்தைப் பெறாதவர் மூலமொழியில் எவ்வளவுதான் திறமையானவராக இருந்தாலும் அவர் மொழிபெயர்ப்பைச் சிதைத்து விடுவார்.

மொழி என்பது மனிதன் தன்னை வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த சாதனம். போதிய மொழிவளத்தைப் பெறாததனால் எத்தனையோ ஞானிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள இயலாமல் இருப்பதையும் வெறுமனே மொழிவளத்தைக் கொண்டு மூடர்கள் தங்களை அறிஞர்களாக காட்டிக் கொண்டிருப்பதையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் தகுதியானவை மட்டுமே நிலைக்கின்றன. வெற்றுக் கூச்சல்கள் கால வெள்ளத்தில் அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்டுவிடுகின்றன.

தாய்மொழியில் மட்டுமே மனிதன் இயல்பாக வெளிப்பட முடிகிறது.  தாய்மொழியில் புலமைகொண்டிருப்பவர்களால் மற்ற மொழிகளை இலகுவாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. ஒரு மொழியில் திறமையுள்ளவர்களால் அதன்மூலம் இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வது மிக எளிது. ஒரு குழந்தை தாய்மொழியை மிக இலகுவாகக் கற்றுக் கொள்கிறது. அது நாம் சொல்லிக் கொடுக்காத வாசகங்களையும் கொண்டு நம்மிடம் பேசுவது பெரும் ஆச்சரியம்தான். தாய்மொழிக்கும் குழந்தைகளுக்கும் மத்தியில் ஏதோ ஒரு நெருக்கம் இருக்கத்தான் செய்கிறது.      

மொழிபெயர்ப்பு என்பது நுணுக்கமான செயல்பாடு. ஆர்வமும் திறமையும் ஆழ்ந்த கவனமும் இன்றி நாம் அதனைச் சிறந்த முறையில் நிறைவேற்ற முடியாது. ஆன்ம ஒன்றுதல் இன்றி இயந்திரத்தனமான மொழிபெயர்ப்பு நிச்சயம் புத்தகத்தின் தனித்தன்மையை சிதைத்து விடும். அவ்வாறு மொழிபெயர்ப்பதைவிட மொழிபெயர்க்காமல் இருப்பதே நல்லது. அது அந்த புத்தகத்திற்கென இருக்கும் நல்ல பெயரைக் கெடுத்துவிடும். புத்தகத்தின் உயிரோட்டத்தோடு நாம் ஒன்றும்போது அதன் கடினமான பகுதிகள்கூட நமக்கு இலகுவாகி விடுகின்றன. அதன் உயிரோட்டத்தை நாம் விட்டுவிட்டால் நாம் வேறு பக்கம் சென்று விடுவோம் அல்லது அந்த புத்தகத்திற்குப் பதிலாக புதியதொரு புத்தகத்தைக் கொண்டு வந்துவிடுவோம். 

ஒரு நாள் இரவு குறிப்பிட்ட பக்கத்தை மொழிபெயர்த்துவிட்டு தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் அந்த பக்கத்தை மொழிபெயர்த்தேன் என்பதையே மறந்து மீண்டும் அதனை மொழிபெயர்த்தேன். அன்று வாசகங்களைச் சரிபார்க்கும்போது ஒரே பக்கம் இரண்டு முறை மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை கண்டேன். அப்போதுதான் இரவு அந்தப் பக்கத்தை மொழிபெயர்த்தது என் நினைவுக்கு வந்தது. இரண்டுமே வேறு வேறு மொழிபெயர்ப்புகள். இரண்டுமே நான் மொழிபெயர்த்ததுதான். இரண்டுமே வேறு வேறு நடைகள். இரவு களைப்பின் காரணமாக மொழிபெயர்ப்பு இயந்திரத்தனமாக அமைந்துவிட்டது. காலையில் மொழிபெயர்த்த பக்கம் தெள்ளத் தெளிவாக உயிரோட்டத்துடன் இருந்தது.

மொழிபெயர்ப்பு என்பது நுணுக்கமான வாசிப்புகூட. வாசிக்கும்போது வாசிப்பின் ஓட்டத்தில் நுணுக்கமான விசயங்களை கவனிக்காமல் கடந்து விடுவோம். மொழிபெயர்ப்பில் அப்படியல்ல. அப்படி நாம் கடந்துவிடவும் முடியாது. கிட்டத்தட்ட அது நூலாசிரியரிடம் அமர்ந்து பாடம் கற்பதைப் போன்ற ஒரு செயல்பாடு. 

இலகுவான பக்கங்களைவிட கடினமான பக்கங்களை விரைவாக மொழிபெயர்க்கிறேன். இது எப்படி முரணாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? இலகுவான வேலையை மனம் பெரிதாகப் பொருட்டுபடுத்துவதில்லை. அதனால்தான் அது பெரிய அளவில் அதில் கவனம் செலுத்துவதில்லை. கடினமான வேலையில் ஒட்டுமொத்த கவனமும் குவிந்து விடுகிறது. ஒட்டுமொத்த கவனத்தோடு ஒரு பணியில் ஈடுபடும்போது அந்தப் பணியை நாம் விரைவாக நிறைவேற்றி விடுகின்றோம். இலகுவோ கடினமோ ஒரு பணியில் மனம் எந்த அளவு ஈடுபாடு கொள்கிறதோ அந்த அளவு அதனை சிறப்பாகவும் விரைவாகவும் முடிக்க முடியும்.

ஒரு பணியில் மனம் ஈடுபாடு கொள்ளவில்லையெனில் அந்தப் பணியை நம்மால் சிறந்த முறையில் நிறைவேற்ற முடியாது. நம்மையும் மீறி குறைகள் அதில் புகுந்து கொள்ளும். மனம் ஈடுபாடு கொள்ளாத ஒரு பணியை நிறைவேற்ற நேர்வது ஒரு வகையான சித்ரவதைதான். நீங்கள் செய்யக்கூடிய பணி உங்களுக்கு மனநிறைவைத் தந்தால், அதனை ஒரு தியானம்போல நீங்கள் நிறைவேற்ற உங்களால் முடிந்தால் அது உங்களின் வெறுமையை, அழுத்தத்தை கணிசமான அளவில் போக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நாம் இந்தப் பிரபஞ்சத்தில் ஆற்ற வேண்டிய பணியில் தன்னியல்பாக நமக்கு ஈடுபாடு ஏற்பட்டுவிடும். நம் உள்ளம் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டுவிடும். மனநிறைவோடு அந்தப் பணியை நாம் நிறைவேற்றத் தொடங்கிவிடுவோம். அந்தப் பணியை கண்டடைவதுதான் நமக்கு முன்னால் இருக்கு முதல் பணி. நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நம் மீது சுமத்தப்பட்ட சுமைகள் அல்ல. மாறாக அழுத்தங்களிலிருந்து, வெறுமையிலிருந்து நம்மை விடுவிக்கும் மாமருந்து.    

 

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply