மனிதர்களுக்கு தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. செல்வம், அறிவு, பதவி, அதிகாரம், மதம், சாதி, குலம் என எதையாவது அவர்கள் அதற்குப் பயன்படுத்தவே செய்கிறார்கள். இவையனைத்துக்கும் பின்னால் ஒளிந்திருப்பது தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆதிக்க வெறியே.
சாதியை ஒழித்துவிட்டால் சமத்துவம் நிலைநாட்டப்பட்டுவிடும் என்று எண்ணுவது சரியாகாது என்று நான் கருதுகிறேன். வேறு எதையாவது கொண்டு மனிதர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைவார்கள். செல்வமோ அறிவோ பதவியோ மதமோ அல்ல இங்கு பிரச்சனை. இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவர்களின் ஆதிக்க வெறியும் அதற்குக் காரணமான கர்வமுமே.
பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் மனிதனின் இந்தக் கர்வத்திற்கு எதிராகத்தான் இஸ்லாம் செயல்படுகிறது. அவனது கர்வம் எந்த வடிவில் வெளிப்பட்டாலும் அது அதனை நசுக்க முனைகிறது. இங்கு இஸ்லாம் தானாகச் செயல்படுவதில்லை. அது மிகச் சிறந்த நிவாரணி. ஒரு மனிதன் தன் பலவீனத்தை, தன் நோயை அறிந்து அதற்கு மருந்தாக அவன் இஸ்லாத்தைப் பயன்படுத்தும்போது நிச்சயம் அவன் பரிபூரணமான, பயனுள்ள மனிதனாக வெளிப்படுவான். இஸ்லாத்தை யார் மீதும் திணிக்க முடியாது. அது பலவந்தமாக செயல்படக்கூடிய மார்க்கம் அல்ல.
சீர்குலைவிற்கு எதிராக மிகச்சிறந்த ஒழுங்கை இஸ்லாம் கட்டமைக்கிறது. நிச்சயமாக அது அழிவு சக்திகளுக்கு எதிராகப் போராடும் மாபெரும் ஆற்றல். ஆனாலும் அதனைக் கொண்டும் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முனையும் மனிதர்களும் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட வேண்டும்.
ஷைத்தான் என்பவன் கர்வத்தின் முழு உருவம். அவன் கர்வத்தினால் வெளிப்பட்டவன். அவனுக்குள் இருந்த அடிபணியாத கர்வம்தான் அவனை ஷைத்தானாக – இறையருளிலிருந்து விரட்டப்பட்டவனாக – ஆக்கியது. இந்த ஷைத்தான்கள் மனிதர்களை வழிகெடுப்பதற்கு எந்த வடிவில் வேண்டுமானாலும் தோன்றுவார்கள். வழிகாட்டும் மதகுருக்கள் உருவிலும் அவர்கள் தோன்றலாம். இங்கு தோற்றம் அல்ல அடையாளம். வீங்கிய கர்வமே அடையாளமாகும். அது எந்த வடிவிலும் வெளிப்படலாம்.
