அன்பு என்றால் அது உங்களை மகிழ்விக்கும் என்பது மட்டுமல்ல. சில சமயங்களில் உங்களுக்குச் சிறைச்சாலையாகவும் அமைந்துவிடுவதுண்டு. அதன் மற்றொரு புறம் கோபமும் வெறுப்பும் அதீத உரிமையும் இருக்கின்றன. இங்கு எந்தவொன்றும் இலவசமாகக் கிடைத்துவிடாது. அதற்குப் பகரமாக ஏதேனும் ஒன்றை நீங்கள் வழங்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒன்றை நீங்கள் இழக்க வேண்டும்.
நூறு சதவீதம் எல்லாவற்றையும் பெற்றவர் என்று இங்கு யாரும் இல்லை. அவ்வாறு பெற்றுவிட்டாலும் சராசரி மனிதனின் இன்ப, துன்ப அளவைத் தாண்டி அவர்கள் அதிகப்படியாக வேறெதையும் பெற்றுவிடப் போவதில்லை. சில சமயங்களில் எளிய வாழ்வு சுமைகளற்ற வாழ்வாக அமைந்துவிடுகிறது, அது ஏக்கங்களால் நிரப்பப்படாமல் இருந்தால். சிலருக்கு ஆடம்பர வாழ்வு பெரும் சுமைகளைக் கொண்டதாகிவிடுகிறது. அது அவர்களின் நிம்மதியைக் கெடுத்து விடுகிறது, அவர்கள் அதீத தாகம் கொண்டவர்களாக இருந்தால்.
மனிதர்களிடம் காணப்படும் போட்டியும் பொறாமையும் கர்வமுமே அற்ப பொருட்களை மதிப்புமிக்கவையாக அவர்களுக்குக் காட்டுகின்றன. உண்மையில் அவர்கள் அவற்றைக் கொண்டு பேரின்பம் அடைவதில்லை. ஓரளவுக்கு மேல் எல்லாவற்றின் மீதும் சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. மனம் இல்லாத ஏதோ ஒன்றை எண்ணி ஏங்க ஆரம்பித்து விடுகிறது.
ஆன்மா அடையும் இன்பத்தை எந்த லௌகீக இன்பத்தோடும் ஒப்பிட முடியாது. ஆன்ம இன்பங்கள் அனைவருக்கும் உரியவை அல்ல. அவற்றை நாம் எங்கும் சம்பாதிக்க முடியாது. அவை நம் உள்ளத்திற்கு வழங்கப்பட வேண்டும். ஆன்மா எப்போது இன்பத்தில் திளைக்கிறது? அது தனக்குரிய ஊட்டத்தைப் பெறும்போது. ஆன்மீகப் பாதையில் நாம் எடுத்து வைக்கும் அடிகள் ஆன்ம இன்பத்தை நோக்கி நாம் எடுத்து வைக்கும் அடிகளாகும்.
