ஒருவர் எப்படிப்பட்டவரோ அதற்கேற்ப அவருக்கான நண்பர்கள் அமைந்து விடுவார்கள் அல்லது அவர் அதற்கேற்ப தமக்கான நண்பர்களை அமைத்துக் கொள்வார். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் மனதளவில் நட்பு கொள்கிறான் எனில் இருவரையும் இணைக்கக்கூடிய பொதுவான ஓர் அம்சம் இருக்கிறது என்று பொருள்.
ஒரு மனிதன் கொண்டிருக்கும் கண்ணோட்டங்களுக்கும் அவனுடைய செயல்பாடுகளுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. ஒரு மனிதனிடம் வெளிப்பட்ட தீய செயல்பாடுகளுக்கும் அவனுக்குத் தோன்றும் வீணான சந்தேகங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. சந்தேகங்களில் இயல்பான சந்தேகங்களும் இருக்கின்றன. வீணான சந்தேகங்களும் இருக்கின்றன. சந்தேகங்கள் ஒட்டுமொத்தமாக தவறானவ்வை அல்ல. ஆனால் வீணான சந்தேகங்கள் ஒரு மனிதனின் நிம்மதியைக் கெடுத்து விடும். அவற்றுக்கும் அவனிடமிருந்து வெளிப்பட்ட தீய செயல்பாட்டிற்கும் தொடர்பு இருக்கத்தான் செய்யும். திருடனுக்கு யாரைப் பார்த்தாலும் திருடனாகத்தான் தெரியும்.
வலுவான, சரியான கண்ணோட்டங்களை நீங்கள் கொண்டிருக்கவிட்டால் துன்பங்கள், சிரமங்கள் வரும்போது துவண்டு போவீர்கள், மிக விரையில் நிராசையடைந்து விடுவீர்கள், வாழ்க்கையின் வெளிச்சம்மிகுந்த பகுதிகளைக் காணாமல் இருட்டையே கண்டு கொண்டிருக்கும் மன நோயாளியாக மாறி விடுவீர்கள்.
ஆச்சரியமான முறையில் இஸ்லாம் வலுவான, மனித இயல்பிற்கு உகந்த சரியான கண்ணோட்டங்களை வழங்குகிறது. அவற்றை உள்வாங்கிக் கொண்ட மனித மனம் நிராசையடைவதில்லை. துன்பங்களின் போதும் சிரமங்களின் போதும் எதிர்கொள்ள முடியாமால் துவண்டு விடுவதில்லை.
பேராற்றல் மிக்க அந்த ஓரிறைவனின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய வாக்குறுதிகளை நம்பி “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே மிகச் சிறந்த பொறுப்பாளன், அவனே மிகச் சிறந்த உதவியாளன்” என்று ஒரு நம்பிக்கையாளன் கூறுவது அவனுடைய வாழ்க்கையில் ஆழமாக தாக்கம் செலுத்துகிறது. அவன் அல்லாஹ்வின் அருளிலிருந்து நிராசையடைவதும் இல்லை, எதிரிகளுக்கு முன்னால் சரணடைந்து விடுவதும் இல்லை. இறுதிவரை போராடுகிறான். வெற்றி, ஷஹாதத் இரண்டில் எது கிடைத்தாலும் தனக்கு நன்மையே என்று கருதுகிறான். ஆகவே அவனும் உலகியல்வாதியும் சமமானவர்கள் அல்ல. இருவரின் கண்ணோட்டங்களும் வெவ்வேறானவை. இருவரும் நிகழ்வுகளைக் காணும் விதமும் வெவ்வேறானவை. ஆகவே இருவரும் அடையும் விளைவுகளும் வெவ்வேறானவை.
