என் மனம் அவரிடம் கேட்டது: உங்களை இந்த அளவு அதிகமாக வெளிப்படுத்துகிறீர்களே? அதனால் நீங்கள் பெறும் பயன்தான் என்ன? மக்கள் உங்களைக் குறித்து பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது அதன்மூலம் யாருக்கேனும் பயனளிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
இல்லை, அப்படி எந்த நோக்கமும் இல்லை. எனக்கு பெருமித உணர்வும் இல்லை. அதனால் யாருக்கேனும் பயனளிக்க வேண்டும் என்ற உணர்வும் இல்லை.
அதன்மூலம் என் தனிமையுணர்வை எதிர்த்துப் போராடுகிறேன். அதன்மூலம் என் வெறுமையை நிரப்ப முயல்கிறேன்.
என் வாழ்வின் அர்த்தமற்ற தன்மையும் வெறுமையும் தனிமையுணர்வும் என்னை அச்சுறுத்துகின்றன. அவை கொடும் பிசாசு வடிவில் எனக்கு முன்னால் காட்சி தருகின்றன.
அவற்றுக்கு எதிராகவே நான் மீண்டும் மீண்டும் என்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறேன். நான் தவிர்க்கமுடியாதவன் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறேன்.
அது எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் ஆறுதல். அது எனக்கு நானே ஊட்டிக்கொள்ளும் நம்பிக்கை.
இந்த பெரும் வெளிச்சம் என் அகத்தை கூசச் செய்கிறது. இந்த தேவையற்ற தொடர்புகள் என்னை அவசியமான தொடர்புகளைவிட்டும் துண்டித்து விட்டது.
உண்மையில் இங்கு யாரும் யாருக்கும் முக்கியம் இல்லை. மனிதன் தன்னைத் தவிர வேறு யாரையும் குறித்து அதிகம் சிந்திப்பதில்லை. என்னை அவசியமெனக் கருதும் மனிதர்கள் இரக்கத்தை வெளிப்படுத்தும் சில வார்த்தைகளோடு அல்லது ஒரு எளிய அஞ்சலிக் குறிப்புகளோடு என்னைக் கடந்து விடுவார்கள்.
வாழ்வு எவ்வளவு குறுகியது! இந்த வாழ்வு எவ்வளவு மோசமானது! கடந்து செல்ல வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.
