தடுக்கப்பட்ட வழியில் அனுபவிக்கும் இன்பத்தைவிட அதனால் ஏற்படும் துன்பம் அதிகமாக இருக்கும். இங்கு ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய விலை இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கடமைகள் இருக்கின்றன. திருடித் தின்பவன் ஒருநாள் வசமாக மாட்டிக் கொள்வான். அவனால் எல்லா சமயத்திலும் தப்பிக்க முடியாது. எல்லா சமயத்திலும் அவனால் விழிப்புணர்வோடு, புத்திசாலித்தனத்தோடு நடந்துகொள்ள முடியாது. அவன் அனுபவித்த இன்பங்களுக்குப் பலமடங்கு துன்பங்களை அவன் அனுபவிக்க நேரிடலாம். ஒருவேளை அவன் வெளியில் அகப்படவில்லையென்றாலும் அவனுடைய அகத்திலிருந்து திடீரென உருவெடுக்கும் வெறுமையின் பிடியிலிருந்து அவனால் தப்பிக்க முடியாது. இங்கு அனுபவிக்கும் ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கூலியை மனிதன் விரும்பியோ விரும்பாமலோ வழங்கி விட வேண்டும்.
இறைவன் மனிதனுக்குத் தீங்கிழைக்கும் விசயங்களைத்தான் தடைசெய்துள்ளான். தடைசெய்யப்பட்டவற்றைவிட்டு தவிர்ந்திருப்பதால் அவனுக்குத்தான் நல்லது. அதனால் இறைவனுக்கு எந்த இலாபமும் இல்லை. அந்தத் தடையை மீறும்போது அவன் தனக்குத்தானே அநீதி இழைப்பவனாக ஆகிவிடுகிறான்.
மனிதர்கள் அடையும் கண்ணியத்திற்கும் அவர்களுடைய பேணுதலான வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அவர்கள் அடையும் இழிவுக்கும் அவர்களின் கட்டற்ற வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மனம் அதற்கு உகந்த விசயங்களைக் கொண்டுதான் நிம்மதியடைகிறது. அதற்கு மாறான விசயங்களைக் கொண்டு அது துன்பம் அடைகிறது.
ஏன் தடுக்கப்பட்டவற்றில் ஈர்ப்பு மிகுந்து காணப்படுகிறது? பாவங்களில் ஒருவித வசீகரம் இருப்பதால்தானே மனிதன் மீண்டும் மீண்டும் அவற்றில் ஈடுபட்டுக் கொண்டேயிருக்கிறான்? மனம் தன்னிடம் இருப்பவற்றை விட்டுவிட்டு இல்லாதவற்றுக்காக ஏன் ஏங்கிக் கொண்டேயிருக்கிறது?
“அவன் உங்களுக்கு ஈமானை பிரியத்திற்குரிய ஒன்றாக ஆக்கினான். உங்கள் உள்ளங்களில் அதனை அழகாக்கினான். அவனை நிராகரிப்பதையும் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதையும் பாவம் செய்வதையும் உங்களுக்கு வெறுப்புக்குரியவையாக ஆக்கினான்”
அல்ஹூஜூராத் என்ற அத்தியாயத்தில் இடம்பெறும் இந்த வசனத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகளிருப்பதாக நான் கருதுகிறேன். விருப்பும் வெறுப்பும் உள்ளத்திற்கு புகட்டப்பட வேண்டும். இந்த விருப்பும் வெறுப்பும் எப்படி உருவாகின்றன என்பது ஆச்சரியமான ஒன்று. ஒன்றை நாம் விரும்புகிறோம் எனில் அல்லது ஒன்றை நாம் வெறுக்கிறோம் எனில் அதற்கான சரியான காரணத்தை நம்மால் கூற முடியுமா? நாமே காரணங்கள் உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால் அதே காரணிகள் காணப்படும் மற்ற பொருட்களை நாம் நேசிப்பதோ வெறுப்பதோ இல்லையே!
மேற்கண்ட வசனம் நபித்தோழர்களைக் குறித்து சொல்லப்பட்ட வசனம். அதே சமயம் அது நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய வசனம். ஈமானை, நற்செயல்களை நாம் நேசிப்பதும் அல்லாஹ்வை நிராகரிப்பதை, அவன் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதை, தீய செயல்களை நாம் வெறுப்பதும் மாபெரும் அருட்கொடை. அது உள்ளத்திற்கு வழங்கப்படும் அருட்கொடை. அதற்கு ஈடான வேறு அருட்கொடை இல்லை. நம்மால் நல்லவற்றை நேசிக்க முடிந்தால் தீயவற்றை வெறுக்க முடிந்தால் நாம் இயல்பு நிலையில் இருக்கின்றோம் என்று பொருள்.
பாவத்திற்கு ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் அது மேலோட்டமான வசீகரம். அதனுள்ளே வெறுமையும் நிராசையும் அழிவும் இருக்கிறது. உண்மையில் அது நமக்கு நாமே செய்யும் தீங்கு. அதனுள் செல்லச் செல்ல நாம் நம் சுயத்தை இழந்துவிடுவோம். நம்மை நாமே மறந்து விடுவோம். அடிமைபோன்று செயல்படத் தொடங்கிவிடுவோம்.
நேசம்தான் நம்முடைய செயல்களை அலங்கரிக்கும். நேசம்தான் நம்மை செயல்படத் தூண்டும். ஈமானிய நேசம் நமக்கு வழங்கப்பட்டுவிட்டால் நற்செயல்கள் அழகானவையாக பாவமான செயல்கள் அருவருப்பானவையாக நமக்குத் தென்படத் துவங்கும்.
நேரான வழியில் நிலைத்திருப்பது, தவறான விசயங்களைவிட்டு விலகியிருப்பது ஆகிய நோக்கங்களைத் தவிர மனிதனுக்கு பெரிய அளவில் வேறு நோக்கம் அவசியமில்லை என்று கருதுகிறேன். தனிமனிதன் தன்னளவில் அவன் விரும்பும் வேறு நோக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். நான் கூறுவது சமூக அளவில் அவன் மீது சுமத்தப்படும் நோக்கம் என்றளவில்.
இந்த இரண்டுமே பார்ப்பதற்கு சாதாரணமானவையாகத் தெரிந்தாலும் வாழ்வில் கடைப்பிடிப்பது கொஞ்சம் கடினமானது. மனிதன் தன் வாழ்க்கை முழுவதும் நேரான பாதையைவிட்டு பிறழச் செய்யும் தடைகளையும் தவறான பாதையின் பக்கம் இழுத்துச் செல்லும் ஈர்ப்புகளையும் எதிர்கொண்டு கொண்டேயிருப்பான். அந்தத் தடைகளையும் ஈர்ப்புகளையும் தாண்டி நேரான பாதையில், சத்தியத்தில் நிலைத்திருப்பது நிச்சயம் ஒருவித போராட்டம்தான். அது அவன் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளும் போராட்டம்.
உங்களைச் சோதிப்பதற்காகவே அல்லாஹ் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதைத்தான் நான் மாபெரும் சோதனையாகக் என்று கருதுகிறேன். பெரும் பெரும் இலட்சியங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்று கூறுபவர்கள்கூட இந்தச் சோதனைக்கு முன்னால் எளிதில் தோல்வியடைந்து விடுகிறார்கள். சில சமயங்களில் அவர்களிடமிருந்து வெளிப்படும் செயல்கள் அவர்களை அற்ப மனிதர்களாகக் காட்டி விடுகின்றன.
பாவமன்னிப்புக் கோரிக்கை
மனிதன் செய்யும் பாவங்கள் அவன் மனதில் முள்ளாய் குத்திக் கொண்டிருக்கின்றன. அவன் சட்டத்தின் பிடியிலிருந்து, மற்றவர்களின் பார்வையிலிருந்து தப்பிவிட்டாலும் அவனால் மனதின் அழுத்தங்களிலிருந்து, அதன் நிந்தனையிலிருந்து தப்ப முடியாது. இறைவனிடம் முன்வைக்கப்படும் பாவமன்னிப்புக் கோரிக்கையினால் மனதில் முள்ளாய் குத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வுகள் அகன்று விடுகின்றன.
துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கும் தொடர்ந்து இறையருளைப் பெறுவதற்கும் இஸ்லாம் பாவமன்னிப்புக் கோரிக்கையை பரிந்துரைக்கிறது. மனிதன் தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டேயிருப்பது மிக அவசியம். அவன் செய்த பாவங்களினால் மனதில் படிந்துவிட்ட கரைகள் பாவமன்னிப்புக் கோரிக்கையின்மூலம் கழுவப்படுகின்றன.
மனிதனுக்குத் தீங்கிழைப்பவற்றையே இறைவன் தடைசெய்துள்ளான். பாவம் என்பது இறைவன் தடைசெய்துள்ள காரியங்களில் ஈடுபடுவதும் அவனுடைய கட்டளையை செயல்படுத்த மறுப்பதும் ஆகும். ஒரு மனிதன் பாவம் செய்யும்போது அவன் தனக்குத்தானே தீங்கிழைக்கிறான். பாவங்கள் துன்பங்களைக் கொண்டு வருபவை; இறையருளுக்குத் தடையாக வந்து நிற்பவை. பாவமன்னிப்புக் கோரிக்கை மன்னிப்பை மட்டுமின்றி இறையருளின் பாதையில் கிடக்கும் தடைகளையும் அகற்றக்கூடியவை.
ஒரு பாவம் செய்தவுடன் மனிதனுக்கு ஏற்படக்கூடிய குற்றவுணர்வும் அதற்கு நிவாரணியாக, ஆறுதலாக இடம்பெறும் வாசகங்களும் நபியவர்கள் கற்றுத்தந்த பின்வரும் பாவமன்னிப்புக் கோரிக்கையில் எவ்வளவு துல்லியமாக வெளிப்படுகிறது என்பதைப் பாருங்கள்:
“அல்லாஹ்வே, நீயே என்னைப் படைத்துப் பராமரிக்கும் என் இறைவன். உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. நீதான் என்னைப் படைத்துள்ளாய். நான் உனது அடிமை. என்னால் இயன்றவரை நான் உனக்கு அளித்த வாக்குறுதியின்படியும் ஒப்பந்தத்தின்படியும்தான் இருக்கிறேன். நான் செய்தவற்றின் தீங்கிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ எனக்கு அளித்த அருட்கொடைகளை நான் ஒத்துக்கொள்கிறேன். நான் செய்த பாவத்தையும் நான் ஒத்துக்கொள்கிறேன். ஆகவே என்னை மன்னித்துவிடு. உன்னைத்தவிர யாராலும் பாவங்களை மன்னிக்க முடியாது.” (புகாரீ)
பாவத்திலிருந்து விடுபடுதல்
மனிதன் எந்த பாவத்திற்கு அடிமையாகி விட்டானோ அதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதானதல்ல. தற்காலிகமாக அவன் விடுபட்டாலும் அதன் ஈர்ப்பின் காரணமாக மீண்டும் அதன் பக்கம் திரும்பி விடுவான் என்ற கருத்துதான் சரியானது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அது எளிமையானது அல்லது கடினமானது என்று சொல்லப்பட முடியாத வேறு வகையான இயல்பைக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்.
அவன் ஒரு பாவத்திற்கு அடிமையாவது சாதாரணமான ஒரு நிகழ்வாகத்தான் நிகழ்கிறது. ஆரம்பத்தில் அதன் மீதான ஈர்ப்பு அவனை ஈர்த்தாலும் தான் நினைத்தால் அதிலிருந்து விலகிவிட முடியும் என்று அவன் கருதுகிறான். அது ஓரளவு உண்மையும்கூட. ஆனால் போகப் போக அதன் மீதான ஈர்ப்பையும் தாண்டி அது அவனுடைய அன்றாட வாழ்வின் ஓர் அங்கம் என்ற அளவில் மாறிவிடும்போது தான் சிக்கலில் அகப்பட்டு விட்டதை அவன் உணரத் தொடங்குகிறான். தற்காலிகமாக விடுபடுவதும் மீண்டும் அதன் பக்கம் செல்வதும் அவன் வாழ்க்கையில் தொடர் கதையாகி விடுகிறது. ஒரு கட்டத்தில் அதிலிருந்து விடுபட முடியாத அளவு தான் அதனால் சூழப்பட்டு விட்டதாக நிராசையடைந்து விடுகிறான். மீள்வதற்கான முயற்சியை கைவிட்டு விட்டு அதுதான் விதி என்று எண்ணிக் கொள்கிறான்.
அவன் சாதாரணமாக ஒரு பாவத்திற்கு அடிமையானதுபோனது அதிலிருந்து விடுபடுவதும் நிகழ்ந்து விடுவதுண்டு. அவனுக்குள் இருக்கும் விடுபட வேண்டும் என்ற தீவிர உணர்வுதான் அதற்குக் காரணமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது. அவனுக்குள் இருக்கும் விடுபட வேண்டும் என்ற உணர்வோடு சூழலும் ஒத்துழைக்கும்போது விடுபடுதல் எளிதான ஒன்றாக அவனுக்கு மாறிவிடுகிறது. அவன் எப்படி அடிமையானானோ அப்படி விடுபட்டும் விடுகிறான்.
இங்கு நான் நம்பிக்கைகொண்ட மனதையும் அது அல்லாத வேறு மனதையும் பிரித்துப் பார்க்கிறேன். நம்பிக்கைகொண்ட மனதில் விடுபட வேண்டும் என்ற எண்ணத்தோடு இறையச்சமும் கலந்திருப்பதால் இரண்டும் இணைந்து விடுபடுதலை நோக்கி அவனை உந்தித் தள்ளும் வலுவான காரணியாகி விடுகிறது. தவிர அவனிடம் குற்றவுணர்வு மிகக் கூர்மையாக இருப்பதால் எந்தவொன்றிலும் அவன் நீண்ட நாட்கள் அடிமைப்பட்டு கிடக்க மாட்டான்.
