மலட்டு விவாதம் என்ற தலைப்பில் எகிப்திய எழுத்தாளர் அஹ்மது அமீனின் கட்டுரை ஒன்று இருக்கிறது. தலைப்பே கட்டுரையின் கருவை கச்சிதமாக சொல்லி விடுகிறது. ஒரு விசயத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு, அதன் சாதக, பாதக அம்சங்களை அலசுவதற்கு விவாதங்கள் பயனளிக்கலாம். விவாதத்திற்கான எல்லை இதுதான். இந்த எல்லையில் நின்று, இந்த நோக்கத்திற்காக செய்யப்படும் விவாதம் பயனளிக்கும். இன்னொன்று, விவாதிப்பவர்களுக்கு மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான அம்சங்கள், அடித்தளங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு முடிவை எட்ட முடியும். உண்மையை அறிந்துகொள்வதற்காக செய்யப்படும் விவாதங்கள் நண்பர்களுக்கு மத்தியிலுள்ள நட்பை முறிக்காது, அவர்களிடையே பகைமையை ஏற்படுத்தாது. மாறாக அவர்களிடையே நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கும். சில சமயங்களில் அந்தச் சமயத்தில் உங்கள் கருத்தின் காரணமாக அவர்கள் உங்களை வெறுத்தாலும் நிதான நிலைக்குத் திரும்பியவுடன் உங்களை விரும்புவார்கள். உங்களை நன்றியுடன் நினைவுறுவார்கள்.
மலட்டு விவாதம் என்பது ஒன்றை ஆராயாமல் கொள்கையாக ஏற்றுக் கொண்டு அதற்குச் சாதகமாகவும் எதிர்த்தரப்பினரை வாயடைக்கச் செய்வதற்காகவும் தம்முடைய தரப்பை நிலைநிறுத்துவதற்காகவும் விவாதம் செய்வது. உண்மையில் இது ஒரு வகையான தர்க்கப் போர். முன்முடிவுகளுடன் செய்யப்படும் இத்தகைய விவாதங்கள் எந்தப் பயனையும் அளிக்காது. மாறாக உள்ளங்களில் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தும்; பதற்றத்தை அதிகரிக்கும்; நட்பையும் அன்பையும் முறித்து விடும். இத்தகைய விவாதங்களே மலட்டு விவாதங்கள்.
இஸ்லாம் இத்தகைய விவாதங்கள் விரும்புவதில்லை. இத்தகைய விவாதங்கள் அரசியல் கட்சிகளின் விவாதங்களைப் போன்றவை. தங்கள் கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் சரியானவை, எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் தவறானவை என்ற மையத்தையே அவை சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை முடிவில்லாதவை. தேவையற்ற பிரச்சனைகளை, பகைமையை ஏற்படுத்துபவை.
மனக்கட்டுப்பாடு அற்ற, குறையறிவு கொண்ட மனிதர்களே அதிகம் தர்க்கங்களில் ஈடுபடுவார்கள் என்கிறார் அஹ்மது அமீன். உண்மையில் அவரது இந்தக் கருத்து கவனிக்கத்தக்கது. என்னுடைய அவதானிப்பும் இதுதான். இத்தகைய மனிதர்களுக்கு தர்க்கம் செய்வது ஆர்வமான ஒரு விளையாட்டில் ஈடுபடுவதைப் போன்றது. அவர்களுடன் விவாதிப்பதால் அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். நாம்தாம் பாதிக்கப்படுவோம். நம்முடைய ஆற்றலை, நேரத்தை இழந்து விட்டதற்காக பிற்பாடு வருத்தப்படுவோம்.
